இருபத்தேழாம் அத்தியாயம்
ஆஸ்தான புலவர்கள்
பராக்! பராக்! இதோ வருகிறார்கள் புலவர் பெருமக்கள்! கவிஞர்
சிகாமணிகள்! தமிழ்ப் பெருங்கடலின் கரை கண்டவர்கள்! அகத்தியனாரின் வழி வந்தவர்கள்!
தொல்காப்பியம் முதலிய சங்க நூல்களைக் கரைத்துக் குடித்தவர்கள்! சிலப்பதிகாரம்
முதலிய ஐம்பெருங் காவியங்களைத் தலைகீழாகப் படித்தவர்கள்!
தெய்வத் தமிழ் மறையான திருக்குறளையும் ஒரு கை பார்த்தவர்கள்!
இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் அறிந்தவர்கள்! இலக்கணம் கூறியதற்கு இலக்கியம்
தெரிந்தவர்கள்! தாங்களே சுயமாகவும் கவி பாட வல்லவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும்
எழுதிய கவிகள் அடங்கிய ஏட்டுச் சுவடிகள் கோடானு கோடி கரையான்களுக்குப் பல்லாண்டு
உயிர் வாழ்வதற்கு உணவாகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
புலவர் பெருமக்கள் அவ்வளவு பேரும் கும்பலாகச் சுந்தர சோழ
சக்கரவர்த்தியின் சந்நிதானத்துக்கு வந்து சேர்ந்தார்கள். "வாழ்க! வாழ்க!
ஏழுலகமும் ஒரு குடையின் கீழ் ஆளும் சுந்தர சோழ மகா சக்கரவர்த்தி வாழ்க!
பாண்டியனை சுரம் இறக்கின பெருமான் வாழ்க! புலவர்களைப் புரக்கும்
பெருமான் வாழ்க! கவிஞர்களின் கதியான கருணை வள்ளல் வாழ்க! பண்டித வத்ஸலராகிய
பராந்தக சக்கரவர்த்தியின் திருப் பேரர் நீடூழி வாழ்க!" என்று
வாழ்த்தினார்கள்.
இந்தக் கோஷங்களையும் கூச்சல்களையும் சுந்தர சோழர் அவ்வளவாக
விரும்பவில்லை. எனினும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், தமது நோயையும் மறந்து, வந்தவர்களை
வரவேற்பதற்காக எழுந்திருக்க முயன்றார்.
உடனே, சின்னப் பழுவேட்டரையர் முன் வந்து, "பிரபு, புலவர்கள்
தங்களைத் தரிசித்து மரியாதை செலுத்திவிட்டுப் போக வந்திருக்கிறார்களேயன்றித்
தங்களுக்குச் சிரமம் கொடுக்க வரவில்லை. ஆகையால் தயவு செய்து தங்களைச் சிரமப்படுத்திக்
கொள்ளக் கூடாது!" என்றார்.
"ஆம், ஆம்! அரசர்க்கரசே! சக்கரவர்த்திப் பெருமானே!
தங்களுக்குச் சிறிதும் சிரமம் கொடுக்க நாங்கள் வந்தோமில்லை!" என்றார்
புலவர்களின் தலைவராகிய நல்லன் சாத்தனார்.
"உங்களையெல்லாம் நெடுநாளைக்குப் பிறகு பார்ப்பதில் எனக்கு மிக்க
மகிழ்ச்சி. அனைவரும் அமர வேண்டும்; சில
பாடல்கள் சொல்லிவிட்டுப் போக வேண்டும்!" என்றார் தமிழன்பரான சக்கரவர்த்தி.
தரையில் விரித்திருந்த ரத்தின ஜமக்காளத்தில் எல்லோரும்
உட்கார்ந்தார்கள். அதுதான் சமயமென்று நமது வீரன் வல்லவரையனும் புலவர் கூட்டத்துடன்
கலந்து உட்கார்ந்து கொண்டான்.
தான் சொல்ல விரும்பியதை முழுதும் சக்கரவர்த்தியிடம் சொல்லாமல்
போக அவனுக்கு மனம் இல்லை. சந்தர்ப்பம் ஒருவேளை மறுபடி கிடைத்தால் சொல்லிவிட்டுப்
போகலாம் என்று எண்ணி உட்கார்ந்தான்.
இதை சின்னப் பழுவேட்டரையர் கவனித்தார். அவருடைய மீசை துடித்தது.
முதலில் அவனை வெளியில் அனுப்பி விடலாமா என்று நினைத்தார். பிறகு, அவன் அங்கே தம்முடைய கண்காணிப்பில் இருப்பதே நலம் என்று
தீர்மானித்தார். எனவே, அவனைப் பார்த்தும் பார்க்காதது போல்
இருந்தார்.
இந்தப் புலவர்கள் சென்ற பிறகு அவனை வெளியே அழைத்துச் சென்று
அவன் மகாராஜாவிடத்தில் சொன்ன செய்தி என்னவென்பதை நன்கு தெரிந்து கொள்ள
விரும்பினார். "அபாயம்! அபாயம்!" என்ற அவனுடைய குரல் அவர் காதில்
இன்னும் ஒலித்துக் கொண்டே இருந்தது.
"புலவர்களே! தமிழ்ப் பாடல்கள் கேட்டு அதிக காலமாயிற்று. என்
செவிகள் தமிழ்ப் பாடலுக்குப் பசித்திருக்கின்றன. உங்களில் எவரேனும் புதிய பாடல்
ஏதேனும் கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்று சக்கரவர்த்தி சுந்தர சோழர் கேட்டார்.
உடனே ஒரு புலவர் சிகாமணி எழுந்து நின்று, "பிரபு! உலகபுரத்தில் தங்கள் திருப்பெயரால்
விளங்கும் சுந்தர சோழப் பெரும்பள்ளியிலிருந்து அடியேன் வந்தேன்.
சிவநேசச் செல்வராகிய தாங்கள் பௌத்த மடாலயத்துக்கு நிவந்தம்
அளித்து உதவியதை இந்தத் தமிழகமெங்கும் உள்ள பௌத்தர்கள் பாராட்டிப் போற்றுகிறார்கள்
தாங்கள் உடல் நோயுற்றிருப்பது அறிந்தது முதல், பிக்ஷுக்கள்
மிக்க கவலை கொண்டு தங்கள் உடல்நலத்துக்காகப் பிரார்த்தனை நடத்தி வருகிறார்கள்.
அந்தப் பிரார்த்தனைப் பாடலை இவ்விடம் சொல்ல அருள் கூர்ந்து அனுமதி
தரவேண்டும்!" என்றார்.
"அப்படியே சொல்லவேணும்; கேட்கக்
காத்துக் கொண்டிருக்கிறேன்" என்றார் சக்கரவர்த்தி.
புலவரும் பின்வரும் பாடலை இசையுடன் பாடினார்.
"போதியந் திருநிழல் புனித! நிற்பரவுதும்
மேதகு நந்திபுரி* மன்னர் சுந்தரச்
சோழர் வண்மையும் வனப்பும்
திண்மையும் உலகிற் சிறந்துவாழ் கெனவே!"
(* அந்நாளில் பழையாறை நகருக்கு நந்திபுரி என்னும் பெயரும் உண்டு.
சில காலத்துக்கு முன்பு சோழ மண்டலம் பல்லவர் ஆட்சியின் கீழ் இருந்த போது நந்திபுரி
என்னும் பெயர் பிரபலமாய் விளங்கியது. ஆகையினாலேயே இந்தப் பழம் பாடலில் நந்திபுரி
மன்னர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது)
பாடலைக் கேட்டதும் புலவர்கள் அத்தனை பேரும்
"நன்று! நன்று!" என்று கூறித் தங்கள் பாராட்டுதலைத் தெரிவித்தார்கள்.
"புத்தர்கள் இவ்வளவு நன்றியுடையவர்களாயிருப்பது
வியப்பு, வியப்பு!" என்றார் ஒரு வீர சைவக்
கவிராயர்.
"ஆம்; அது
வியப்பான காரியந்தான்; உலகபுரம் புத்தமடத்துக்கு நான் செய்த சேவை
மிக அற்பம். அதற்கு இவ்வளவு பாராட்டு வேண்டுமா?" என்றார் மன்னர்.
"சக்கரவர்த்தியின் வண்மைத் திறத்தை
அனுபவித்தவர் யார்தான் என்றென்றைக்கும் நன்றி செலுத்தி பாராட்டாதிருக்க முடியும்? இந்திரனும் சூரியனும் சிவபெருமானும் கூடத் தங்களுடைய வண்மையின்
பயனை அனுபவித்திருக்கிறார்கள்!" என்றார் மற்றொரு புலவர் சிரோமணி.
சுந்தர சோழர் முகத்தில் புன்னகை தவழ, "அது என்ன? இந்திரனும்
சூரியனும் சிவபெருமானும் கூடவா? அவர்கள் எதற்காக
என்னிடம் நன்றி செலுத்த வேண்டுமாம்?" என்று கேட்டார்.
"ஒரு பாடல் சொல்ல அனுமதி தரவேண்டும்!"
என்றார் அப்புலவர்.
"அப்படியே நடக்கட்டும்!" என்றார் மன்னர்.
புலவர் கையில் கொண்டு வந்திருந்த ஓலையைப்
பிரித்துப் படிக்கலுற்றார்:
"இந்திரன் ஏறக் கரி அளித்தார்,
பரிஏ ழளித்தார்
செந்திரு
மேனித் தினகரற்கு,
சிவனார் மணத்துப்
பைந்துகி
லேறப் பல்லக்களித்தார்,
பழையாறை நகர்ச்
சுந்தரச்சோழரை
யாவரொப்பார்கள் இத்
தொன்னிலத்தே!"
பாடலைப் புலவர் படித்து முடித்ததும் சபையிலிருந்த மற்றப் புலவர்கள்
எல்லாரும் சிரக்கம்ப கரக்கம்பம் செய்தும், 'ஆஹாகாரம்' செய்தும், "நன்று!நன்று!"
என்று கூறியும் தங்கள் குதூகலத்தை வெளியிட்டார்கள்.
சுந்தர சோழர் முகமலர்ச்சியுடன், "இந்தப் பாடலின் பொருள் இன்னதென்பதை யாராவது விளக்கிச் சொல்ல
முடியுமா?" என்றார்.
ஒரே சமயத்தில் பலர் எழுந்து நின்றார்கள்.பிறகு நல்லன்
சாத்தனாரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் உட்கார்ந்தார்கள்; நல்லன் சாத்தனார் பாடலுக்குப் பொருள் கூறினார்:--
"ஒரு சமயம் தேவேந்திரனுக்கும் விருத்திராசுரனுக்கும் போர்
நடந்தது. அதில் இந்திரனாருடைய ஐராவதம் இறந்து போய் விட்டது. அதற்கு இணையான வேறொரு
யானை எங்கே கிடைக்கும் என்று இந்திரன் பார்த்துக் கொண்டிருந்தான். கடைசியில்
பழையாறை நகரில் வாழ்ந்த சுந்தர சோழ சக்கரவர்த்தியிடம் அவன் வந்து 'ஐராவதத்துக்கு நிகரான ஒரு யானை வேண்டும்' என்று யாசித்தான்.
'ஐராவதத்துக்கு
நிகரான யானை என்னிடம் இல்லை. அதைவிடச் சிறந்த யானைகள்தான் இருக்கின்றன!' என்று கூறி, இந்திரனைத் தமது
யானைக் கொட்டாரத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே குன்றங்களைப் போல் நின்ற
ஆயிரக்கணக்கான யானைகளைத் தேவேந்திரன் பார்த்துவிட்டு, 'எதைக் கேட்பது?' என்று தெரியாமல்
திகைத்து நின்றான்.
அவனுடைய திகைப்பை கண்ட சுந்தர சோழர், தாமே ஒரு யானையைப் பொறுக்கி இந்திரனுக்கு அளித்தார். 'அந்த யானையை எப்படி அடக்கி ஆளப் போகிறோம்? நம் வஜ்ராயுதத்தினால் கூட முடியாதே!' என்ற பீதி இந்திரனுக்கு உண்டாகி விட்டதைக் கவனித்து
வஜ்ராயுதத்தை விட வலிமை வாய்ந்த ஓர் அங்குசத்தையும் அளித்தார்...
"பின்னர் ஒரு காலத்தில், செங்கதிர்
பரப்பி உலகுக்கெல்லாம் ஒளி தரும் சூரிய பகவானுக்கும் ராகு என்னும் அரக்கனுக்கும்
பெரும் போர் மூண்டது. ராகு, தினகரனை விழுங்கப் பார்த்தான் முடியவில்லை!
தினகரனுடைய ஒளி அவ்விதம் ராகுவைத் தகித்து விட்டது.
ஆனால் சூரியனுடைய தேரில் பூட்டிய குதிரைகள் ஏழும் ராகுவின்
காலகோடி விஷத்தினால் தாக்கப்பட்டு இறந்தன. சூரியன் தன் பிரயாணத்தை எப்படித்
தொடங்குவது என்று திகைத்து நிற்கையில், அவனுடைய
திக்கற்ற நிலையைக் கண்ட சுந்தர சோழர், ஏழு
புதிய குதிரைகளுடன் சூரிய பகவானை அணுகி, 'ரதத்தில்
இந்த குதிரைகளைப் பூட்டிக் கொண்டு சென்று உலகத்தை உய்விக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
தன் குலத்தில் வந்த ஒரு சோழ சக்கரவர்த்தி இவ்விதம் சமயத்தில் செய்த
உதவியைச் சூரியனும் மிக மெச்சினான்.
"பின்னர் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் கைலையங்கிரியில்
திருமணம் நடந்தது. பெண் வீட்டார் கலியாணச் சீர்வரிசைகளுடன் வந்திருந்தார்கள்.
ஆனால் பல்லக்குக் கொண்டு வரத் தவறிவிட்டார்கள். ஊர்வலம் நடத்துவதற்கு எருது
மாட்டைத் தவிர வேறு வாகனம் இல்லையே என்று கவலையுடன் பேசிக் கொண்டார்கள்.
இதை அறிந்த சுந்தர சோழச் சக்கரவர்த்தி உடனே பழையாறை
அரண்மனையிலிருந்து தமது முத்துப் பல்லக்கைக் கொண்டுவரச் சொன்னார். பயபக்தியுடன்
சிவபெருமான் திருமணத்துக்குத் தம் காணிக்கையாக அப்பல்லக்கை அளித்தார்.
அப்படிப்பட்ட சுந்தர சோழ சக்கரவர்த்திக்கு உவமை சொல்லக்கூடியவர்கள் இந்த விரிந்து
பரந்த, அலைகடல் சூழ்ந்த பெரிய உலகத்தில் வேறு யார்
இருக்கிறார்கள்?..."
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சுந்தர சோழ சக்கரவர்த்தி 'கலீர்' என்று சிரித்தார். நோயின் வேதனையினால்
நெடுநாள் சிரித்தறியாத சக்கரவர்த்தியின் சிரிப்பு அவருடைய இணைபிரியாப் பத்தினியான
மலையமான் மகள் வானவன்மாதேவிக்கும் தாதியர்களுக்கும் அரண்மனை வைத்தியருக்கும் கூடச்
சிறிது உற்சாகத்தை அளித்தது.
கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையர் இத்தனை நேரமும் நின்று
கொண்டேயிருந்தவர், சக்கரவர்த்தியைக் கைகூப்பி வணங்கி, "பிரபு! நான் பெரிய தவறு செய்து விட்டேன்; பிழை பொறுத்து மன்னிக்க வேண்டும்!" என்றார்.
"ஆ! தளபதியா பேசுகிறது? நீர்
என்ன பிழை செய்தீர்? எதற்காக மன்னிப்பு? ஒருவேளை இந்திரனுக்கு நான் அளித்த வெள்ளை யானையையும்
சூரியனுக்கு அளித்த குதிரைகளையும் திரும்பப் பறித்துக் கொண்டு வந்து விட்டீரோ?
சிவபெருமானிடமிருந்து சிவிகையையும் பிடுங்கிக் கொண்டு வந்து
விட்டீரோ? செய்யக்கூடியவர்தான் நீர்!" என்று
சுந்தர சோழர் சொல்லி மீண்டும் சிரித்ததும், சக்கரவர்த்தியுடன்
சேர்ந்து புலவர்களும் சிரித்தார்கள்.
எல்லாரையும் காட்டிலும் அதிகமாக வந்தியத்தேவன் சிரித்தான். அதை
சின்னப் பழுவேட்டரையர் கவனித்து அவனை நோக்கிக் கடுமையாக ஒரு பார்வை பார்த்தார்.
உடனே, சக்கரவர்த்தியின் பக்கம் திரும்பிப்
பார்த்துக் கூறினார்:
"அரசர்க்கரசே! நான் செய்த பிழை இதுதான். இத்தனை காலமும் நான்
இவர்களைப் போன்ற புலவர் சிகாமணிகளை தங்களிடம் வரவொட்டாமல் தடை செய்து
வைத்திருந்தேன். அரண்மனை மருத்துவர் சொற்படி செய்தேன். ஆனால் இப்போது அது பிழை
என்று உணர்கிறேன். இந்தப் புலவர்களின் வரவினால் தங்கள் முகம் மலர்ந்தது.
இவர்களுடைய பேச்சைக் கேட்டுத் தாங்கள் வாய்விட்டுச்
சிரித்தீர்கள். அந்த குதூகலச் சிரிப்பின் ஒலியைக் கேட்டு உடைய பிராட்டியின்
(பட்டத்து அரசியை 'உடைய பிராட்டி' என்று
குறிப்பிடுவது அக்காலத்து மரபு) முகமும் தாதியரின் முகங்களும் மலர்ந்தன; நானும் மகிழ்ந்தேன்.
இவ்வளவு குதூகலம் தங்களுக்கு அளிக்ககூடியவர்களை இத்தனை நாள்
தங்கள் சந்நிதானத்துக்கு வரவொட்டாமல் தடுத்தது என்னுடைய பெரும் பிழைதானே?..." என்றார்.
"நன்று சொன்னீர், தளபதி!
இப்போதாவது இதை நீர் உணர்ந்தீர், அல்லவா? 'வைத்தியர் சொல்லுவதை கேட்க வேண்டாம்; புலவர்கள் வருவதைத் தடுக்க வேண்டாம்' என்று உமக்கு நான் அடிக்கடி சொன்னதின் காரணம் தெரிகிறது அல்லவா?" என்றார் சக்கரவர்த்தி.
அரண்மனை வைத்தியர் எழுந்து கைகட்டி வாய் புதைத்து ஏதோ சொல்லத்
தொடங்கினார். அதைச் சுந்தர சோழர் சட்டை செய்யாமல் புலவர்களைப் பார்த்து "இந்த
அருமையான பாடலைப் பாடிய புலவர் யார் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் சொல்ல வேணும்!" என்றார்.
நல்லன் சாத்தனார், "அரசர்க்கரசே! அதுதான் தெரியவில்லை! நாங்களும் அதைக்
கண்டுபிடிக்க முயன்று கொண்டுதானிருக்கிறோம். கண்டுபிடித்து அந்த மாபெரும்
புலவருக்கு 'கவிச் சக்கரவர்த்தி' என்று பட்டம் சூட்டவும் சிவிகையில் ஏற்றி அவரை நாங்கள் சுமந்து
செல்லவும் சித்தமாயிருக்கிறோம். இதுகாறும் எங்கள் முயற்சி பலன் அளிக்கவில்லை"
என்று சொன்னார்.
"அதில் வியப்பு ஒன்றுமில்லை; நாலுவரி
கொண்ட பாடலில் இவ்வளவு பெரும் பொய்களை அடக்கக்கூடிய மகா கவிஞர் தமது பெயரை வெளிப்படுத்திக்
கொண்டு முன்வர விரும்ப மாட்டார்தானே?" என்று மகாராஜா கூறியதும், புலவர்களின்
திருமுகங்களைப் பார்க்க வேண்டுமே!
ஒருவர் முகத்திலாவது ஈ ஆடவில்லை; என்ன
மறுமொழி சொல்லுவது என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை.
இந்த நிலைமையில் நமது வந்தியத்தேவன் துணிச்சலாக எழுந்து, "பிரபு! அப்படி ஒரே அடியாகப் பொய் என்று தள்ளி
விடக்கூடாது. இல்லாத விஷயத்தை சாதாரண பாமர மக்கள் சொன்னால் அது பொய்; இராஜாங்க நிர்வாகத்தில் ஈடுபட்டவர்கள் அவ்விதம் சொன்னால், அது இராஜதந்திர சாணக்கியம்; கவிகள்
அவ்வாறு கூறினால் அது கற்பனை, அணி அலங்காரம், இல்பொருள் உவமை.." என்றான்.
புலவர்கள் அத்தனை பேரும் அவன் பக்கமாகப் பார்த்து "நன்று!
நன்று!" என்று உற்சாகத்துடன் ஆர்ப்பரித்தார்கள்.
சக்கரவர்த்தியும் வந்தியத்தேவனை உற்று நோக்கி, "ஓ! நீ காஞ்சியிலிருந்து ஓலை கொண்டு வந்தவன்
அல்லவா? கெட்டிக்காரப் பிள்ளை! நன்றாக என்னை மடக்கி
விட்டாய்!" என்றார்.
பிறகு சபையைப் பார்த்து, "புலவர்களே! பாடல் மிக அருமையான பாடலாக இருந்தாலும், அதைப் பாடியவரைக் கண்டுபிடிக்க வேண்டிய சிரமமும், அவருக்குக் கவிச்சக்கரவர்த்தி என்னும் பட்டம் சூட்டவேண்டிய
அவசியமும் இல்லை. இதைப் பாடிய புலவரை எனக்குத் தெரியும்.
ஏற்கெனவே அவருடைய சிரஸின் பேரில் தூக்க முடியாத கனமுடைய சோழ
சாம்ராஜ்ய மணிமகுடம் உட்கார்ந்து அழுத்தி கொண்டிருக்கிறது. 'புவிச் சக்கரவர்த்தி', 'திரிபுவனச்
சக்கரவர்த்தி', 'ஏழுலகச் சக்கரவர்த்தி', என்னும் பட்டங்களையும் அந்தக் கவிராயர் சுமக்க முடியாமல்
சுமந்து கொண்டிருக்கிறார்!" என்றார் சுந்தர சோழர்.
இதைக் கேட்ட புலவர்கள் அத்தனை பேரும் ஆச்சரியக் கடலில் முழுகித்
தத்தளித்தார்கள் என்று கூறினால், அதை வாசகர்கள் பொய்
என்று தள்ளி விடக் கூடாது! ஆசிரியரின் கற்பனை, அணி
அலங்காரம், இல்பொருள் உவமை என்று இவ்விதம் ஏதாவது ஒருவகை
இலக்கணம் கூறி ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்!
No comments:
Post a Comment
Let others know your opinions about this post