நண்பர்களே நம்முடைய திரைப்பட இலக்கிய சங்கமத்திற்கு இது பத்தாவது ஆண்டு. கடந்த பத்து ஆண்டுகளாக திரைப்படம் மற்றும் திரைப்படம் சார்ந்த நிகழ்வுகளை தொடர்ந்து நடத்திக்கொண்டு வருகிறோம். திரைத்துறையையும் இலக்கியத்துறையையும் இணைக்கவேண்டும். திரைப்படத்துறையில் ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கவேண்டும் போன்ற எண்ணங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நம்முடைய சங்கமம் தொடர்ந்து வெற்றிகரமாக நடந்து வருகிறது. சிலவிஷயங்களில் நாம்தான் முன்னோடிகளாக இருந்து வருகிறோம்.
அதுவரையில், விருதுபெற்ற படங்கள் அல்லது நல்ல கலைப்படங்கள் என்று போற்றப்பட்ட படங்களுக்கு மட்டும்தான் விழா அல்லது நிகழ்வுகள் நடத்தப்படும். நாம்தான் முதன்முதலில் ஒவ்வொரு மாதமும் வெளிவரும் படங்களிலிருந்து இரண்டு படங்களை தேர்ந்தெடுத்து, ஒரு கலைப்படம் மற்றும் ஒரு கமர்ஷியல் படம் என்று அனைத்து தரப்பிலும் நல்லபடங்கள் என்று நண்பர்கள் தேர்வு செய்த படங்களை எடுத்து, அவற்றிற்கு விமர்சனக்கூட்டங்களும் பாராட்டு விழாக்களும் நடத்தி வந்திருக்கிறோம். அதன்பிறகு நிறைய கல்லூரிகள், நிறுவனங்கள், குழுக்கள் எல்லாம் அதுபோல வெற்றிபெற்ற படங்களுக்கு விழாக்களை எடுப்பதை பார்த்திருக்கிறோம்.
இப்படி வெற்றிகரமாக நடந்துகொண்டிருந்த நமது சங்கமத்திற்கு உண்மையில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதத்தில் பத்தாவது ஆண்டுவிழா நடத்த வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். அதற்கான ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருந்தோம். அந்த விழாவில் ஒரு புது முயற்சியாக நம்முடைய சங்கமத்தின் இலக்கை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வதற்காக திரைப்படத்தைப் போலவே நாவல்களுக்கும் மாதாந்திர நிகழ்வுகளை நடத்தி பாராட்டு விழாக்கள் மற்றும் விமர்சனக் கூட்டங்களும் நடத்தலாம் என்று முடிவு செய்திருந்தோம்.
அதன் ஆரம்பத்தை ஆண்டுவிழாவில் வைத்துக்கொள்ளலாம் என்று கடத்த வருடத்தில் வெளியான நாவல்களில் சிறந்த நாவல்களை தேடும் பணியிலும் ஈடுபட்டு வந்திருந்தோம். அதற்காக நமது நண்பர்களிடம் பரிந்துரைகளையும் பெற்றுக்கொண்டிருந்தோம். ஆனால் கொரானா ஊரடங்கு வந்ததனால் அந்த முயற்சிகள் அனைத்துமே தள்ளிவைக்க வேண்டிவந்தது. இப்போது பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் இந்த வருடத்தில் அந்த நிகழ்வுகளை நடத்த முடியும் என்று தோன்றவில்லை. அரங்கங்களில் ஆண்டுவிழா மட்டுமல்ல மாதாந்திர கூட்டம்கூட நடத்தமுடியாது என்று தோன்றுகிறது.
இந்த சமயத்தில்தான் நமது நண்பர்களும், பல குழுக்களும் ‘சூம்’ போன்ற இணையவழியில் நிகழ்வுகளையும் கூட்டங்களையும் நடத்துவதை பார்த்து வருகிறோம். அதேபோல் நம்முடைய சங்கமத்தையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லலாம் என்று நினைத்தோம். அதன் பலன்தான் ஆன்லைன் சங்கமம்.
எல்லோரும் செய்வதைப்போல் அல்லாமல் சற்று வித்தியாசமாக நண்பர்களிடமிருந்து வீடியோக்களை மின்னஞ்சல் மூலமாக வாங்கி ஒரு கருத்தை விவாதித்து, அதை பதிவேற்றலாம் என்று நினைத்திருந்தோம். அதன்படி இந்த மாதத்திற்கான நிகழ்வுகளையும் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதை நடத்துவதற்கும் ஒருசில தடைகள், அதாவது சந்தேகங்களும் குழப்பங்களும் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது.
இதுவும் ஒரு வழக்கமான நிகழ்வுகளாக மாறிவிடுமோ என்ற சந்தேகம் இருந்து வருகிறது. காரணம் சிறப்பு விருந்தினர்களை அழைக்கவேண்டும், சினிமா அல்லது நாவல் எந்த தலைப்பாயிருந்தாலும் அதைப்பற்றி பேசவைக்க வேண்டும், அதைத்தான் வீடியோவாக பதிவேற்ற வேண்டும் என்றும் நினைத்தோம். ஆனால் புதிய முறையில் ஆன்லைன் சங்கமம் ஆரம்பிக்கும் பொழுது சிறப்பு விருந்தினர்களைவிட அந்த தலைப்பில் விருப்பம் இருக்கும் நண்பர்கள் அனைவரையும் பேசவைக்கவேண்டும் என்ற ஒரு எண்ணம் இருந்தது. அதற்கான முயற்சிகளையும் செய்து வந்திருக்கிறோம்.
ஆனால் மீண்டும் ஒரு பிரச்சினை. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் நிறைய படங்கள் வெளியாகும். அந்த படங்களிலிருந்து இரண்டு படங்களை தேர்ந்தெடுத்து அதற்கு பாராட்டுவிழா அல்லது விமர்சனகூட்டம் வைக்கலாம். அதேபோல் நாவல்களும் நிறைய வெளியாகும். அவற்றிலிருந்து ஒன்றோ இரண்டோ நாவல்களை தேர்வு செய்து பேசலாம். ஆனால் தற்பொழுதைய நிலையில் படங்கள் என்பது ‘ஓடிடி’ போன்ற தளங்களில் ஒன்றோ இரண்டோ மட்டும்தான் வெளியாகிறது. அதேபோல் புத்தகங்களும் ‘கிண்டில்’ போன்ற தளங்களில் ஒன்றோ இரண்டோ மட்டும்தான் வெளியாகிறது.
இவற்றிலிருந்து நல்ல படைப்புகளை தேர்ந்தெடுக்கிறோம் என்று சொன்னால், அது சரியாகும் என்று தோன்றவில்லை. அதனால் இந்த திட்டங்களையும் சற்று தள்ளிவைக்க முடிவு செய்துள்ளோம். முதலில் இந்த ஊரடங்கு முடியட்டும். முழுமையான தளர்வுகள் வரட்டும். அதன்பிறகு வழக்கம்போல படங்களும் புத்தகங்களும் வெளியாக, அப்பொழுது அவற்றிலிருந்து தேர்வு செய்து நம்முடைய நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தலாம்.
தற்பொழுது ஆன்லைன் சங்கமத்தில் ஒரு புது முயற்சியாக, இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான, அவசியமாக இருப்பதால் திரைப்படம் மற்றும் இலக்கியம் சார்ந்த தலைப்புகளில் தொடர் உரை நிகழ்த்தலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். அதன் முதல் கட்டமாக ‘நீங்களும் சினிமா எடுக்கலாம்’ என்ற தலைப்பில் ஒரு தொடர் உரையை ஆரம்பிக்கலாம் என்று உள்ளோம்.
இந்த கொரானா ஊரடங்கு காலத்தில் நான் வழக்கமாக அவ்வப்பொழுது சிறு சிறு வீடியோக்களை இணையதளத்தில் பதிவிட்டு வந்திருக்கிறேன். அதை இந்த கொரானா ஊரடங்கு காலத்தில் மும்மூரமாக செய்து பார்த்தேன். பல வீடியோக்களை பதிவிட்டிருக்கிறேன். கதைகளாக பாடங்களாக சிறப்பு வீடியோக்களாக பல வீடியோக்கள். அதில் ஒன்றிரண்டை என்னுடைய நண்பர்களிடம் பகிர்ந்து அவர்களின் கருத்துக்களையும் அபிப்ராயங்களையும் அறிவுரைகளையும் கேட்டிருக்கிறோம். அதற்கேற்றபடி எல்லாவற்றையும் மாற்றியமைக்க திட்டமிட்டிருக்கிறேன். அதை ஒரு புதிய முறையில், ‘ஃப்ரஷ்’ஷாகவே ஆரம்பிப்பது என்று முடிவு செய்துள்ளோம். அதன் ஒரு பகுதியாகவே ஆன்லைன் சங்கமத்தில் தொடர் உரையை பதிவேற்ற முடிவு செய்துள்ளேன்.
ஆன்லைன் சங்கமம் என்று சொல்லும்போது ஏற்கனவே குறிப்பிட்டது போல ஒரு புது முயற்சியாக நண்பர்கள் அனைவருடைய கருத்துக்களையும் வீடியோக்களாக பெற்று பதிவிட ஆசைப்பட்டோம். இது அதற்கான ஒரு வாய்ப்பாக, ஒரு தளமாக இருக்கும்.
நண்பர்களே, தங்களது கருத்துக்களை சொல்லும்போது ஐந்து நிமிடத்திற்கு மிகாமல் வீடியோவாக பதிவு செய்து மின்னஞ்சலில் அனுப்புங்கள். filmfriendship@gmail.com
என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். அப்படி வரும் வீடியோக்களில், தேர்வு செய்யப்பட்டவை இங்கே பதிவேற்கப்படும். பேச முடியாதவர்கள் எழுத்து வடிவில் அனுப்பவும். இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் அனுப்பி வைக்கவும்.
எல்லாவற்றையும் எழுத்துவடிவில் நமது www.filmfriendship.com தளத்தில் வெளியிட உள்ளோம். கருத்துக்களை அனுப்பும்போது நண்பர்கள் ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ளவும். பிற்காலத்தில் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்பதற்காக இப்பொழுதே சொல்லிவிடுகிறேன்.
தேர்ந்தெடுக்கப்படும் பதிவுகள் மட்டுமே இங்கே பதிவேற்றப்படும். அதை சுருக்கவோ, அதை மற்ற கருத்துக்களுடன் சேர்ந்து கொடுக்கவோ, வாய்ப்பு கிடைத்தால் அச்சு ஏற்றுவதற்கோ சங்கமத்திற்கு உரிமை உண்டு என்பதை மனதில் வைத்துக்கொண்டு உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள். மின்னஞ்சலில் மட்டும் அனுப்புங்கள். இனி நாம் தொடர் உரைக்குள் செல்லலாம்.
No comments:
Post a Comment
Let others know your opinions about this post