நண்பர்களே,
கடந்த இருபத்திஐந்து ஆண்டுகளாக நான் திரைத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஒரு உதவி இயக்குநராக, இணை இயக்குநராக, உதவி எழுத்தாளனாக, எழுத்தாளனாக, இப்படி பல தளங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பணியாற்றி வந்திருக்கிறேன். இந்த காலகட்டங்களில் நான் பெற்ற அனுபவங்களையும், பார்த்து, படித்து, கேட்டு தெரிந்துகொண்ட விஷயங்களையும் என்னுடைய நண்பர்களுக்கு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
இந்த காலகட்டங்களில் ஒரு சில புத்தகங்களையும் நான் எழுதியிருக்கிறேன். அவற்றில் திரைத்துறை சார்ந்து திரைப்படம் தயாரிப்பாளர்களின் கலை (Cinema, the Art
of Producers) என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறேன். மேலும் பல விஷயங்களை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டிருக்கிறேன்.
பொதுவாகவே திரைத்துறையை சார்ந்த எந்த ஒரு விஷயத்தையும் நான் என்னுடைய பாணியில் ஒரு மாற்றுப்பார்வையில் பார்ப்பது உண்டு. அதனாலேயே பல விஷயங்களிலும் மற்றவர்கள் பார்ப்பதைவிட வித்தியாசமான ஒரு எண்ணம் எனக்கு இருக்கிறது. இதையெல்லாம் எடுத்துச் சொல்லவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் இதற்கு மத்தியில் என்னுடைய முதல் படத்தை நானே தயாரித்து இயக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்திருக்கிறேன்.
அதை எடுத்து முடித்தபின் ஒரு இயக்குநராக, தயாரிப்பாளராக இந்த விஷயங்களை எல்லாம் சொல்லலாம் என்று ஆசைப்பட்டிருந்தேன். ஆனால் அந்த படத்தை ஆரம்பிக்கும் தருவாயில்தான் இந்த கொரானா ஊராடங்கு வந்து எல்லா திட்டங்களையும் தள்ளி வைக்கும்படி செய்து விட்டது. இனி இந்த ஊராடங்கெல்லாம் முடிந்தபின்னர்தான் என்னுடைய படவேலைகளை ஆரம்பிக்க முடியும்.
அதற்கு மத்தியில் இந்த ஊரடங்கை நல்லமுறையில் பயன்படுத்த சில விஷயங்களை வீடியோக்கள் மூலமாக சொல்லலாம் என்று முயற்சி செய்தேன். கதைகள், பாடங்கள் என பலவற்றையும். அதனுடன் சேர்ந்து நம்முடைய திரைப்பட இலக்கிய சங்கமத்தின் சார்பில் நடத்தும் ஆன்லைன் சங்கமம் என்ற பெயரில் ஒரு தொடர் உரையால் சில விஷயங்களை சொல்லலாம் என்று முடிவு செய்தேன்.
அப்படி முடிவெடுத்தபோது முதலில் வந்;த எண்ணம்தான் இந்த ‘நீங்களும் சினிமா எடுக்கலாம்’ என்கிற தலைப்பு. காரணம் தற்பொழுது கொரோனா ஊரடங்கு முடியும் தருவாயில் இருக்கிறது. தியேட்டர்கள் மீண்டும் திறக்க வாய்ப்பு இருப்பதாக தியேட்டர் சங்க நிர்வாகிகளே சொல்லியிருக்கிறார்கள். அது எப்படியோ அடுத்தமாதம் முதல் தேதி அல்லது அதற்கு அடுத்தமாதம் தியேட்டர்கள் திறக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மீண்டும் சினிமா பழையதுபோல் சகஜநிலைக்கு வந்துவிடும்.
இந்த ஊரடங்கு காலத்தில் ஒதுங்கியிருந்த திரைத்துறையினர், முக்கியமாக தயாரிப்பாளர்கள் எல்லோருமே படம் எடுக்க முன் வருவார்கள். புதியதாக நிறைய பேர்; வருவார்கள். ஏனென்றால் இந்த ஊரடங்கு காலத்தில் ‘ஓடிடி’ போன்ற தளங்களைப்பற்றி நிறைய பேர் பேசியிருக்கிறார்கள். நிறைய பேர் அதைப்பற்றி அறிந்திருக்கிறார்கள். அதன் மீது ஒரு ஆசை வந்திருக்கிறது. சிறிய பட்ஜெட், மீடியம் பட்ஜெட் போன்ற படங்களுக்கு ஒரு தளமாக இருக்கும் என்கிற ஒரு நம்பிக்கை இருக்கிறது. இந்தகாரணங்களால் நிறைய புதிய ஆட்கள் திரைத்துறைக்கு வர வாய்ப்புகள் இருக்கிறது. ஏற்கனவே திரைத்துறையில் இருப்பவர்கள் புதிய பாணியில், ஒரு புத்துணர்ச்சியுடன் படங்களை ஆரம்பிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த சமயத்தில் நான் சொல்லவேண்டிய விஷயங்களை, சொல்ல நினைத்த விஷயங்களை சொல்லாமல் இருப்பது நல்லதல்ல என்று எனக்கு தோன்றியது. இப்பொழுது இந்த சமயத்தில் சொல்வதுதான் சரியாக இருக்கும் என்றும் தோன்றுகிறது. அது சொல்வது என்னுடைய கடமை என்றுகூட எனக்கு தோன்றுகிறது. அதனால்தான் இந்த தலைப்பு!
‘நீங்களும் சினிமா எடுக்கலாம்’ என்ற தலைப்பில் அனைவருக்குமாக சில விஷயங்களை சொல்லலாம் என்று முன்வந்திருக்கிறேன்.
இந்த தொடர்உரை யாருக்காக என்று கேட்டால் இது திரைத்துறையை சார்ந்த அனைவருக்குமானது. புதியதாக வருபவர்களுக்கு! எப்பொழுதுமே சினிமாவுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது. நிறைய துறைகளிலிருந்து ஊடகங்களிலிருந்து சினிமாவை நோக்கி நிறைய பேர் வந்துகொண்டே இருப்பார்கள். அப்படி புதியதாக வரும் ஒவ்வொருவருக்கும் சொல்லவேண்டிய விஷயமாக நான் இதை நினைக்கிறேன். திரைத்துறையில் வாய்ப்பை தேடிக்கொண்டு இருப்பவர்களும், வாய்ப்பு கிடைத்து படங்களை எடுத்துக்கொண்டு இருப்பவர்களும், அந்த படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களும் இப்படியாக ஏற்கனவே திரைத்துறையில் இருப்பவர்களுக்கும் இந்த விஷயங்களை சொல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
சிலர் கல்லூரிகளிலும் இன்ஸ்டியு+ட்டுகளிலும் சினிமாவைப் பற்றி அதாவது விஷூவல் கம்யு+னிகேஷன், பிலிம்கோர்ஸ் போன்றவற்றை படித்துக்கொண்டு சினிமாத்துறையில் நுழையலாம் என்று இருக்கிறார்கள். அப்படி படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் இந்த விஷயத்தை சொல்லலாம் என்று ஆசைப்படுகிறேன்.
நிறையபேர் ஐடி போன்ற கம்பெனிகளில் வேலை செய்துகொண்டு அல்லது வேறு கம்பெனிகளில் வேலை செய்துகொண்டு, வேறு வேறு வியாபாரங்கள் செய்து கொண்டு, அப்படியே சினிமாவில் நுழையலாம் என்று ஆசைப்பட்டுக்கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
நிறைய திறமைசாலிகள் தங்களது திறமைகளை எப்படியாவது சினிமாவில் காட்டிவிடலாம் என்று ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்கும் இது பொருத்தமாக இருக்கும்.
தங்களது திறமைகளை காட்ட, சினிமா மீது இருக்கும் மோகத்தை காட்ட, அந்த ஆசைகளை காட்ட குறும்படங்கள் போன்ற படங்கள் அல்லது டாக்குமென்டரி, இப்படி ஏதோ ஒரு விதத்தில் தங்களது திறமைகளை காட்ட நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இதை சொல்ல ஆசைப்படுகிறேன்.
மொத்தத்தில் சினிமாவை நேசிக்கும் அனைவருக்குமாக இதை சொல்ல விரும்புகிறேன்! ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்!
“இங்கே நான் சினிமாவில் வாய்ப்பு தேடுவதற்கான வழிகளை சொல்ல விரும்பவில்லை. வாய்ப்பை உருவாக்குவதற்கான ஒருவழியை மட்டும்தான் சொல்ல விரும்புகிறேன்”.
எல்லோரையும் படம் எடுக்க அழைக்கிறேன். ஒவ்வொருவரும் திரைப்படத்துறையில் தங்கள் சொந்தக்கால்களில் நிற்க வழிகாட்டுவதற்கு என்னால் முடிந்த சிறு முயற்சியை செய்ய நினைக்கிறேன்.
ஒருமுறை உங்கள் திறமையை சினிமாவில் காட்டிவிட்டால் அதன்பிறகு பெரிய வாய்ப்புகளும் வெற்றிகளும் தானாகவே வந்துவிடும். அந்த முதல் வாய்ப்பு நாமே உருவாக்குவதற்கான வழியைத்தான் இங்கே நான் சொல்ல விரும்புகிறேன். அதற்கான தன்னம்பிக்கையை ஊட்ட, நம்பிக்கை பெற இதனால் செய்யமுடியும் என்று நான் நம்புகிறேன்.
அந்த விஷயங்களை, நான் பார்த்து, கேட்டு, படித்து அனுபவித்த விஷயங்களை ஒரு மாற்றுப்பார்வையில் பார்த்து புரிந்துகொண்ட விஷயங்களை, கொஞ்சம் அழுத்தமாக எல்லா நண்பர்களுக்கும் புரியவைக்கும் விதமாக சொல்ல ஆசைப்படுகிறேன். இது உங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பி நம்முடைய உரைக்குள் செல்கிறேன்..
No comments:
Post a Comment
Let others know your opinions about this post