Saturday, 27 July 2019

சிறப்புத் திட்ட அறிமுகம்



வணக்கம்..

“செய்தற்க அல்ல செயக்கெடுஞ் செய்தற்க
செய்யாமை யானும் கெடும்.”
திருக்குறள் 47-வது அதிகாரம், தெரிந்து செய்வகை, குறள் எண் 466..

இதன் எளியகுறள்
“செய்யத்தகாதது செய்தால் கெடும் செய்யத்தக்கது
செய்யாது விட்டாலும் கெடும்.”

நண்பர்களே இப்பொழுது நான் எடுக்கப்போகும் படத்தைப்பற்றி என்னுடைய சிறப்பு திட்டம் ஸ்பெஷல் ப்ரொஜக்ட் பற்றி சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இதைப்பற்றி இதற்கு முன்பாக ஒரு ஐந்து நிமிட வீடியோவாக பதிவு செய்து இதே சேனலில் போட்டிருந்தேன். அப்பொழுது ஒரு நண்பர் சொன்னார் “இப்போதெல்லாம் ஒரு ஐந்து நிமிடத்திற்கு வீடியோ எல்லாம் பார்ப்பதற்கு யாருக்குமே நேரம் இல்லை” என்று. அதனாலேயே அந்த ஐந்து நிமிட வீடியோவிற்கு ஐம்பது செக்கண்டில் ஒரு ட்ரைலரை பதிவு செய்து போட்டிருந்தேன். இதை எல்லாம் பார்த்த சில நண்பர்கள் இந்த திட்டத்தை பற்றி கேட்க ஆரம்பித்தார்கள். அதில் முக்கியமாக நான்கு கேள்விகள் வந்துகொண்டிருக்கிறது. இதைப்பற்றி கொஞ்சம் விரிவாக இப்போது பேச விரும்புகிறேன். 
இந்த திட்டத்தை பற்றி பேசுவதற்கு முன்பாக முதலில் என்னைப்பற்றியும், திரைத்துறைக்கும் எனக்குமான தொடர்பு பற்றியும், 9 ஆண்டுகளாக நான் தொடர்ந்து நடத்தி வரும் திரைப்பட இலக்கியச் சங்கமத்தை பற்றியும், நான் எழுதிய திரைப்படம் தயாரிப்பாளர்களின் கலை என்ற புத்தகத்தை பற்றியும் சொல்லவேண்டி இருக்கிறது. ஆனால் அதற்கான நேரம் இப்பொழுது இல்லை. அவற்றைப்பற்றி நான் தனித்தனியாக விரிவாக பேசுகிறேன். விருப்பமுள்ள நண்பர்கள் அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். இப்பொழுது இந்த திட்டத்தை பற்றியே பேச விரும்புகிறேன்.
நண்பர்கள் கேட்ட நான்கு கேள்விகள்..
ஒன்று, இது எதற்காக அல்லது ஏன்?
இரண்டாவது, யாருக்காக அல்லது யாரெல்லாம் இதில் இணையலாம்?
மூன்றாவது, இது எப்படி நடைபெறுகிறது?
நான்காவது, இதில் இணைவதனால் என்ன லாபம் அல்லது என்ன கிடைக்கும்?
முதல் கேள்வி, எதற்காக அல்லது ஏன்?
நண்பர்களே நம்முடைய சமூகத்தில் குறிப்பாக தமிழ் மக்களைப்பற்றி குறிப்பிடும்போது ஒரு சொல்லாடல் அவ்வப்போது கேட்பதுண்டு. “சினிமாகாரனை நம்பி நாட்டையே கொடுப்பார்கள் ஆனால் வாடகைக்கு ஒரு வீட்டைகூட கொடுக்கமாட்டார்கள்”.
இது உண்மை. நாட்டை கொடுப்பார்கள் ஆனால் ஒரு சினிமாகாரன் வாடகைக்கு வீடு தேடிப்போனால் கிடைப்பது மிகவும் கஷ்டம். இன்னும் ஒரு படி மேலே போனால் பெண் பார்க்கப்போனால் அவன் சினிமாகாரன் என்றால், அவன் சினிமாவில் வாழ்கிறான் என்றால், அவன் சினிமாவை நம்பித்தான் வாழ்கிறான் என்றால் பெண் கிடைப்பது மிகவும் அரிது. இதற்கெல்லாம் காரணம் சினிமா ஒரு நிரந்தர பணி அல்ல என்று எண்ணுவதாலும், அந்த சினிமாவில் ஒரு நிரந்தரமான ஒரு வருமானம் இல்லை என்பாதாலும்தான். இது உண்மையும் கூட. மாற்று கருத்து இல்லை.
இருந்தாலும் சினிமாவை நோக்கி தினந்தோறும் நூற்றுக்கணக்கான கலைஞர்கள், திறமைசாலிகள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இன்று நேற்றல்ல, சினிமா ஆரம்பித்த காலத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் வருவார்கள். அப்படிப்பார்த்தால் இதுவரையிலும் லட்சக்கணக்கான கலைஞர்கள், திறமைசாலிகள் இந்த திரைத்துறையை நோக்கி வந்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் எல்லோரும் வெற்றிபெற்றிருக்கிறார்களா என்று கேட்டால் அதன் பதில் ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கும். திரைத்துறையில் பலவிதமான மக்கள் வருகிறார்கள். கலை ஆர்வம் கொண்டு தங்களுக்கு திறமை இருக்கிறது தங்களால் வெற்றிபெற முடியும் என்று வருகிறார்கள்.
சினிமா ஒரு லாட்டரி டிக்கெட் மாதிரிதான். ஒரு சிலபேர் மட்டும்தான் முதல் பரிசை வெல்வார்கள். அதை பார்த்துவிட்டு லட்சக்கணக்கான மக்கள் பரிசு சீட்டை தொடர்ந்து வாங்கிக்கொண்டிருபார்கள். சினிமாவும் அப்படித்தான். ஒரு சிலர் வெற்றி பெறுவார்கள். பெயர், புகழ், பணம் என்று அனைத்தையுமே  பெறுவார்கள். அல்லது பெற்றுவிட்டது போல ஒரு தோற்றம் எல்லோருடைய முன்பிலும் இருக்கும். அதை நம்பி லட்சக்கணக்கான கலைஞர்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பார்கள். தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருப்பார்கள். இதுதான் நிஜம். இதைப்பற்றி எல்லாம் எல்லோரும் பேசுகிறார்களா என்றால் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
திரைத்துறையில் இருப்பவர்கள் உதாரணத்துக்கு கோடம்பாக்க தெருக்களில் டீக்கடைக்கு முன்பாக அல்லது நண்பர்கள் சந்திக்கும் வேளையில் இதைப்பற்றி பேசுவார்கள். ஒவ்வொருவரும் இதைப்பற்றி பேசுவார்கள். “எனக்குமட்டும் வாய்ப்பு கிடைக்கட்டும், நான் வெற்றி பெறட்டும் இந்த சிஸ்டத்தையே மாற்றுகிறேன், உதவி இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் இதில் கஷ்டப்படும் அனைவருக்குமான ஒரு சிஸ்டத்தை உருவாக்குவேன், கதை வங்கி உருவாக்குவேன்.” அப்படி இப்படி என்று பல விஷயங்களை பேசுவார்கள். இதில் ஒரு சிலபேர் வெற்றியும் பெற்றுவிடுவார்கள். வெற்றி பெற்றபின்பு மீண்டும் மேடையில் அவர்கள் இதையேதான் பேசுவார்கள். பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதைத்தவிர அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு என்ன செய்தார்கள் என்றால் அதுவும் ஒரு கேள்விக்குரியாகத்தான் எனக்குப் படுகிறது.
எனக்கு தெரிந்தவரையில் இப்படி சில விஷங்கள் பல வருடங்களுக்கு முன்பாகவே என் மனதிலும் ஒரு கேள்வியாக எழுந்தது. அப்போது கொஞ்சம் கூடுதலாக கவனிக்க ஆரம்பித்தேன். நம்மால் இதற்கு ஏதாவது விடை காணமுடியுமா என்று. அப்படி கூர்ந்து கவனிக்கும்போது பல பிரச்சினைகள் தெரிய ஆரம்பித்துவிட்டது. அதுவும் சினிமாவை எல்லோரும் பார்க்கும் பார்வையிலிருந்து விடுபட்டு ஒரு மாற்றுப்பார்வையில் பார்த்தால் பல பிரச்சினைகளும் வேறுவிதமாக இருக்கிறது. அதற்கான தீர்வுகளும் வேறுவிதமாக தெரியும்.
இதையெல்லாம் செய்வதற்கு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது நான் பணியாற்றிய என்னுடைய இயக்குனர்கள். உதவி இயக்குநராக, இணை இயக்குநராக, எழுத்தாளனாக, ஏன் சினிமாவில் நான் கோஸ்ட் ரைட்டராக, சென்சர்ஸ்க்ரிப்ட் எழுதும் ரைட்டராக கூட பணியாற்றி இருக்கிறேன். பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்.
அப்படி நான் பணியாற்றிய இயக்குனர்கள் அனைவருமே இயக்குநர்கள் மட்டுமல்ல தயாரிப்பாளர்களும் கூட. இது என்னுடைய பாக்கியம். அதனாலேயே பல விஷயங்களையும் என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது. அப்படி கடந்த 23 வருடங்கள் கிடைத்த அனுபவங்களையும் பாடங்களையும் வைத்துக்கொண்டு திரைப்படம் தயாரிப்பது எப்படி, திரைப்படத் தயாரிப்பு 2014 என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுத முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தேன். அப்பொழுது என்னுடைய குருநாதர் ராமநாராயணன் அவர்கள் அதை பார்த்து அதற்கு முன்னுரை தருவதாக சொன்னார். அந்த புத்தகத்தை செழுமைபடுத்துவதற்கு சில அறிவுரைகளையும் சொன்னார். அவரின் அறிவுரைப்படி சில விஷயங்களை சேகரித்துக்கொண்டு வருவதற்குள் காலம் அவரை திருப்பி கூட்டிச்சென்று விட்டது. அதனால் அந்த பணிகளை சற்று விலக்கி வைத்துவிட்டு சில நாட்களுக்குப் பிறகு திரைப்படம் தயாரிப்பாளர்களின் கலை என்ற வடிவத்தில், பெயரில் அந்த கருத்துக்களை மேலும் செழுமைப்படுத்தி ஒரு புத்தகமாக வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தேன்.
ஆனால் அதை வெளியிடுவதற்கு மனம் ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் சில விஷயங்களை நாம் சொன்னால் கேட்பவர்கள் அதை ஏற்பார்களா என்பது உறுதி கிடையாது. அவர்கள் ஏற்கவேண்டும் என்றால் சில விஷயங்களை நாம் எடுத்துச் சொல்லவேண்டியிருக்கும். செயல் முறையில் நடத்திக்காட்ட வேண்டியிருக்கும். இதுவும் அப்படிப்பட்ட ஒரு விஷயம் என்றுதான் எனக்குப்பட்டது. அதனால் அந்த கருத்துக்களின் அடிப்படையில் ஒரு தயாரிப்பு முறையை உருவாக்கி, அப்படி ஒரு படத்தை எடுத்து காட்டவேண்டும் என்று முடிவு செய்தேன்.
அப்படி எண்ணும்போது என் மனதில் இருந்த முதல் இலக்கு ‘பொன்னியின் செல்வன்’ நாவல்தான்! சிறிய வயதிலிருந்தே நிறைய புத்தகங்களை படித்தாலும் என்னை மிகவும் பாதித்த, என்றும் என் மனதில் இருக்கும் புத்தகங்கள், மூன்றுதான். ஒன்று திருக்குறள், இரண்டாவது பொன்னியின் செல்வன், மூன்றாவது மலையாளத்தில் இரண்டாம் ஊழம் என்ற புத்தகம். அந்த இரண்டாம் ஊழம் என்ற புத்தகம் இப்போது திரைப்படமாக ஆக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருப்பதாக கேள்விப்படுகிறேன்.
திருக்குறள் எனக்கு புரியாத விஷயம். நான் ஒரு மலையாளி. நான் கல்வி கற்றதும் மலையாளத்தில் தான். தமிழை என்னுடைய ஆர்வத்தில்தான் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு என் பிள்ளைகளை கூட தமிழ்வழியில் படிக்க வைத்தேன், வெற்றிபெற்றேன். அதெல்லாம் வேறு விஷயம். ஆனால் திருக்குறளை புரிந்துகொள்ள என்னால் முடியாததனால் ஒவ்வொரு குறளாக படித்து, அதற்ககான உரையை படித்து, எனக்காக எழுதி வைக்க ஆரம்பித்தேன். ஒரு வித்தியாசமாக இருக்கட்டுமே என்று குறள் வடிவிலேயே, இந்தக்கால தமிழில் அதற்கு உரை எழுதி வைத்தேன். நண்பர்கள் அறிவுரைப்படி அதை ‘திருக்குறள் எளியகுறள்’ என்ற பெயரில் ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறேன். அது மேலும் திருத்தங்களை செய்து செம்மைப்படுத்தி மீண்டும் வெளியிடுவதற்கு தயாராக இருக்கிறேன்.
மூன்றாவதான புத்தகம் ‘பொன்னியின் செல்வன்’. சிறிய வயதிலிருந்தே அதை படிக்கும்போதெல்லாம் இதை திரைப்படமாக பார்க்கவேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, அந்த புத்தகத்தை படிக்கும் லட்சக்கணக்கான வாசகர்களுக்கும் இருக்கிறது. எல்லா சினிமாக்காரர்களுக்கும் இருக்கிறது.  நமக்கே தெரியும் மறைந்த முதல்வர், நம்முடைய புரட்சித்தலைவர், அதன் பிறகு கமலஹாசன் போன்ற பல கலைஞர்களும் இந்த நாவலை படமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் ஏனோ சில பல காரணங்களால் அவர்களால் அதை எடுக்க முடியவில்லை.
இந்த நேரத்தில் ஒரு திரைக்கதை எழுத்தாளன் என்ற முறையில் ‘ஸ்க்ரீன்ப்ளே ஸ்பெஷலிஸ்ட்’ என்று சொல்லும் அளவுக்கு திரைக்கதையில் ஆர்வமுள்ள நான் இந்த பொன்னியின் செல்வன் நாவலுக்கும் ஒரு திரைக்கதையை எழுதி வைத்தேன். அதை படமாக்குவதற்காக நண்பர்களை சந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில்தான் திரு மணிரத்னம் அவர்கள் இதை படமாக எடுக்கிறார் என்ற செய்தி கிடைத்தது. அதனால் என்னுடைய பணியை சற்று தள்ளிவைத்திருக்கிறேன். அவர் படம் எடுத்து முடிந்தபின் நாம் மீண்டும் எடுப்போம். எடுப்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஆயிரம் கோடி அளவுக்கு பட்ஜெட் இருக்கக்கூடிய, மூன்று பாகங்களில் இந்த படத்தை எடுக்க வேண்டுமென்றால், அப்படிப்பட்ட ஒரு பிரமாண்டமான படத்தை எடுக்கவேண்டுமென்றால், தற்பொழுது என்னால் முடியாது என்று உங்கள் அனைவரையும் விட எனக்கே நன்றாக தெரியும். அவ்வளவு பெரிய இலக்கு. அந்த இலக்கை எட்ட வேண்டுமென்றால் அதை நோக்கிய ஒரு திட்டப்பாதையை உருவாக்கி, அதன் வழியாக பயணிக்க வேண்டும் என்று தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கிறேன்.
அதாவது பொன்னியின் செல்வனுக்கு முன்பாக ஒரு பெரிய பட்ஜெட் படம், அதாவது ஹீரோ படம், அதற்கு முன்பாக ஒரு மீடியம் பட்ஜெட் படம், அது ஹீரோயின் சப்ஜெக்ட் படமாகக்கூட இருக்கலாம். அதற்கு முன்பாக  ஒரு சின்ன பட்ஜெட் படம், அதற்கு முன்பாக  மிகச்சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு பயணித்துகொண்டிருக்கிறேன்.  இதற்கு இணையாகவே செயல்முறை சினிமா பயிலகம்  institute of practical cinema என்ற நிறுவனத்தை உருவாக்கி தொடர்ந்து நடத்தி வரவேண்டும்.
அப்படி, படிப்படியாக வளர்ந்து வந்தால் அந்த பெரிய இலக்கை எட்டமுடியும் என்பது உறுதி. அதுதான் என்னுடைய திட்டமும். அப்படி ஒரு புதிய முறையில் ஒரு இலக்கை எட்டும் பொழுது அந்த புத்தகத்தில் குறிப்பிட்டபடி பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அது இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஆனால் இதையெல்லாம் ஆரம்பிப்பதற்கு முன்பாக இதையெல்லாம் என்னால் செய்யமுடியும் என்று நம்ப வைப்பதற்காக, ஒரு நம்பிக்கை மற்றவர்களுக்கு கொடுப்பதற்காக, தன்னம்பிக்கையை எனக்குள் வளர்ப்பதற்காக ஒரு சின்ன பட்ஜெட் படம் உண்மையை சொன்னால் பட்ஜெட்டே இல்லாத ஒரு படத்தை தற்பொழுது எடுக்க முடிவு செய்துள்ளேன். அதுதான் இந்த திட்டம்.
அந்த படத்திற்கு உண்மையில் பட்ஜெட் கிடையாது. எனக்கு இருக்கும் ‘குட்வில்’லை பயன்படுத்தி நண்பர்களின் ஒத்துழைப்புடன் இந்த படத்தை ஒரு குறிப்பிட்ட செலவுடன் எடுக்க முடிவு செய்துள்ளேன். அதற்காக நண்பர்களை நாடியுள்ளேன். நண்பர்களும் மற்றவர்களும் தரும் உதவிதான் இதனுடைய பட்ஜெட். அதை வைத்துத்தான் இதை ஆரம்பிக்கப் போகிறேன்.
அதன் முதல் கட்ட படப்பிடிப்பு, பஸ்ட் ஷெட்யூலை, விரைவில் எடுக்க உள்ளேன். அதன் பிறகு அந்த படத்தை எடிட் செய்து, முடிந்தவரை எடுத்துக்காட்டி பிறகு தொடர்ந்து முறையாக ஒரு கூட்டுத்தயாரிப்பில் தொடர்ந்து நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளேன். அந்த கூட்டுத்தயாரிப்பின் வழியாகத்தான் நம்முடைய திட்டப்பாதையில் இருக்கும் ஒவ்வொரு படமாக எடுக்க முடிவு செய்துள்ளேன்.
இது ஒரு ‘ஒன் டைம் வண்டராக’ இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். இதில் நான் வெற்றி பெறவேண்டும் வெற்றிபெறுவேன் என்ற எனக்கு இருக்கிறது. என்னை பின்பற்றும் நண்பர்களும் இந்த வழியை பின்பற்றுவார்கள். அனைவரும் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையில் தான் நான் இதை செய்து கொண்டிருக்கிறேன்.
அடுத்த கேள்வி இது யாருக்காக, இதில் யாரெல்லாம் இணைந்து கொள்ளலாம்?
வாய்ப்பைத்தேடி திரை உலகில் சுற்றிக்கொண்டிருக்கும் அனைவருமே இதில் இணையலாம். வாய்ப்பு கிடைத்து வெற்றியைத்தேடும் அனைவரும் இதில் இணைந்து கொள்ளலாம். சினிமாவைப்பற்றி அறிந்துகொள்ள நினைப்பவர்கள், தெரிந்துகொள்ள நினைப்பவர்கள் அவர்களும் இதில் உடன் பயணிக்கலாம். இந்த படத்தின் வேலைகளில் உடன் பயணித்தே எல்லாம் கற்றுக்கொள்ளலாம். சினிமாவை கற்றுக்கொள்ள வேண்டும், அதன் வழியாக வெற்றிபெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
நடிகர்கள் இதில் இணையலாம். காரணம் திரைப்படம், நாடகம் போன்ற பிராக்டிக்கலான விஷயங்களில் எப்படி நடிப்பது என்பதை இந்த திட்டத்தின் மூலமாக தெரிந்துகொள்ள முடியும். எங்கேயுமே தியரி என்ற சொல்லக்கூடிய விஷயங்கள் மிகவும் குறைவு. செயல்முறை மட்டும் தான். அதனால் இதில் இணைந்து கற்றுக்கொள்ளலாம்.
எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், மாணவர்கள் மற்ற இன்ஸ்டிட்யூட்டில் எல்லாம் படித்து வருபவர்கள். ஏனென்றால் முன்பெல்லாம் வாய்ப்பு தேடி வருபவர்கள் தங்களுக்குள் ஒரு கலை ஆர்வம் இருக்கும், திறமை இருக்கும் அதை காட்டலாம் என்றுதான் வருவார்கள். பின்பு படித்தவர்கள் வர ஆரம்பித்தார்கள். இப்பொழுது இதற்கென்றே, திரைத்துரைக்கென்றே படிக்கும் விஸ்காம் போன்ற படிப்புகள் இருக்கின்றன. அதை படிப்பவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலர் வாரிசுகளாக வருகின்றனர். ஏற்கனவே வெற்றிபெற்றவர்களின் வாரிசாக திரைத்துறைக்கு வருகிறார்கள். இப்பொழுது குறும்படங்களை எடுத்து நிறையப்பேர் தங்களை எடுத்துக்காட்டிகொண்டு திரைத்துறைக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். விஸ்காம் அல்லாத மற்ற எல்லா படிப்புகள் படித்த மாணவர்களும் குறும்படத்தை எடுத்து வந்துகொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட குறும்பட படைப்பாளிகளும் இந்த திட்டத்தில் இணையலாம்.
திரைப்படத்தை விரும்புபவர்கள், நீங்கள் எந்த பணியிலும் இல்லை. ஆனால் திரைப்படத்தை பார்க்க விரும்புபவர்கள், திரைப்படத்தை பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், திரைப்பட விரும்பிகளும் இதில் இணைந்து கொள்ளலாம். மற்றும் நண்பர்களும் இதில் இணைந்து கொள்ளாம்.
இதற்கு ஒரு துணை கேள்வி வரும். “இது யாருக்கெல்லாம் பொருந்தாது, யாரெல்லாம் இணைய முடியாது”?
ஏற்கனவே வெற்றிபெற்றவர்கள். ஒரு விதத்தில் பார்த்தால் அவர்கள் செட்டிலானவர்கள். அவர்கள் இனிமேல் வாய்ப்பு தேடவேண்டிய, வெற்றியை தேடவேண்டிய அவசியம் இருக்காது. அவர்களுக்கு இது பொருந்தாது. தேவையில்லை. அடுத்தது “நானாகத்தான் பேசாமல் இருக்கிறேன். இல்லையென்றால், நான் நினைத்திருந்தால், நான் இப்போதே ஒரு படம் எடுப்பேன், தயாரிப்பாளர்களை கன்வின்ஸ் செய்திருப்பேன், நான் படம் முடித்து மார்கெட்டிங் செய்திருப்பேன், வெற்றிபெற்றிருபேன்” என்று சொல்லக்கூடிய எல்லாம் தெரிந்த நண்பர்களுக்கும் இது பொருந்தாது.
அடுத்தது “இதெல்லாம் நடக்காதுப்பா, இதெல்லாம் எப்படி நடக்கும்? நடைமுறைக்கு இதெல்லாம் சாத்தியமே இல்லை” என்று சொல்லும் எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள். நெகட்டிவ் தாட்ஸ் இருக்கிற நண்பர்கள் கண்டிப்பாக இதில் இணையத்தேவையில்லை. காரணம் எதிர்மறை எண்ணம் இந்த நெகட்டிவ் தாட்ஸ் இருப்பவர்களை கூட்டிக்கொண்டு இதுபோன்ற ஒரு முயற்சியில் ஈடுபடுவது மிகவும் கஷ்டம். அதனால் அது தேவையில்லை. அடுத்தது “சரிப்பா நீ கதையை சொல்லு.. கதையை கேட்டபிறகு இதில் இணைந்து கொள்கிறேன்” என்று சொல்கிற நண்பர்களும் தற்பொழுது இதில் இணையத்தேவையில்லை.
காரணம் ஒரு கதையை சொல்லி, ஒரு தயாரிப்பாளரை கன்வின்ஸ் செய்து, நான் படம் எடுப்பது என்றால்,  எப்பொழுதோ நான்  இயக்குநராகி, படம் எடுத்து வெற்றி பெற்றிருப்பேன். அப்படிப்பட்ட ஒரு  வழக்கத்தை மாற்றவேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே! அதை பற்றிய கூடுதல் விபரங்கள் , மற்ற விஷயங்கள் எல்லாம் மற்ற பதிவுகளில் திரைப்படம் தயாரிப்பாளர்களின் கலை அல்லது அதுபோன்ற கேள்விகளுக்கு பதிலாக வரும்பொழுது சொல்கிறேன். இப்பொழுது அதற்கான நேரம் கிடையாது.  
மூன்றாவது கேள்வி, இது எப்படி நடைமுறை படுத்தப்படும்? என்பது.
இது ஒருவிதமான க்ரவுட் பண்டிங் முறைதான். ஆரம்பத்தில் நம்முடைய லட்சியம் தயாரிப்பாளர்களின் கூட்டுத் தயாரிப்பு என்பதுதான். அதன் வழியாகத்தான் நம் திட்டப்பாதையில் இருக்கும் ஒவ்வொரு படைப்புகளையும் எடுத்துக்கொண்டு நம்முடைய இலக்கை நோக்கி செல்ல முடிவு செய்துள்ளோம். ஆனால் ஆரம்பம் வழக்கமான ஒரு க்ரவுட் பண்டிங்கால் தான் எடுக்கவேண்டி இருக்கிறது. ஆனால் அதிலும் ஒரு வித்தியாசத்தை நாம் காட்டுகிறோம். எல்லோரும் செய்யும் க்ரவுட் பண்டிங் முறையில் இருந்து சற்று வித்தியாசமாக நாம் ஆரம்பிக்க உள்ளோம்.
முதலில் என்னை நானே இதில் கமிட் செய்யவேண்டும். நண்பர்களிடமிருந்து ஒரு நம்பிக்கை வரவேண்டும். குறுகிய வட்டத்தில் இருக்கும் நண்பர்களிடமிருந்து ஆரம்பித்து அதன் பிறகு மற்றவர்களிடம் சென்று விரிவாக ஒரு கூட்டுத் தயாரிப்பாக வளர்த்த வேண்டும் என்பதுதான் இதனுடைய இப்பொழுதைய நிலைமை.
இந்த முதல் கட்ட படப்பிடிப்பு நடத்தியப்பிறகு ஒரு சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்ய உள்ளது. அதாவது இதைப்பற்றிய அறிமுகம் மற்றும் பயிலரங்கம். இதுவரை எடுத்ததைப்பற்றியும், இதுவரை நடந்ததைப்பற்றியும் எல்லாம் அதில் விளக்கப்பட்டு, இனி என்ன செய்யப்போகிறோம், எப்படி எடுக்கப்போகிறோம் என்பதைப்பற்றியும் விளக்கமாக அதில் அனைவருக்கும் தயாரிப்பாளர்களாக இருந்தாலும், மாணவ தயாரிப்பாளர்களாக இருந்தாலும், புரவலர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும் அனைவருக்கும் இது தெளிவுபடுத்தப்படும்.
அப்படி தெளிவுபடுத்தப்பட்ட பின்பு இப்பொழுது முதலீடாக செய்யும் பணத்தை எல்லாம் தொடர்ந்து வரும் அடுத்த கட்ட கூட்டுத் தயாரிப்பில் முதலீடாக முறையாக ஆரம்பிக்கப்படும். ஒருவேளை திருப்தி இல்லையென்றால் இப்பொழுது தரும் பணம் திருப்பித்தரப்படும். இந்த திட்டத்தில் அன்றாடம் நடக்கும் விஷயங்களை பற்றியும், அல்லது சந்தேகங்களை பற்றியும்,  மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில்களும் எல்லாமே தொடர்ந்து இதே சேனலில் சங்கமம் டெலி விஷன் (Youtube/Sangamam Tele Vision) என்கிற இந்த சேனலில் தொடர்ந்து பதிவு செய்யப்படும். இதில் படிக்க விரும்பும் நண்பர்கள் பிலிம் ப்ரன்ஷிப் டாட்காம் (filmfriendship.com) என்கிற என்னுடைய வலைதளத்தில் இதைப்பற்றி எல்லாம் படித்துக்கொள்ளலாம். இந்த வலைதளத்திலும் இந்த சேனலிலும் நான் சொன்னபடி என்னைப்பற்றியும் என் புத்தகங்களை பற்றியும் அல்லாது கூடவே பொன்னியின் செல்வன் தொடர்கதையும் வந்துகொண்டிருக்கிறது. அதையும் நண்பர்கள் பார்க்கலாம் கேட்கலாம். நண்பர்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அதை கமன்ட் செய்தால் போதும் அதற்கான விடை அடுத்த பதிவில் கண்டிப்பாக சொல்லப்படும்.
இனி நான்காவது கேள்வி. இந்த திட்டத்தில் இணைவதால் என்ன லாபம். என்ன கிடைக்கும்?” என்று ஒரு கேள்வி.
நண்பர்களே ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக நீங்கள் முதலீடு செய்தால் அதை நான் கணக்கில் வைத்துக்கொள்ள இப்பொழுது கஷ்டமாக இருக்கும். தனிமனிதனாக இந்த பிரச்சினை இருப்பதனால் அதை ஒரு நன்கொடையாகத்தான் பார்க்கமுடியும்.
ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேலும் முதலீடு செய்பவர்களுக்கு அடுத்த கட்டமாக நான் சொன்ன அந்த சிறப்பு சந்திப்பு பயிலரங்கத்தில் ,ஒரு நாள் பயிலரங்கத்தில் அனுமதி சீட்டு வழங்கப்படும்.
ஐயாயிரம் ரூபாயும் அதற்கு மேலாகவும் முதலீடு செய்பவர்களுக்கு 20 சதவீதம் லாபம் தரப்படும். அதாவது ஐயாயிரம் ரூபாய் முதலீடு செய்தால் ஆறாயிரமாக திருப்பித்தரப்படும். இது இந்த திட்டத்திற்கு மட்டும்தான். தொடர்ந்து வரும் கூட்டு தயாரிப்புகளுக்கு இது பொருந்தாது. அது பிறகு நடைமுறையில் பேசி விளக்கம் பின்னர் அறிவிக்கப்படும். இப்பொழுது 20 சதவீதம் லாபம் வழங்கப்படும்.
ஐம்பதினாயிரம் ரூபாயும் அதற்கு மேலும் முதலீடு செய்பவர்களின் பெயர்கள் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர்கள் என்று டைட்டிலில் வரும்.
ஐந்துலட்சமோ அதற்கு மேலோ முதலீடு செய்பவர்களின் பெயர்கள் அல்லது பேனர்கள் இணை நிறுவனங்களாக கோ-பேனர்சாக இந்த படத்தின் விளம்பரங்கள் அனைத்திலுமே இடம்பெறும்.
இதையெல்லாம் சொல்லும்போது நான் ஏதோ திரைத்துறைக்காக சில தியாகங்களை செய்துகொண்டிருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். அப்படியெல்லாம் கிடையாது. நானும் வளரவேண்டும் நல்லதும் செய்யவேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய எண்ணம். என்றுமே சிறுவயதிலிருந்தே.. அதையேதான் இங்கும் கடைப்பிடிக்கிறேன். அதுவுமில்லாமல் சுயநலம் இல்லாத பொதுநலம் அதிக நாள் நீடிக்காது என்பதுதான் என்னுடைய எண்ணம். அதனால் இதிலும் ஒரு சுயநலம் இருக்கிறது. உதாரணத்துக்கு ஒரு நூறு இணை தயாரிப்பாளர்கள் இந்த திட்டத்தில் இணைந்தால், இந்த படம் முடிவதற்குள் அனைத்தையும் உடன் இருந்து கற்றுக்கொண்டால், நூறுபேர் வேண்டாம், அதிலிருந்து ஒரு இருபத்தி ஐந்து பேராவது தொடர்ந்து திரைப்பட தயாரிப்பில் ஈடுபடுவார்கள் அல்லவா. அப்படி இருபத்தி ஐந்து பேர் வந்து அதில் ஒரு ஐந்து பேராவது தொடர்ந்து என்னுடன் தொடர்பு கொள்வார்கள் அல்லவா.,, ஒரு திரைக்கதை எழுத்தாளர் என்ற முறையில் நம்முடைய இலக்கில் ஒரு இலக்கு எழுத்தாளர் ஆகவேண்டும் என்பது. அந்த இலக்கிற்கு இது பயன்படும் அல்லவா... அதுதான் என்னுடைய சுயநலம், லாபம்.
இந்த திட்டத்தில் இணைவது வழியாக திரைப்படங்களை பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம் என்பதுதான் மற்றவர்களுக்கு லாபம். மற்றபடி பெயரும் இந்த லாபமும் எல்லாம் ஒரு இணைதான். இணை லாபம் தான். இதைப்பற்றி சொல்லும்போதுதான் நான் முதலில் சொன்ன குறள். அந்த குறள் சொல்வதற்கு காரணம் இதுதான்.
“செய்யத்தகாதது செய்தால் கெடும் செய்யத்தக்கது
செய்யாது விட்டாலும் கெடும்.”
இதுதான் வள்ளுவன் சொன்னது. நான் இதைப்பற்றியெல்லாம் தெரிந்துகொண்டு, இப்படியெல்லாம் ஒரு திட்டம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று புரிந்துகொண்டு, ஒரு புத்தகத்தை எழுதிக்கொண்டு, எல்லாம் செய்துவிட்டு, நான் எதையும் செய்யாமல் விட்டால், அதுவும் ஒரு கேடாகத்தான் விளையும் என்பது எனக்கு புரிகிறது.
அப்படி வள்ளுவன் சொன்னதை கேட்டுத்தான் நான் இதில் இறங்கி உள்ளேன். நிறைய நண்பர்கள், நலம் விரும்பிகள் என்னை அறிவுறுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். “எதற்கு இந்த வம்பு? எதற்கு இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறாய்?. பேசாமல் ஓரு ப்ரொட்யூசரிடம் கதை சொல், டைரக்டர் ஆவு, சம்பாதி, அதற்குப்பிறகு இதையெல்லாம் பண்ணலாமே” என்று கூட சொல்லியிருக்கிறார்கள்.
நான் பிடிவாதமாக அதை மறுத்திருக்கிறேன். இதைப்பற்றி சொல்லும்போதுகூட இரண்டு தயாரிப்பாளர்கள் இதன் மொத்தமும் நாங்கள் செலவு செய்கிறோம் என்று சொன்னார்கள். நான் அப்பொழுதும் சொன்னேன் “இல்லை இந்த படத்திற்கு நான்தான் தயாரிப்பாளர், மற்றவர்கள் எல்லோரும் இணை தயாரிப்பாளர்கள்” என்றுதான் சொல்லியிருக்கிறேன். அவ்வளவு பிடிவாதமாக இருப்பதற்கு காரணம் அந்த வள்ளுவன் சொல்தான்.
கண்டிப்பாக இதில் நான் வெற்றிபெறுவேன். என்னுடன் பயணிக்கும் அனைவருக்கும் வெற்றி கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். ஒரு கனவை நோக்கி ஒரு புது முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். திரைப்படத்தைப் பற்றி, சினிமாவைப்பற்றி கற்றுக்கொள்ள ஆசைப்படும் நண்பர்கள் மாணவ தயாரிப்பாளர்களாக இணைந்துகொள்ளுங்கள். உங்களுக்கு லாபம் இல்லை. நீங்கள் பீசும் தரவேண்டாம். உடன் பயணித்து அனைத்தையும் கற்றுக்கொள்ளலாம்.
அல்லது இதில் ஓரளவாவது சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் இருந்தால் இணை தயாரிப்பாளராக இணைந்துகொள்ளுங்கள். அந்த லாபத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
இல்லை நல்ல ஒரு விஷயம் அதை ஊக்கப்படுத்தலாம் என்று நினைத்தால் புரவலர்களாக இணைந்து கொள்ளுங்கள். உங்களுக்கான லாபம் என்னுடைய திரைப்பட இலக்கிய சங்கமம் போன்ற பல நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்திக்கொள்கிறேன்.
இது எதுவும் வேண்டாமப்பா உனக்கு வேண்டுமா உனக்கு என்னால் என்ன செய்யமுடியும் நான் அதை செய்கிறேன் என்று எனக்கு உதவி செய்யும் மனமுள்ள நண்பர்கள்.. நண்பர்களாகவே இதில் இணைந்து உதவி செய்யுங்கள்...
நான் கண்டிப்பாக வெற்றிபெற்று அதற்கான மரியாதையை உங்களுக்கு தருகிறேன்.
நன்றி வணக்கம்.


அன்புடன்
கமலபாலா பா.விஜயன்

Note: The investment & benefits for the investors noted in this article are temporary for the time being. This will be changed and fixed after the 1st Schedule shoot.




No comments:

Post a Comment

Let others know your opinions about this post