நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்
என்று யாருக்கும் தெரியாது
ஆனா சரியான நேரத்தில்
வரவேண்டிய விதத்தில் வந்துவிடுவேன்..
நான் யாருக்கும் அந்நியமானவன் அல்ல
எல்லோருக்கும் சொந்தமானவன்
என்னை ஆரம்பத்தில் யாருக்கும்
பிடிக்காமல் இருக்கலாம்
சிலருக்கு மட்டும் ஏதோ ஒரு
காரணத்திற்காக பிடித்திருக்கலாம்
ஆனால்
எனக்கு எல்லோரையும் பிடிக்கும்..
பிடித்தவன் பிடிக்காதவன்
படித்தவன் படிக்காதவன்
உயர்ந்தவன்
தாழ்ந்தவன்
என்ற எந்த வித்தியாசமும்
நான் பார்ப்பதில்லை..
நான் தாமதமாக வருகிறேன் என்றோ
சற்று முன்னதாகவே வந்துவிடுகிறேன் என்றோ
பலர் நினைக்கலாம்
அது அவரவர்கள் என்னை பார்க்கும்
பார்வையை பொறுத்தது..
என்னைப்பற்றி எல்லோருக்கும்
தெரிந்திருக்கிறது
நான் கண்டிப்பாக வருவேன் என்றும்
புரிந்திருக்கிறது
இருந்தும் ஏன் பயப்படுகிறீர்கள்!
அதுவும் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு விதமாக
பயப்படுகிறீர்கள்!
நீங்கள் பயப்படுவதால் நான்
வராமல் போய்விடுவேனா என்ன?
உங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ
உங்கள் எல்லோரையும் சந்திக்க
நான் வரத்தான் போகிறேன்
அப்போது நீங்கள் என்னை
ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்
அது உங்கள் தலையெழுத்து!
ஆன்மீகவாதிகள் என்றும்
பகுத்தறிவுவாதிகள் என்றும்
தங்களை முன்நிறுத்துபவர்கள்
கடவுள் உண்டா இல்லையா என
எதிர்வாதம் புரிந்துகொண்டே இருப்பார்கள்
ஆனால் என்னை அந்த இரு தரப்பினரும்
ஏற்றுக்கொள்ளத்தான் போகிறார்கள்!
காரணம் இறுதிவெற்றி எனக்குத்தான்
என்பது அவர்களுக்கு தெரியும்..
நான்
உங்கள் ஊரில் பணக்காரன் அல்ல
யாருக்கும் வேலைக்காரன் அல்ல
எவருக்கும் எஜமான் அல்ல
மனிதனாய் பிறந்தவன் அல்ல
மன்னனாக இறப்பவன் அல்ல..
நானே
மண்ணில் எங்கும் நிறைந்தவன்
மரணம் இல்லா ஒரே ஒருவன்
உயிர்களுக்கு எல்லாம் முடிவானவன்
உயிர்களை என்றும் மறவாதவன்!
(நான்கு மாதத்திற்குள் மூன்றாவது முறையாக மரணம், அதைத் தொடர்ந்த சடங்குகள் என ஊருக்கு சென்றுவந்த நேரத்தில், கடைசியாக மாமியாரின் மரணத்திற்குப் பின் பதினோராவது நாள் சடங்குகளை முடித்து திரும்பும்போது ரயில பயணத்தில் தோன்றியதை, ரயிலேயே குறித்து வைத்திருந்தேன். அதை திருத்தாமல், மாற்றியமைக்காமல் அப்படியே இங்கு பதிவு செய்கிறேன்..)
No comments:
Post a Comment
Let others know your opinions about this post