Monday, 9 October 2017

யார் தமிழன்...?






வெகுநாட்களாகவே இந்த கேள்வி என் மனதில் இருந்து வந்தது. அதுவும் சினிமாவில் பணியாற்றவேண்டும் என்ற ஆவலுடன் இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன்னால் சென்னைக்கு வந்த நாளிலிருந்து இந்த கேள்வி சற்று அதிகமாகவே மனதை துளைத்துக்கொண்டிருந்தது. ஒரு வேளை மலையாள சினிமா பக்கம் செல்லலாம் என்று திருவனந்தபுரத்திற்கோ, கொச்சிக்கோ வண்டி ஏறியிருருந்தால் இந்த கேள்வி அவ்வளவாக எழுந்திருக்காது. (எழுத்தாளன் என்ற முறையில் இவ்வளவு காலம் இத்தனை கஷ்டங்களை அனுபவிக்கவும் வேண்டி இருந்திருக்காது). ஆனால் என்ன செய்வது, சிறுவயதிலிருந்தே மலையாளத்தைவிட தமிழ் மீது பற்றுவைத்து விட்டதால் அப்படி செல்ல எண்ணம் தோன்றவில்லை.
அதன்பிறகு குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் வேளையில்தான் இது சார்ந்த பிரச்சினைகள் எழ ஆரம்பித்தன. குழந்தைகளை ஆங்கிலவழி கல்வியில் சேர்க்க வேண்டும் என்பது குடும்பத்தினர் அனைவருடைய அறிவுரை. நான் அதற்கு சம்மதிக்கவில்லை. ஏன் தமிழில் சேர்க்கக் கூடாதுஎன்று நான் திருப்பி கேள்வி எழுப்பினேன். வழக்கம் போல எல்லோரும் சொல்லும் பதில்கள் தான் எனக்கும் கிடைத்தன. ஆங்கிலத்தில் படித்தால்தான் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நல்லது, ஆங்கிலத்தில் பேசினால் தான் மரியாதைபோன்ற பதில்கள். நான் அவற்றை ஏற்கவில்லை.
குறைந்த பட்சம் நம்ம தாய்மொழியான மலையாளத்தில் சேர்த்துவிடு பணப்பற்றாக்குறை என்றால் நான் உதவி செய்கிறேன்போன்ற அறிவுரைகளை சொந்தக்காரர்களும் பந்தக்காரர்களும் சொல்லும்போது எந்த அளவுக்கு மனதை வருந்தச் செய்தது என்பதை வார்த்தைகளால் சொல்லமுடியாது. அதையும் தாண்டித்தான் இரு குழந்தைகளையும் தமிழ்வழி பள்ளிகளிலேயே சேர்த்து படிக்க வைத்தேன்.
அப்போதும் யார் தமிழன்?” என்ற கேள்வி ஆழமாகவே துளைத்தெடுத்தது. (இது அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும். யார் மலையாளி, யார் தெலுங்கன் என்று கேட்டாலும் பொருள் ஒன்றுதான்.) தமிழுக்காக தங்கள் உயிரையே கொடுப்பேன் என்று பேசி அதிகாரத்தை குறிவைக்கும் அரசியல் வாதிகளின் வீட்டுப் பிள்ளைகள் ஆங்கில வழிப்பள்ளியில் தான் படிக்கின்றனர் என்ற உண்மையை அறிந்தபோது உண்மையிலேயே குழம்பித்தான் போனேன். நான் தவறு செய்துவிட்டேனோ என்று பயப்பட ஆரம்பித்தேன்.
அதனாலேயே குழந்தைகளின் படிப்பு விஷயத்தைவிட அவர்களை நல்லவர்களாக வளர்க்கும் எண்ணத்தில் மிகவும் கவனமாக இருந்தேன். எங்கேயாவது தவறு நடந்தால், ஏன் சரியாக படிக்காமல் சாதாரணமாக மதிப்பெண் வாங்கினால் கூட நாங்க அப்பவே சொன்னோம் இல்லே, நீதான் பசங்க வாழ்க்கையை கெடுத்திட்டேஎன்று உறவினர்களும் நண்பர்களும் சொல்லுவார்கள் என்று பயந்துகொண்டே காலத்தை கடத்தினேன்.
நல்லவேளை! இரண்டு பிள்ளைகளும் (மகளும் மகனும்) படிப்பலும் சரி ஒழுக்கத்திலும் சரி எந்த குறையும் வைக்காமல் தங்கள் பங்கிற்கு உதவி செய்தார்கள். (மகன் தந்தைக்காற்றும் உதவி..)
இப்பொழுது மகள் வேலைக்கு செல்ல ஆரம்பித்து, மகன் விஞ்ஞான ஆராய்ச்சி படிப்பிற்காக வெளிநாடு சென்ற பிறகு வருடங்களாக மனதில் இருந்த கேள்விக்கு ஒரு விடை கிடைத்ததுபோல் ஒரு சந்தோஷம்.
யார் தமிழன்?” - தமிழ்நாட்டில் பிறந்தவர்களா, தமிழில் பேசுபவர்களா, தமிழால் வளர்ந்தவர்களா, தமிழைவைத்து பிழைப்பு நடத்துபவர்களா, தமிழுக்காக எதையும் செய்வேன் என்று சொல்பவர்களா.. இந்த வகைகளில் எத்தனையோ பேர் இருக்கின்றனர். அவர்களில் தமிழை உண்மையில் மதிப்பவர்கள், தமிழை உண்மையில் நம்புபவர்கள் எத்தனை பேர்?
இவர்கள் உண்மையில் தமிழை மதித்திருந்தால், தமிழில் கல்வி கற்பதால் எதிர்காலத்தில் எந்த குறையும் வராது, தமிழில் படித்தவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நம்புவகர்களாக இருந்தால், எதற்கு இவர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக்கல்வியில் படிக்கவைக்கிறார்கள்?
அப்படியென்றால் இவர்கள் யாரும் உண்மையான தமிழர்கள் அல்ல என்பதுதானே சரி! அதாவது யாரும் ஒரு தமிழனாகவோ மலையாளியாகவோ தெலுங்கனாகவோ பிறப்பதில்லை. பிறந்த இடமோ, வாழும் இடமோகூட அதை தீர்மானிப்பதில்லை. ஒரு மொழியின் மீது பற்றுவைத்து, அந்த மொழியை அடுத்த தலைமுறைக்கு நம்பிக்கையுடன் கொண்டுசெல்பவன்;தான் அந்த மொழிக்காரன். அந்த வகையில் என் தகப்பனார் ஒரு மலையாளிதான். ஏனென்றால் அவர் என்னை மலையாளத்தில் தான் படிக்கவைத்தார். ஆனால் நான் ஒரு தமிழன் தான்! ஏனென்றால் நான் என் குழந்தைகளை தமிழில் தான் படிக்க வைத்துள்ளேன். இதை நான் பெருமையாகவே சொல்கிறேன்.
(“நீங்கள் பிழைப்புக்காக வந்ததால் உங்கள் தாய்மொழியை ஒதுக்கிவைத்துவிட்டு தமிழை படிக்க வைத்தீர்கள்என்று ஒரு நண்பர் ஒரு முறை என்னிடம் சொன்னார். அப்படியென்றால் தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்து, தமிழ்நாட்டிலேயே பிழைத்துக்கொண்டிருக்கும் இவர்கள் ஏன் தங்கள் பிள்ளைகளை தமிழ்வழியில் சேர்ப்பதில்லை? தமிழ்வழியில் படித்தால் குழந்தைகளில் எதிர்காலம் நன்றாக இருக்காது, என்று தமிழை குறைத்து மதிப்பிடுவதால்தானே. அதன்படி பார்த்தால் தங்கள் பிள்ளைகளை தமிழ்வழிப் பள்ளியில் படிக்கவைத்துக்கொண்டிருக்கும் மக்கள் மட்டுமே உண்மையான தமிழர்கள். அவர்கள் கேரளத்திலோ, கர்நாடகாவிலோ, டெல்லியிலோ, வெளிநாட்டிலோ எங்கே இருந்தாலும் அவர்கள் மட்டுமே தமிழர்கள். மற்றபடி தமிழ்நாட்டில் பிறந்ததனாலேயே யாரும் இங்கு தமிழர்கள் ஆவதில்லை.
(அதிலும் தமிழ், தமிழ் தேசியம் என்று வாய்கிழிய பேசிவிட்டு தங்கள் குழந்தைகளை ஆங்கிலவழிக்கல்வியில் படிக்கவைப்பவர்களை என்ன சொல்வது? தங்கள் மனைவி, அப்பா, அம்மா அல்லது நண்பர்கள் சொன்னார்கள் என்று காரணம் சொல்பவர்களை நான் இந்த விஷயத்தில் மதிப்பதில்லை. நெருங்கிய உறவுகளான அவர்களையே சொல்லி புரியவைக்கமுடியாத இவர்களா தமிழ் பற்றுக்கொண்டு மற்ற தமிழர்களுக்கு அறிவரை சொல்ல வருகிறார்கள்! அது ஒரு கேவலமான அரசியல். யாராவது என்னுடைய இந்த எழுத்திற்கு பதில் சொல்ல விரும்பினால், தங்கள் பிள்ளைகளை தமிழ்வழிப் பள்ளியில் படிக்கவைப்பவர்கள் மட்டும் சொல்லுங்கள். ஏதாவது தவறு இருந்தால் நான் திருத்திக்கொள்கிறேன். அல்லாதவர்கள் சூடு, சொரணை, தன்மானம், உண்மையில் கொஞ்சமாவது தமிழ்பற்று இருந்தால் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழிப்பள்ளியிலிருந்து விலக்கி தமிழ்ப்பளளியில் சேர்த்துவிட்டு அப்புறமாக வந்து பதில் சொல்லுங்கள்.)

இதற்காகவே முகநூலில் நான் தான் தமிழன்என்ற பெயரில் ஒரு குழுமத்தை ஆரம்பித்துள்ளேன். இதில் தங்கள் வீட்டு குழந்தைகளை தமிழ் வழியில் படிக்கவைக்கும் நண்பர்கள் மட்டுமே இணைந்திடுங்கள்.. (பார்ப்போம், நண்பர்களில் எத்தனை பேர் உண்மையான தமிழர்களாக இருக்கிறார்கள் என்று..!)

No comments:

Post a Comment

Let others know your opinions about this post