தரமணி - பாராட்ட ‘வேண்டிய’ படமா? பாராட்டை ‘பெறுகின்ற’ படமா? பாராட்டுக்கு ‘உரிய’ படமா?
நேற்று (18-8-17) நமது திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் சார்பில் தரமணி படத்திற்கு ஒரு விமர்சனக் கூட்டம் நடத்தினோம். நேரலையாக காட்சிப் பதிவு செய்ய நினைத்திருந்தது சில காரணங்களால் வழக்கம் போலவே கலந்துரையாடலாக நடந்தது. நல்ல வேளை அந்த நிகழ்வைப்பற்றி திரு ராஜா சுந்தரராஜன் அவர்கள் விரிவாக எழுதியிருப்பதால் நானும் அதைப்பற்றி எழுத தேவையில்லாமல் போய்விட்டது. அவருக்கு நன்றி!
நிகழ்வில் பேசிய கேபிள் சங்கர், தயாரிப்பாளர் சங்கர், எழுத்தாளர் சுகுமார் மற்றும் வந்த சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.
நிகழ்வில் நான் குறிப்பிட்டு பேசிய தரமணி படத்தைப்பற்றிய என்னுடைய பார்வையை நான் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த படத்திற்கு தனியாக ஒரு கூட்டத்தை நடத்துவதற்கு தூண்டுதலாக இருந்தது இரண்டு விஷயங்கள்தான். ஒன்று நண்பர் வா.கீரா! அவர்தான் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்று முகநூலில் பதிவிட்டார். இரண்டாவது ஆனந்தவிகடனில் இந்த படத்திற்கு வந்த விமர்சனம்! அந்த பத்திரிக்கைக்கு ஒரு மரியாதை உண்டு. (நிறையபேர் அதில் வரும் விமர்சனத்தை நம்புகிறார்கள். அதை மறுக்க முடியாது!) அதே போன்ற பல பத்திரிக்கைகள், ஊடகங்கள் மற்றும் நண்பர்களின் பாராட்டுப் பத்திரங்கள்!
தரமணி படம் வெறுமெனே பார்த்துவிட்டு கடந்து செல்லக்கூடிய படம் அல்ல. அதனால்தான் இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் இந்த அளவு கருத்துக்கள் வருகின்றன. அதற்கு காரணம் அந்த படம் மட்டுமல்ல, அதை எடுத்த இயக்குநர் ராம் என்ற பிம்பத்திற்கு இங்கு உள்ள ‘ஸ்டார் வால்யூவும்’ தான் என்பதையும் யாரும் மறுக்க முடியாது.
இந்த படத்தின் மிகப்பெரும் ஈர்ப்பு சக்தியாக இருப்பது அதன் நாயகி ஆண்ட்ரியாதான். ஆத்யா என்ற வேடத்தில் அவர் மிகவும் பொருந்தியிருந்தார் என்பது மட்டுமல்ல, அந்த பாத்திரத்தை சிறப்பாகச் செய்து தன்னுடைய நடிப்பின் முழு பரிமாணத்தையும் இந்த படத்தின் மூலம் வெளிக்காட்டியிருக்கிறார்.
இந்த கதையின் நாயகனாக வரும் வசந்த் ரவியும் தான் ஒரு புதுமுகம் என்ற தோற்றத்தை எங்குமே தராததுபோல் கலக்கியிருக்கிறார்.
இணை, துணை பாத்திரங்களில் வரும் அஞ்சலி, அழகம்பெருமாள், சதீஷ்குமார், ‘மனைவி பாத்திரங்களில்’ வரும் பெண்கள் என அனைவருமே தங்கள் பங்குக்கு நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.
இசையில் யுவன் பரவாயில்லை. கடைசியில் வரும் இஸ்லாமிய பாடல் நிறையபேரை ஈர்க்கிறது. நா முத்துக்குமாரின் வரிகள் அவரை இழந்துவிட்ட துக்கத்தை மீண்டும் மனதில் எழுப்புகிறது.
தேனீ ஈஸ்வரனின் ஒளிப்பதிவு இந்த படத்திற்கு மிகவும் பக்கபலமாக இருக்கி;றது.
ஒவ்வொரு ‘காட்சி’யாக பார்த்தால், ஒவ்வொரு ‘ஷாட்’டாக பார்த்தால் படம் முழுக்க ராம் என்ற கலைஞனின் திறமை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. வசனகர்த்தாவாகவும், இயக்குநராகவும் ராம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியிருக்கிறார் என்பதில் ஐயம் இல்லை. (அதனால்தானே இந்த மரியாதை!)
இடையிடையே வரும் ராமின் கமன்டரி பல இடங்களில் கைதட்டல் பெறுகிறது என்றால் மிகையல்ல.
பல கதாபாத்திரங்கள், கதைக்களம், காட்சியமைப்புகள் மிகவும் புதுமையாகவும் யதார்த்தமாகவும் இருக்கிறது. பாத்திரப் படைப்பும் அருமை. நல்லதோ கெட்டதோ, ஒவ்வொரு பாத்திரமும் காலப்போக்கில் மாறுகிறது என்பதை வசனம், நடை உடை என அனைத்துவிஷயத்திலும் எடுத்துக்காட்டியிருக்கிறார்.
வழக்கமாக ஹீரோவுடன் வரும் நாலு நண்பர்கள் இந்த படத்தில் இல்லை. கதாநாயகனை வலியவந்து நல்லவனாகவே காட்டவில்லை. வழக்கமான லவ் டிராக் இல்லை.
தமிழ் படித்ததால் வேலை கிடைப்பது அரிது என்று முதல் படத்தில் சொன்ன ராம், இதில் ஆங்கிலம் படித்தாலும் வேலைகிடைக்காது என்பதை சொல்லியிருக்கிறார்.
ஒவ்வொரு கதாபாத்திரங்கள் வழியாக கலாச்சார பழக்கவழக்கங்களில் மக்கள் பழைமையும் புதுமையும் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை கோடிட்டி காட்டுகிறார். சமூகத்தில் இருக்கும் பாலியல் தொடர்பான பல விஷயங்களை, யாரும் சொல்ல தயங்குகின்ற விஷயங்களையும் தொட்டுச்சென்றிருக்கிறார்.
மழையை ஒரு காதாபாத்திரமாகவே மாற்றி பல காட்சிகளுக்கு மெருகூட்டியிருக்கிறார். ஹாட்ஸ் ஆப் ராம்!
கதாபாத்திரங்களுக்கு மத்தியில் நடக்கும் வாக்குவாதங்கள், கருத்து பரிமாற்றங்கள் போன்ற காட்சிகளை எடுத்த விதம், அதில் வரும் வசனங்கள், அதன் யதார்த்தம் எல்லாம் அருமை.
கமன்டரியில் ராம் சொல்லுகின்ற சமூக அவலங்கள் பற்றிய கருத்துக்களும் நன்றாகவே இருக்கிறது.
இந்த வகையில் எல்லாம் இந்த படம் ஒரு தரமான, எந்த திரைப்பட விழாவிலும் கலந்துகொள்ளக்கூடிய ஒரு படம் தான். அதில் மகிழ்ச்சி. அதற்காக ராமிற்கு வாழ்த்துக்கள்!
ஆனால் ஒட்டுமொத்தமாக படத்தை பார்த்தால்?
நான் ஒரு திரை விமர்சகன் அல்ல. ஒரு திரைக்கதை எழுத்தாளன், பல வருடங்களாக திரைத்துறையில் உதவி இயக்குநராக பணியாற்றுபவன் என்ற முறையில் இந்த படத்தின் கதையை, சொல்லியிருக்கும் விஷயத்தை, அது பார்வையாளர்களில் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தை மட்டுமே பார்க்கிறேன்.
படைப்பாளியை பாராட்டவேண்டும் படைப்பை விமர்சனம் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். (இதைத்தான் நமது சங்கத்தின் முக்கிய அம்சமாகவே வைத்திருக்கிறேன்.) அப்படித்தான் மேற்கூறிய எல்லா விஷயங்களையும் சொன்னேன்.
ஆனால் இந்த படத்தில் அடிக்கடி (ஆரம்பம் முதல் கடைசி வரை) கமன்டரி குரலுடன் ராம் ஒரு கதாபாத்திரமாகவே வந்துகொண்டிருக்கிறார். அதனாலேயே ராமை பெயர்சொல்லி விமர்சிக்காமல் இருக்க முடியாது. அதுவமின்றி ஆனந்த விகடன் ராமும் இந்த படத்தின் கதாநாயகனும் ஏறக்குறைய ஒருவரே என்ற தொனியில் எழுதியிருக்கிறது. அப்படி பார்க்கும் போது இந்த படத்தைப்பற்றிய விமர்சனங்கள் ராமை நோக்கி திரும்புவதில் தவறில்லையே.
இந்த படத்தை ஒரு சமூக கருத்துச்சொல்லும் படமாக, பெண்ணீயப் படமாக, கமன்டரி மூலம் ராம் விளம்பரப்படுத்த நினைத்ததால்தான் நிறைய கேள்விகள் எழும்புகின்றன.
இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் தந்தது சென்சார் பண்ணின மிகப்பெரும் குற்றம் போல விளம்பரங்கள் செய்தாh;. உண்மையை சொல்லுங்கள் ராம், இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் தரவில்லை என்றால் வேறு எந்த படத்திற்குதான் ஏ சான்றிதழ் தருவது? யு சான்றிதழ் தந்திருந்தால் சென்சார் போர்டுக்கு எதிராக சமூக அக்கறை கொண்ட நீங்களும் உங்கள் நண்பர்களும் தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கிறது என்று போர்க்கொடி தூக்கியிருக்க மாட்டீர்களா? (இந்த கேள்வி ராமிற்காக வக்காலத்து வாங்கிய நண்பர்களுக்கும் பொருந்தும். மனைவியுடன் சென்று பார்த்தபின்தான் அவர்களும் இந்த படத்தை பாருங்கள் என்று பாராட்டி எழுதியிருப்பார்கள் என்று நம்புகிறேன்!)
இந்த படத்தில் ஒரு பெண் பாத்திரமாவது உண்மையானவர்களாக இருக்கிறார்களா? ஒருத்தரை அப்படி காட்டி அவரையும் தற்கொலை செய்து விட்டீர்களே!
கதாநாயகன் பாத்திரம்? பாவமன்னிப்பு தரும் கதாநாயகி மன்னிக்கலாம். பலருடைய மனைவிமார்களை பாலியல் வேட்கையினை தொலைபேசி வழியாகவே தூண்டிவிட்டு பணம் கறக்க வழிசொல்லியிருக்கும் உங்களுக்கு யார் பாவமன்னிப்பு தருவது?
நிறைய எழுத தோன்றுகிறது. ஆனால் அவை இந்த படத்தில் வரும் கதாநாயகனின் செயலைவிட வக்கிரமாக இருக்கும் என்பதால் தவிர்க்கிறேன். அதற்கு பதிலாக முகநூலில் ஒரு தோழி கேட்ட கேள்விகளை அப்படியே இங்கு நான் பதிவு செய்கிறேன். ஒரு ஆணாக நான் கேட்பதை விட ஒரு பெண் கேட்ட கேள்விகள் தான் இங்கே பொருத்தமாக இருக்கும்.
இயக்குநர் ராம் அவர்களே… இப்படத்தின் மூலம் இச்சமூகத்திற்கு நீங்கள் சொல்ல வரும் கருத்துதான் என்ன…?
1. ஆண் துணை இல்லாமல் ஒரு பெண் தனித்து வாழ முடியாது என்கிறீர்களா?
2. தைரியமாகப் பெண்கள் தன் துணையைத் தேடுவதில் பலவீனமாக இருக்கிறார்கள் என்கிறீர்களா?
3. ஆண்களின் வார்த்தை ஜாலத்தால் பெண்களை சுலபமாக ஏமாற்றிவிட முடியும் என்பதைச் சொல்ல வருகிறீர்களா ?
4. ஐடி யில் வேலை செய்யும் பெண்கள் விடுமுறை நாட்களில் பார் போன்ற இடத்திற்கு சென்று குடித்துவிட்டுக் கூத்தடிப்பார்கள் என்பதை ஆவணப்படுத்த முயல்கிறீர்களா?
5. பணியிடங்களில் ஆண் அதிகாரிகள் எல்லோருமே தனக்குக் கீழ் வேலை செய்யும் பெண்களை படுக்க அழைப்பார்கள் என்பதை உறுதிப் படுத்துவது நோக்கமா.?
6. வெளியூரில் வேலைபார்க்கும் கண்வன் வீடுகளில் உள்ள பெண்கள் கண்ட ஆண்களோடு பயணிப்பார்கள் என்பது தான் உங்கள் எண்ணமா?
7. நைட் ஷிப்ட் வேலைக்குப் போன பிறகு மனைவி, மற்ற ஆணை வீட்டுக்கு வர சொல்வார்கள் என்பது இயல்பான வாழ்முறை என்கிறீர்களா?
8. இந்தப் படத்தை பார்க்கும் உங்கள் பெண் தோழிகள் உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்?
9. படம் முழுவதும் பாலியல் தொடர்பை வைத்துதான் நகர்த்துகிறீர்கள். இடையில் மட்டும் ஊறுகாயைப் போல சில சமூக கருத்தைச் சொல்கிறீர்கள். வியாபார நோக்கமா?
10. எல்லாத் தரப்பு ஆண்களுக்கும் தனித்து வாழும் பெண்களை எப்படி எல்லாம் முயற்சி பண்ணி கரைக்ட் பண்ணலாம் என்ற சமூக ஆலோசனை இந்த படத்தில் சிறப்பாக கொடுத்திருக்கிறீகள்.
11. முகம் அறியாதவன் போனில் பேசியவுடன், பாலியல் வேட்கையோடு பெண்கள் அவனை தேடிச் செல்கிறார்களா?
12. சராசரியான, பெண்களை இழிவு படுத்தும் வர்த்தகப் படங்களையாவது விஷம் என்று விலகி விடலாம். நீங்கள் மருந்து புட்டியின் பாவனையோடு கொடுப்பது அதனினும் சிக்கல்.
இப்படி எல்லாம் இருந்தும் ஏன் பலரும் இந்த படத்தை பாராட்டும் அளவுக்கு அதில் இருக்கும் சமூகக் கருத்துப்பிழைகளை விமர்சனம் செய்யவில்லை என்பதுதான் எனக்கு பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. லீனா மணிமேகலை, கேபிள் சங்கர் போன்ற ஒரு சிலர் எதிர் கருத்துக்களை வைத்திருக்கின்றனர்.
சாரு போன்ற பலரும் இதை தமிழில் வந்த முதல் பெண்ணீய படம் என்பதுபோல எழுதியதை பார்த்தேன். பாவம் இவர்கள் இப்பொழுதுதான் தமிழ் சினிமா பார்க்க ஆரம்பித்திருக்கவேண்டும் அல்லது பெண்ணீயம் என்பதற்கு இவர்கள் சொல்லும் அர்த்தம் வேறு எதுவோ நமக்கு தெரியாத ஒன்றாக இருக்கவேண்டும்.
ஒரு முறை அகரமுதல்வன் சொன்ன ஒரு வஷயம்தான் ஞாபத்தில் வருகிறது. இங்கே இருக்கும் இலக்கியவாதிகள் மொத்தமே 400 பேர்தான். ஒருவருடைய புத்தகத்தை இன்னொருவர் பாராட்டவேண்டும், விழா வைக்கவேண்டும். இல்லையேல் யாரும் பாராட்டவோ விழா எடுக்கவோ இருக்கமாட்டார்கள் என்றார். திரைத்துறையிலும் அப்படித்தான். ஒருவருடைய படத்தை இன்னொருவர் பாராட்டுவார். அவர் படத்தை இவர் பாராட்டுவார். விமர்சனம் பண்ணமட்டும் தயங்குவார்.
ஒருவேளை இதுபோன்ற படங்களை விமர்சனம் செய்தால் தங்களை பிற்போக்குவாதி, உலக சினிமா பற்றி தெரியாதவன் என்று சொல்லிவிடுவார்கள் என்று பயப்படுகிறார்களோ?
அல்லது திட்டமிட்டே செய்கின்றனரா?
எனக்கு தெரிந்து ஒருவரை அழிப்பதறக்கு சிறந்தவழி அவர் செய்யும் தவறுகளையும் குற்றங்களையும் பாராட்டுவதுதான்! கண்மூடித்தனமாக அவர் செயல்களை நியாயப்படுத்துவதுதான்!
அதைத்தான் இங்கு தற்பொழுது பலரும் செய்துகொண்டிருக்கின்றனர்.
ராம் ஒரு திறமையான கலைஞன் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்காது. அவர் சொன்னதாலேயே இந்த படத்தில் வரும் கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையவை என்ற விதத்தில் மவுனமாக இருக்கிறார்களே. இவர்களுடைய கள்ள மவுனம்தான் மிகவும் ஆபத்து. இது அந்த கலைஞனை அழித்துவிடும். தான் செய்வது அனைத்தும் நல்லது என்று ஒரே வட்டத்துக்குள் மாட்டிவிடுவார்.
அதனால் சுதாரித்துக் கொள்ளவேண்டியவர் ராம்தான். அடுத்த படத்தில் இந்த தவறுகளை களைந்துவிட்டு புதிய ராமாக வாருங்கள். இல்லையேல் நஷ்டம் இன்று உங்களை பாராட்டுபர்களுக்கு அல்ல. உங்களுக்கு மட்டும்தான் இருக்கும். கொடிகட்டி பறந்த எத்தனையோ பேரை நிராகரிப்பட்டு, கண்டுகொள்ளாமல் விடப்பட்டதுபோல நீங்களும் நிராகரிக்கப்படுவீர்.
No comments:
Post a Comment
Let others know your opinions about this post