Saturday, 3 June 2017

வேலை.. சேவை.. தேவை..








திரைப்பட உலகிற்கும் இலக்கிய உலகிற்கும் ஒரு பாலம் அமைக்கும் சிறு  முயற்சியாக, முக்கியமாக திரைப்படத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் ஒரு நல்ல தொடர்பினை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகத்தான் திரைப்பட இலக்கியச் சங்கமம் செயல்பட்டு வருகிறது. அந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றுவருகிறது.
இருப்பினும் நினைத்தபடி முழுமூச்சாக அதில் என்னால் ஈடுபடவும், அதை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்லவும் முடியவில்லை. இதை ஒரு சேவையாக, என்னுடைய ஆர்வத்தினால் மட்டுமே நடத்திவருகிறேனே தவிர, இதை முறையாக ஒரு இயக்கமாகவோ அல்லது நிறுவனமாகவோ நான் இதுவரை வளர்க்கவில்லை. என்னுடைய திரைப்படப் பணிகள்தான் இதற்கு காரணம்.
அந்த வேலைகளுக்கு நேரம் ஒதுக்கும்போது இந்த சேவை சற்று வேகம் குறைகிறது. இந்த சேவைக்காக சற்று நேரம் ஒதுக்கும்போது வேலைகள் தாமதமாகின்றன. இவை இரண்டையும் இணைத்து ஒரே வேகத்தில் செல்வது எப்படி என்று தற்பொழுதுதான் தெரியவருகிறது.
சேவையை வேலையின் ஒரு பகுதியாக மாற்றவேண்டும், அல்லது வேலையை சேவையின் ஒரு பகுதியாக மாற்றவேண்டும். அத்துடன் இரண்டிற்குமான பணிகளை நண்பர்கள் சிலரிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும். அதைத்தான் நான் இப்பொழுது செய்ய உள்ளேன்.
என்னுடைய வேலையில் அடுத்தபடி பொன்னியின் செல்வன்கதையை படமாக்க தேவையான நண்பர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை ஒருங்கிணைப்பது. (இது பல வருட கனவு, உழைப்பு, அனுபவம், இவை தந்த தெளிவு). இந்த பணியை மிகவும் கவனமாக செய்யவேண்டியுள்ளது. அதற்காக எனக்கென்று சில உதவியாளர்களை கண்டுபிடிக்கவேண்டும். ஒன்றிணைந்து முழுவேகத்துடன் பணியாற்றவேண்டும்.
சேவையின் அடுத்தகட்டம், சங்கமத்தின் சார்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திரைக் கலைஞர்கள் வட்டத்தில்நண்பர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் அனைவரையும் இணைப்பது. தொடர்ந்து வரும் நிகழ்வுகளை ஒருங்கிணைக்க சில நண்பர்களை பணியமர்த்தவேண்டும். திரைப்படங்கள், குறும்படங்கள் தேர்வு மற்றும் நிகழ்வின் வடிவமைப்பு பற்றி கருத்துக்களை பரிமாற நண்பர்கள் மற்றும் நலம்விரும்பிகளிலிருந்து ஒரு ஆலோசனைக்குழுவை அமைக்கவேண்டும்.
அதற்கு தற்பொழுது தேவை ஒரே விஷயம்தான். நண்பர்களையும் திரைப்பட ஆர்வலர்களையும் முதலில் சந்திக்க வேண்டும். உண்மையில் இந்த சங்கமத்தின் மீது பற்றுகொண்டவர்களை சந்திக்க முடிந்தால், உதவி செய்பவர்களையும் பணியாற்ற ஆர்வம் கொண்டவர்களையும் தேர்வு செய்துவிட்டால், பிறகு நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தியபடியே என் வேலையில் கவனம் செலுத்த முடியும்.
நண்பர்கள் பலரும் திரைப்பட இலக்கியச் சங்கமத்திற்கு வருவதுண்டு. பாராட்டுவதுண்டு. ஆனால் யார் யார் எப்பொழுதெல்லாம் வருவார்கள் என்றே புரியவில்லை. உண்மையில் ஆர்வமாக இருக்கிறார்களா, பொழுதுபோக்கிற்காக வருகிறார்களா, என்னுடைய அழைப்பிற்காக மட்டுமே வருகிறார்களா என்பது போன்ற விஷயங்கள் முழுமையாக இதுவரை புலப்படவில்லை. நானும் அதைப்பற்றியெல்லாம் யோசித்ததுமில்லை!
ஆனால் தற்பொழுது சங்கமத்தை அடுத்த கட்டத்திற்கு வளர்க்க வேண்டும், தொடர்ந்து திரைப்படம் மற்றும் குறும்படம் சார்ந்த நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்று முயற்சி செய்யும்போதுதான் இந்த கேள்விகள் மனதிற்குள் எழ ஆரம்பித்துள்ளன.
அதுமட்டுமின்றி நண்பர்கள் இந்த சங்கமத்தை தங்களுடைய நலன் சார்ந்தது என்று நினைக்க வேண்டுமென்றால், ஒரு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் அழைத்தாலும் நிகழ்வுகளுக்கு வரவேண்டும் என்றால் தாங்களும் இந்த அமைப்பில் ஒரு அங்கமாக இருப்பதாக அவர்கள் மனதில் தோன்ற வேண்டும்.
அதன்பொருட்டுதான் தற்பொழுது திரைக்கலைஞர்கள் வட்டத்தில் நண்பர்கள் அனைவரையும் இணைந்திட அழைக்கிறேன். நீங்கள் இணைவதோடு உங்கள் நண்பர்ளையும் இணைத்திடுங்கள்..

அனைவரும் ஒன்று கூடலாம்ஒவ்வொருவரும் வெற்றிபெறலாம்…    

No comments:

Post a Comment

Let others know your opinions about this post