Tuesday, 30 May 2017

பட்டுக்கோட்டை பிரபாகரின் இருநூல்கள் அறிமுகம்





கடந்த ஞாயிற்றுக்கிழமை (28-5-2017) திரு பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய இரண்டு நூல்களின் அறிமுகக் கூட்டம் டிஸ்கவரி புக் பேலசில் நடைபெற்றது. அதில் நானும் ஒரு அங்கமாக இருந்ததில் மிக்க மகிழ்ச்சி!
எதிர்பாராத விதமாகத்தான் இந்த நிகழ்வை தொகுத்து வழங்கும்படி வேடியப்பன் என்னிடம் சொன்னார். விருந்தினர்கள் பற்றிய போதிய விபரங்களை குறிப்பெடுக்கவோ, அறிமுகப்படுத்தும் நூல்களை படித்துப்பார்க்கவோ நேரம் கிடைக்கவில்லை. இருந்தும் ஏதோ சமாளித்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.
இருப்பினும் நான் தொகுத்துவழங்கியதை பலரும் நேரிலேயே பாராட்டினார்கள். என்னுடைய திரைப்ப்ட இலக்கியச் சங்கமம்நடத்தும் நிகழ்வுகளை நான் தொகுத்து வழங்குவது வழக்கம். இன்னொரு நிகழ்வில் இப்படி தொகுப்பது இதுவே முதல் முறை. இதற்கெல்லாம் காரணமாக, எனக்கு இந்த வாய்ப்பைத் தந்த வேடியப்பனுக்கு நன்றி!
நிகழ்வில் பட்டுக்கோட்டை பிரபாகரின் கடவுள் கனவில் வந்தாராஎன்ற சிறுகதைத் தொகுப்பும் எப்படி இப்படிஎன்ற கட்;டுரைத் தொகுப்பும் அறிமுகம் செய்யப்பட்டன.
சிறுகதைத் தொகுப்பு பற்றி முதலில் திரைப்பட இணை இயக்குநர் மிர்திகா சந்தோஷினி பேசினார். தொகுப்பில் இருக்கும் 20 கதைகளையும் அலசி, அராய்ந்து, ஒவ்வொரு கதையிலும் ஒரு அவதாரத்தின் இருப்பை கண்டுபிடித்து எடுத்துச் சொன்னார். உண்மையிலேயே மிகவும் நன்றாக இருந்தது.
அனைத்து கதைகளைப்பற்றியும் இவர் பேசியதால் பிறகு இந்த தொகுப்பு பற்றி பேசவந்த இயக்குநர்கள் பத்ரி அவர்களும், .வெங்கடேஷ் அவர்களும் சற்று தடுமாறிவிட்டனர் என்பது நிஜம். (நல்ல வேளை இந்த தொகுப்பில் நாற்பது கதைகள் இருந்திருந்தால் தொகுத்து வழங்கிய நானும் தடுமாறியிருப்பேன். இடையில் பேச்சை நிறுத்தும்படி துண்டுசீட்டு எழுதிகொடுக்க வேண்டியிருந்திருக்கும்!)
அடுத்ததாக கட்டுரைத் தொகுப்பு பற்றி இயக்குநர் கேபிள் சங்கர் பேசினார். தொகுப்பிலிருந்து கட்டுரைகள் ஏற்கனவே பல ஆங்கில தொடர்களுக்கு களமானதை விளக்கினார். ஆனால் வழக்கத்தைவிட சற்று குறைவாகவே பேசியதுபோல எனக்கு தோன்றியது. (எனக்குமட்டும்தானா என்று எனக்கு தெரியவில்லை.)
பிறகு இயக்குநர் பத்ரி சிறுகதைத் தொகுப்பு பற்றி பேசினார். முதல் பத்து கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து பேசி, மற்ற பத்து கதைகளை .வெங்கடேஷ் அவர்களுக்காக விட்டுவைத்தார். அதற்கு அவருக்கு ஒரு சிறப்பு நன்றி சொல்லியாகவேண்டும். அவருடைய பேச்சு மிகவும் இலக்கியத்தரமாகவும் கலகலப்பாகவும் இருந்தது. இனிமேல் பல இலக்கியக்கூட்டங்களில் இவருடைய பேச்சு இடம்பெறும் என்று எனக்கு தோன்றுகிறது!
தொடர்ந்து, கட்டுரைத்தொகுப்பு பற்றி இளங்கோவன் கீதா அவர்கள் பேசினார். ரெயில்வேத் துறை அதிகாரி என்பதாலேயே என்னமோ, பாசஞ்சர் போல ஆரம்பித்து, எக்ஸ்பிரஸ் போல பயணித்து, சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் போல சொல்லவந்த கருத்துக்களை வாசகர்களிடம் குறிப்பிட்ட நேரத்திற்குள்ளேயே கொண்டுசேர்த்தார். கிரைம் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் பற்றிய பொதுவான கண்ணோட்டத்தையே மாற்றியமைப்பதாக இருந்தது அவருடைய பேச்சு!
அதைத் தொடர்ந்து இயக்குநர் .வெங்கடேஷ் சிறுகதைத் தொகுப்பு பற்றி பேசினார். அவருக்கும் பட்டுக்கோட்டை பிரபாகருக்கும் உள்ள நட்புபற்றியும், அதற்காகவே இந்த கூட்டத்துக்கு தானாகவே வந்ததாகவும் சொன்னார். சிறுகதைகளை தேர்ந்தெடுத்து அழகாக எடுத்துரைத்தார்.
நிறைவாக பட்டுக்கோட்டை பிரபாகர் ஏற்புரை நிகழ்த்தினார். தன்னுடைய எழுத்து பற்றியும், இந்த இரு நூல்கள் எழுதிய பின்னணி பற்றியும், விருந்தினர்கள் எடுத்துரைத்த கேள்விகள் பற்றியும் தெளிவாக பேசினார். நிறைவு பேச்சு நிறைவாகவே இருந்தது
நிகழ்வின் ஆரம்பத்தில், வரவேற்புரையில் நண்பர் வேடியப்பன் டிஸ்கவரியில் வழக்கமான இலக்கியக் கூட்டத்துக்கு வரும் நண்பர்கள் இந்த கூட்டத்துக்கு வரவில்லை என வருத்தம் தெரிவித்தார். இதையே பின்பற்றிக்கொண்டு நான் வெகுஜனஇலக்கியம் பற்றி குறிப்பிட்டு பேசினேன். நான் நினைத்தபடியே அதன்பிறகு நிகழ்வில் பேசிய அனைவரும் இந்த விஷயத்தை குறிப்பிட்டு பேசினார்கள். (நம்மால் முடிந்தது இப்படி பேசவைப்பதுதானே!)
திரைப்பட இலக்கியச் சங்கமத்தில் நான் மேற்கொள்ளும் நிகழ்வுகளிலும் இதைத்தான் வலியுறுத்தி வருகிறேன். தீவிர இலக்கியம்என்றும் வெகுஜன இலக்கியம்என்றும் பிரிக்கத் தேவையில்லை, சினிமாவை ஆர்ட்என்றும் கமர்ஷியல்என்றும் பிரிக்கத் தேவையில்லை என்பது தான் என்னுடைய வாதம்.
இந்த நிகழ்விலும் அந்த எண்ணம் மேலோங்கியதால், என்னுடைய நிகழ்வில் இருந்ததுபோலவே ஒரு சந்தோஷம் எனக்குள் ஏற்பட்டது. இதை உருவாக்கிய அனைத்து விருந்தினர்களுக்கும் என் தனிப்பட்ட நன்றிகள்..



No comments:

Post a Comment

Let others know your opinions about this post