இன்று 15-5-17 அன்று முதல் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர். அது அவர்கள் உரிமை. அதில் நியாயம் இருக்கலாம். முதலிலேயே அறிவித்ததால் பொதுமக்களும் அதை எதிர்கொள்ள தயாராக இருந்திருப்பார்கள்.
ஆனால் நேற்று 14-5-17 அன்று மாலையிலேயே பல
இடங்களில் அவர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துவிட்டனர். எதிர்பாராதவிதமாக ஆரம்பித்த இந்த வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் எப்படி அவதிப்படுவார்கள் என்று இவர்கள் யோசித்தார்களா? இதை நடத்தும் தொழிற்சங்கங்கள் இதை யோசிக்க வேண்டாமா?
நேற்று நான் கே.கே.நகர் பகுதியில் ஒரு முழுநாள் நிகழ்வை நடத்திக்கொண்டிருந்தேன். அதற்கு என் மகளும் வந்திருந்தாள். மதியம் சாப்பிடச் சென்ற அவள் திரும்பி வரும்போது,
வடபழனி பேருந்து நிறுத்தத்தில் ‘மாட்டிக்கொண்டு’ விட்டாள். எங்கு செல்லவும் பேருந்து கிடைக்கவில்லை.
என் மனைவி மவுலிவாக்கத்திலுள்ள எங்கள் வீட்டிலிருந்து சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு செல்ல பேருந்துக்காக அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்தாள். அவளுக்கும் பேருந்து கிடைக்கவில்லை. இருவரும் இரவு ரயிலில் கோவைக்கு செல்லவேண்டும். அது ஏற்கனவே திட்டமிட்ட பயணம். வரும் பேருந்துகள் எல்லாம் பக்கத்தில் உள்ள டிப்போக்களுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டன.
எனக்கு செய்தி கிடைத்ததும் நான் என்னுடைய நிகழ்வை சீக்கிரமாக முடித்துவிட்டேன். அதற்காக சிறப்பு விருந்தினர்களைக்கூட அழைத்து நிகழ்வுக்கு வரவேண்டாம் என்று நானே சொல்ல வேண்டியதாயிற்று. காரணம் என்னால் நிகழ்வில் மனநிம்மதியாக இருக்க முடியவில்லை.
உடனே ஒரு குடும்ப நண்பரை அழைத்து, அவர் தன்னுடைய வேலையை பெர்மிஷன் போட்டு,
காரை எடுத்துக்கொண்டு வந்து, என் மகளை வடபழனியிலிருந்து அழைத்துக்கொண்டு, மவுலிவாக்கம் வந்து என் மனைவியையும் அழைத்துக்கொண்டு, ரயில் நிலையத்திற்கு சரியான நேரத்துக்கு சென்று சேர்ப்பத்தார். அவர்களுக்கு ரயில் கிடைத்தது.
நான் ஷேர் ஆட்டோக்களில் மாறி மாறி ஏறி வீடு வந்து சேர்ந்தேன்.
இது என்னுடைய தனிப்பட்ட ஒரு அனுபவம். கார் வைத்த ஒரு நண்பர் இருந்ததால் எங்களால் நேரத்திற்கு செல்ல முடிந்தது, முடியாதவர்கள் நிலை?
வீடுவரும் வழியில் பலரும் அவதிப்படுவதை நேரடியாக பார்த்தேன். காலையில் வேலைக்கு வந்தவர்கள் வீடுகளுக்கு திரும்ப கஷ்டப்படுகின்றனர். பஸ்சுக்கு மட்டும் கையில் காசு வைத்துள்ளவர்கள் ஷேர் ஆட்டோவில் ஏறமுடியாமல் நடக்கின்றனர். தூரத்திற்கு செல்ல எந்த வசதியும் இல்லை.
வழக்கமாகவே விருகம்பாக்கத்திலிருந்து பூந்தமல்லிக்கு அஞ்சுநிமிஷத்துக்கு ஒரு பஸ் வரும். அவ்வளவு கூட்டம் இருக்கும். நேற்று இரவு வரும் பஸ் எல்லாம் ஐயப்பன்தாங்கல் டிப்போ வரைக்கும்தான் போகும் என்று கண்டக்டர்கள் சொன்னார்கள். அப்படியிருக்க அந்த பஸ்சில் ஏறவேண்டுமா,
ஐயப்பன்தாங்கலிலிருந்து எப்படி செல்வது என்று பெண்கள், குழந்தை குட்டிகளுடன் பஸ்சுக்காக நிற்பவர்கள் தடுமாறுகின்றனர். இதெல்லாம் ஒரு உதாரணம் மட்டும்தான். சொல்லாத அவதிகள் இன்னும் எத்தனையோ..
டிரைவர், கண்டக்டர்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவர்களுக்கு அவர்கள் உரிமைமட்டும்தான் முக்கியம்.. அப்படியென்றால் அவர்களுக்கு பொறுப்பு இல்லையா.. (அரசு சேவை அரசு வேலையான மாறிவிட்டதால்தானோ!)
ஒரு விஷயம் மட்டும் தெளிவாக புரியுது. பொதுவுடமைவாதம், தொழிலாளர்நலம் போன்றவற்றில் பொதுமக்களுக்கு எந்த எதிர்ப்பும் இருக்காது. ஆனால் பொதுமக்களை துன்புறுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொழிற்சங்கங்கள் மீது பொதுமக்கள் கொண்ட வெறுப்பை அதிகரிக்கத்தான் செய்கிறது.
மெரினா புரட்சிக்குப் பின்னும் தொழிற்சங்கங்கள் திருந்தவில்லை என்றால்,
மக்களுக்கு ‘பிடித்த’ போராட்ட வடிவங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் தொழிற்சங்கங்கள் மீது அனைவருக்கும் வெறுப்புத்தான் வரும்.
‘இதுக்கெல்லாம் ஒரே கையெழுத்தில் ஒன்றரை லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்ப முடியும்னு காட்டின ஜெயலலிதா மாதிரி ஆளுங்கதான் ஆட்சிக்கு வரணும்’
என்று மக்கள் நினைக்க ஆரம்பித்து விடுவார்கள்.
இது நேற்று ஷேர் ஆட்டோவில் ஒருவர் சொல்ல கேட்டது. அது சரியா தவறா என்பது வேறுவிஷயம். ஆனால் நானும் அதை நேற்று இரவு ஆமோதித்தேன் என்பதுதான் உண்மை! அதனால் தான் இந்த பதிவு.
தொழிற்சங்கங்கள் சிந்திக்கட்டும். அவர்கள் வேலை நிறுத்தம் செய்தாலும் அதைமீறி எப்படி செல்வது என்பதுபற்றி நாம் யோசிக்கலாம்!
No comments:
Post a Comment
Let others know your opinions about this post