Friday, 2 December 2016

பாடங்கள்





திரைப்பட இலக்கியச் சங்கமம் நடத்த ஆரம்பித்தது என்னமோ திரைத்துறைக்கும் இலக்கியத்துறைக்கும் மத்தியில் ஆழமான ஒரு தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தினால்தான். இருந்தாலும் இந்த சங்கமம் நடத்துவதில் எனக்கும் சில சுயலாபங்கள் இருக்கின் என்பதை மறுப்பதற்கில்லை. முதலில் அப்படி எந்த நோக்கமும் இல்லாமல்தான் நான் இதை ஐந்துவருடங்களாக தொடர்ந்து நடத்தி வந்தேன். ஆனால் சுயநலமில்லாத பொதுநலத்தால் எந்த முயற்சியும் செயல்வடிவத்தில் தொடராது என்பதை நான் பிறகு புரிந்துகொண்டேன். அதனால்தான் தற்பொழுது கஷ்டநஷ்டங்களைத் தாங்கியும் இதை தொடர்ந்து நடத்தி, அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல முடிகிறது என்பதை சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
இந்த சங்கமத்தால் யாருக்கு என்ன மனமாற்றம், படிப்பினை கிடைக்கிறதோ இல்லையோ, யாரெல்லாம் இதை சரியான முறையில் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, எனக்கு இதன் மூலம் பல நல்ல மனிதர்களின், திறமைசாலிகளின், பிரபலமானவர்களின் தொடர்பு கிடைத்திருக்கிறது என்பதுதான் இந்த சங்கமத்தின் முதல் வெற்றி. அதுபோல இந்த சங்கமத்திற்கு வந்ததால் சில புதியநண்பர்களை கிடைத்ததாக என்னுடைய நண்பர்கள் சிலர் நன்றியுடன் சொல்லியிருக்கிறார்கள். அதை கேட்கும்போது ஒரு பெருமித உணர்ச்சி உள்ளத்தில் பெருக, இந்த சங்கமத்தை நடத்த நான் பட்ட கஷ்டங்கள் எல்லாமே மறந்துபோகிறது.
இந்த சங்கமத்தை தொடர்ந்து நடத்திவருதால் சில பாடங்களையும் நான் கற்றுக்கொண்டேன். இந்த சங்கமத்திற்கு விருந்தினர்களை அழைப்பதற்காக சென்னையில் உள்ள திரைத்துறையைச் சார்ந்த பல சங்கங்களுக்கும் செல்ல வாய்ப்பு கிடைத்தது.
இதனாலேயே புதிய புதிய நண்பர்கள் பலருடைய அறிமுகம் கிடைத்தது. அவற்றுடன் பல விஷயங்களை அனுபவிக்கவும், மற்றவர்கள் வாழ்வில் ஏற்பட்ட பல அனுபவங்கள் பற்றி அறிந்துகொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த அனுபவங்கள் அதுவரை என்னுடைய மனதில் இருந்த பல எண்ணங்களையும் மாற்றியமைத்தது. கண்மூடித்தனமாக நம்பிய விஷயங்கள் பலவற்றை கண் திறந்து பார்த்து உண்மையை உணர்ந்துகொள்ளவும் உதவியாக இருந்த.
ஒரு சிறு உதாரணம். கடந்த வருடத்தில் திரைத்துறையில் புதியதாக வாய்ப்புத் தேடிவந்த இரு இளைஞர்கள் எனக்கு அறிமுகமானார்கள். இருவரும் பள்ளிப்படிப்பை முடித்ததும் சினிமா ஆசையில் வந்தவர்கள்தான்! இருவருக்கும் இயக்குநர்கள் ஆகவேண்டும் என்பதுதான் லட்சியம்! திரைத்துறையில் எந்த ஒரு பரிச்சயமும் இல்லை.
ஒரு சில இயக்குநர்களிடம் உதவியாளராக பணியாற்ற வாய்ப்பு தேடியிருக்கின்றனர். கிடைக்கவில்லை. இருந்தாலும் அதற்காக அலைந்த ஒரு சில மாதங்களில், அவர்கள் சந்தித்த வேறு சில உதவி இயக்குநர்கள் மூலமாக திரைத்துறையில் நடப்பதை கொஞ்சம் பார்த்து, கொஞ்சம் கேட்டு, அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டனர். நேரடியாக ஒரு படத்தை இயக்கிவிடலாம் என்று! உதவி இயக்குநர் வாய்ப்பைத் தேடுவதற்கு பதிலாக தயாரிப்பாளரை தேட ஆரம்பித்தனர். அதற்காக தங்கள் ஊருக்கு சென்றுள்ளனர்.
அங்கிருக்கும் சில பணக்காரர்களை அணுகியுள்ளனர். சினிமாவில் ஆர்வம் உள்ள ஒருவர் அவர்களில் ஒருவரை இயக்குநராக்கி ஒரு படத்தை தயாரிக்க முன்வந்துள்ளனர்! ஒருவர் படத்தை இயக்கவும், மற்ற நண்பர் இணை இயக்குநராகவும் பணியாற்ற முடிவு செய்தார்கள்.
அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது தெரியுமா? அந்த தயாரிப்பாளர் தன்னிடம் இயக்குநர் வாய்ப்பு கேட்ட பையனின் ஜாதகத்தை வாங்கி பொருத்தம் பார்த்தாராம்! அந்த தயாரிப்பாளரும் அந்த இயக்குநரும் சேர்ந்தால் படம் வெற்றிபெறும் என்று ஜோசியர் உறுதி கூறினாராம்! அப்படித்தான் அந்த பையன் இயக்குநராக அமர்த்தப்பட்டார். (தேவையில்லாமல் திரைப்படம் பற்றி நமக்கு தெரிந்ததையெல்லாம் சொல்லியதும், அத்துடன் அந்த பையன் என்னைப் பார்க்க வருவதையே நிறுத்திவிட்டான் என்பது வேறு ஒரு கசப்பான உண்மை).
இதுதான் புதியதாக வரும் இன்றைய திரைத் தயாரிப்பாளர்களின் நிலை. இப்படிப்பட்ட தயாரிப்பாளர்களையும் தொழில் முறையாக அனைத்தையும் அறிந்து கொண்டு படம் எடுத்துவரும் தயாரிப்பாளர்களையும் ஒரே நேரத்தில் இங்கே பார்க்க முடிகிறது என்பதுதான் திரைத்துறையின் சிறப்பும், பிரச்சினையும்.
இதுபோன்ற பல அனுபவங்களும் அவை தந்த பாடங்களும்தான் இந்த புத்தகத்தை எழுதுவதற்கான தூண்டுதலாக மாறியது.
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மற்ற மொழிகளில் பணி செய்த அனுபவம் எனக்கு மேலும் பல பல பாடங்களை கற்றுத்தந்த.
ஒவ்வொரு மொழியிலும் திரைப்படம் எடுப்பதிலும் அதை மக்களிடம் கொண்டு செல்வதிலும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அவற்றுடன் சில வேற்றுமைகளும் இருக்கின்றன. அவற்றை ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டு பார்க்க இந்த அனுபவங்கள் வெகுவாக உதவி செய்தது.
முதலில் நான் திரைப்படம் சார்ந்த ஒரு பத்திரிகையை ஆரம்பிக்க நினைத்தேன். திரைப்பட இலக்கியச் சங்கமம் நடத்தி வந்ததால் அதே பெயரிலேயே ஒரு மாதப்பத்திரிகையையும் ஆரம்பித்தேன். பல காரணங்களால் அதை தொடர்ந்து நடத்தவில்லை.
அதற்கும் முக்கியமான காரணம், பத்திரிக்கை வேலைகளில் முழுமூச்சாக இறங்கிவிட்டால் திரைப்படம் இயக்கும் முயற்சியிலிருந்து திசை மாறிவிடுமோ என்ற பயம் மனதில் எழுந்ததுதான். காரணம் இந்த சென்னை மாநகருக்கு குடிபெயர்ந்ததே திரைப்படத்தில் இயக்குநர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தினால்தானே! அதை எப்படி விடுவது. இதே நிலைதான் இங்கு இயக்குநராக வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கும் எல்லா இணை, துணை, உதவி இயக்குநர்களுக்கும்.
எழுத்தாளராக வேண்டுமா, இயக்குநராக வேண்டுமா அல்லது தயாரிப்பாளராக வேண்டுமா என்ற கேள்வி என் மனதில் திரும்பத் திரும்ப எழுந்தது.
யார் ஆகவேண்டும் என்ற குழப்பம் மேலும் சில வருடங்கள் தொடர்ந்தது.
மலையாளத் திரையுலகில் இயக்குநருக்கு இணையான மரியாதை எழுத்தாளர்களுக்கும் கிடைப்பதுண்டு. ஆனால் தமிழில் அப்படி எதிர்பார்க்க முடியாது. தெலுங்கில் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைதான் காணமுடிகிறது.
தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களில் பரிச்சயம், உலக சினிமாக்களை பார்த்து, படித்த அனுபவம், எல்லாம் ஒன்றை எடுத்துச் சொன்னது.
திரைத்துறையில் இயக்குனரே தலையானவர் என்பதே அது!
அப்படித்தான் நானும் நம்பிவந்தேன். பிரபல எழுத்தாளராக இருந்தாலும் இயக்குநர் சொல்படி, அல்லது அவரது விருப்பப்படி எழுதுவதுதான் திரைக்கதை எழுத்தாளரின் பணி என்றே நினைத்தேன்.
காலப்போக்கில் சில விஷயங்களை வழக்கமான கோணத்தில் பார்ப்பதை தள்ளிவைத்துவிட்டு வேறு ஒரு கோணத்தில் பார்த்தால் என்ன என்பது போன்ற சிந்தனைகள் மனதில் வளர ஆரம்பித்தன. (அப்படி வளரவில்லை என்றால் இந்த அனுபவங்கள் எல்லாம் வீணாகிவிடும் என்பதுதானே உண்மை)
அப்படி எழுந்த எண்ணங்களில் ஒரு உண்மையை கண்டுகொண்டேன். ஒரு படத்தின் எழுத்தாளர், இயக்குநர், தொழில்நுட்பக்கலைஞர்கள், நடிகர்கள் என யாராக இருந்தாலும் எல்லோரும் தயாரிப்பாளரின் தயவில்தான் பணி செய்கின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் ஊதியத்தை கொடுத்து, இவர்களுடைய திறமையை பயன்படுத்துபவர், அல்லது சேவையை விலைக்கு வாங்குபவர் தயாரிப்பாளர்தான்.
அப்பொழுது ஒரு கேள்வி! கொடுப்பவன் பெரியவனா, வாங்குபவன் பெரியவனா?
இப்படிப்பட்ட கேள்விகள்தான் திரைப்படம் சார்ந்த என்னுடைய எண்ணங்களை முற்றிலுமாக மாற்ற ஆரம்பித்தன.
மற்ற தொழில்களுக்கும் இந்த திரைப்படத் தொழிலுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று எல்லோரும் சொல்வார்கள்.
இதை நான் மறுக்கவில்லை. கண்டிப்பாக வித்தியாசம் இருக்கிறது.
(இதைப்பற்றி எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர்என்ற அத்தியாத்தில் விரிவாக எழுதியுள்ளேன்.)
திரைப்படத்துறையில் ஒரு இயக்குநராக வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன், வாழ்க்கையில் இதுவரை தொலைத்த நேரம்.. அதனால் கண்டுகொள்ளாமல், அல்லது சம்பாதிக்காமல் விட்டுவிட்ட பணம்.. வருடக்கணக்கில் விரயமாக்கப்பட்ட திறமைகள்.. போன்றவற்றை கணக்கிடும்போது வாழ்க்கையில் நஷ்டமானது மிக மிக ஏராளம்.

நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் மட்டுமல்ல தயாரிப்பு நிர்வாகிகள், மக்கள் தொடர்பாளர்கள் என அனைத்து நண்பர்களும் பலநேரங்களில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டிருந்தன. அவை எல்லாமே இந்த நூலில் குறிப்பிடும் கருத்துக்களுக்கு அடிப்படையாக மாறியிருக்கிறது என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment

Let others know your opinions about this post