Thursday, 3 November 2016

ஆண்டவன் கட்டளை





ஒரு வேலையை முடித்தபின் தான் அடுத்தவேலையை செய்யவேண்டும், அப்போதுதான் நிறையவேலைகளை செய்துமுடிக்க முடியும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்தால் எந்த வேலையையும் சரியாக முடிக்க முடியாது.
இந்த வாதம் பொதுவான பணிகளுக்கும், தொழில்முறை செயல்களுக்கும், அலுவலக வேலைகளுக்கும்  மட்டும் தான் பொருந்தும்.
வாழ்க்கை லட்சியங்கள் மற்றும் இலக்குகளை எட்டுவதற்கான முயற்சியில் இந்த வாதம் சரியாகாது. ஒரு பணியை அல்லது கடமையை முடித்தபின்தான் அடுத்த பணியை அல்லது கடமையை செய்வேன் என்று இருந்தால், பல இலட்சியங்களையும் இலக்குகளையும் நாம் நிறைவேற்றாமலும் எட்டாமலும் போய்விடுவோம். “அலைகள் ஓய்ந்த பின் கடலில் மீன் பிடிக்கலாம் என்றால் நடக்காது. நாம தான் எல்லாத்திற்கும் நேரத்தை ஒதுக்கணும்”. இதுதான் யதார்த்தம்!
இந்த விஷயங்களையெல்லாம் நான் பல பெரியவர்களும் பல முறை சொல்லக் கேட்டிருக்கிறேன். நானும் பலருக்கு உபதேசம் செய்திருக்கிறேன். ஊருக்கு உபதேசம் செய்வதும், தனக்கென்று வரும்போது அதை கவனிக்காமல் இருப்பதும் மனித இயல்புதானே! அதனால் நானும் உபதேசம் செய்வதோடு நிறுத்திக் கொண்டேன்.
ஆனால் காலம் அவ்வப்போது நம் தவறுகளை உணர்த்துவதுபோல தற்பொழுது இந்த விஷயத்திலும் என்னை யோசிக்க வைத்திருக்கிறது.
திரைத்துறைக்கு வந்ததே படம் எடுக்கத்தான். ஒரு இயக்குநராக, எழுத்தாளராக, தயாரிப்பாளராக வேண்டும் என்பதுதான் என் வாழ்க்கையின் முதல் லட்சியம்.
இயக்குநராக வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதற்காக உதவியாளராக பணிசெய்தேன். திரைக்கதை எழுத்தாளராகவும், இணை இயக்குநராகவும் வளர்ந்துவந்தேன். இயக்குநர் வாய்ப்பை தேட ஆரம்பிக்க நினைக்கும்போதெல்லாம் வேறு சில எண்ணங்கள் இடைமறிதுக்கொண்டே இருக்கும். சிந்தனைகள் மாற்றுப்பாதையில் சென்றுகொண்டே இருக்கும்.
திரைத்துறையில் கிடைத்த அனுபவமும், அறிவும் திரைப்பட இலக்கியச் சங்கமத்தை ஆரம்பிப்பத் தூண்டியது. சில வருடங்கள் அதற்காக சென்றது. படக்கம்பனிகளுக்கு சென்று வாய்ப்பு கேட்க மனம் வரவில்லை. (அதன் காரணங்கள் திரைப்படம் தயாரிப்பாளர்களின் கலைஎன்ற நூலில் எழுதியிருக்கிறேன்.) ஒரு கூட்டுத் தயாரிப்பு ஆரம்பிக்கலாம் என்று முடிவுசெய்து அதற்கான வரைவு திட்டங்களை தயாரித்தேன்.
திரைப்படம் எடுத்துவிட்டால் சங்கமவேலைகளும் மற்ற புத்தகம் எழுதும் வேலைகளும் தொடராமல் போய்விடுமோ என பயந்தேன். அதனால் முதலில் சில புத்தகங்களை எழுத முடிவுசெய்தேன். அவற்றில் சில புத்தகங்கள் டிஸ்கவரி புக் பேலசில் வெளியிட கொடுத்துள்ளேன். சிலவற்றை திரைப்பட இலக்கியச் சங்கமத்திற்காகவே வெளியிட ஏற்பாடு செய்துவருகிறேன். இந்தபணிகளுக்காக சில வருடங்கள் சென்றுகொண்டிருக்கிறது.
இதற்கு மத்தியில் படம் இயக்க வாய்ப்பைத் தேடும் பணி அல்லது படத்தை தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்படாமலேயே இருக்கிறது. இந்த நேரத்தில்தான் சமீபத்தில் வெளிவந்த ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் ஒரு பாடல் என்னை மீண்டும் மீண்டும் யோசிக்க வைத்துக்கொண்டே இருக்கிறது.
அந்த படத்தின் ஒரு பாடலுக்கு மத்தியில் நான் முதலில் கூறிய அலைகடல் ஓய்ந்தபின்..என்ற விஷயம் வசனமாக வருகிறது. அதை பார்க்கும்போதெல்லாம் நான் என் தவறை உணர்கிறேன். இந்த பாடல் அடிக்கடி என்னுடைய படவேலைகள் மற்றும் லட்சியங்கள் பற்றி என்னை ஞாபகப்படுத்துகிறது.
அந்த பாடலின் மத்தியில் அந்த வசனக்காட்சியை சேர்த்த அப்படத்தின் இயக்குநர் மணிகண்டனுக்கும், அந்த பாடலை அடிக்கடி காட்டிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளுக்கும் இதற்காக நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சங்கமத்தை ஒழுங்குபடுத்தி, தொடர்ந்து நடக்க ஏற்பாடுசெய்வது, திரைப்பட இலக்கிய மையம் அமைப்பது, ‘திரைப்படம்- தயாரிப்பாளர்களின் கலைஎன்ற புத்தகத்தை வெளியிடுவது, சங்கமத்தின் ஆறாவது ஆண்டுவிழாவை ஏற்பாடு செய்வது போன்ற பணிகளை இந்த வருட இறுதிக்குள் முடித்துவிடடு (டிசம்பர் 31), திரைப்படத் தயாரிப்பு, தொழில்முறை திரைக்கதை எழுதுதல் மற்றும் இயக்க வேலைகளை முழுமூச்சாக செய்ய திட்டமிட்டுள்ளேன். அதற்கான ஆரம்பகட்ட பணிகளை இந்த பணிகளுக்கு இணையாகவே செய்ய ஆரம்பித்துள்ளேன்.

அதற்குள் மேற்சொன்ன பணிகளை முடிக்க நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்

No comments:

Post a Comment

Let others know your opinions about this post