திரைப்படமும் இலக்கியமும் இணைய வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன்தான் திரைப்பட இலக்கியச் சங்கமத்தை நான் நடத்த ஆரம்பித்தேன். அதற்காக பல இயக்குநர்களை, தயாரிப்பாளர்களை, எழுத்தாளர்களை, தொழில்நுட்பக் கலைஞர்களை சந்தித்தேன். அவர்களில் பலரும் இந்த சங்கமத்தில் விருந்தினர்களாக பங்குபெற்று வந்தனர் என்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் விஷயம்தான்.
இருந்தாலும் இந்த திரைப்படச் சங்கமங்களை நடத்திய அனுபவத்தினால், சில கேள்விகள் எனக்குள் எழ ஆரம்பித்தன. சென்னையில் உள்ள உதவி இயக்குநர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும், திரைப்படம் சார்ந்த மற்ற நண்பர்களையும் மட்டுமே கருத்தில் கொண்டு அவர்கள் மத்தியில் திரைப்பட இலக்கிய உறவு குறித்த புரிதலை ஏற்படுத்துவதால் திரையுலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்பதுதான் அவற்றில் முக்கியமான கேள்வியாக இருந்தது.
கண்டிப்பாக தயாரிப்பாளர்கள் மத்தியில் திரைப்பட இலக்கிய இணைப்பு பற்றி ஒரு புரிதல் இருந்தால் மட்டுமே திரைத்துறை வளர்ச்சிப்பாதையில் செல்லும் என்பது புரிய ஆரம்பித்தது.
இதை நான் மட்டும் அல்ல பல பிரபல கலைஞர்களும் எழுத்தாளர்களும் ஒப்புக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் யாரும் அதை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை என்பதுதான் உண்மை. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதனால் நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. என்னால் முடிந்த வரை இந்த இலக்கை நோக்கி பயணிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.
இந்த கருத்தை முன்வைப்பதற்காக பல தயாரிப்பாளர்களின் சாதனைகளை அலசிப்பார்த்தேன். அது இந்த சங்கமத்தின் இலக்கை மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் என் லட்சியத்தையுமே திசைமாற்றிவிட்டது. அந்த திசைநோக்கிய பயணத்தில் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஒன்றை உறுதியாக எடுத்துக் காட்டியது.
அதுதான் ‘திரைப்படத்தின் உண்மையான கேப்டன் தயாரிப்பாளர்தான்’ என்ற உண்மை! ஒவ்வொரு படைப்பாளியும் தொழில்நுட்பக்கலைஞரும் தயாரிப்பாளரைச்
சார்ந்தே இருக்கின்றனர். ஆனால், யாரும் தயாரிப்பாளரின் மேலாண்மையை புரிந்துகொள்வதோ ஒத்துக்கொள்வதோ இல்லை.
திரைப்படத்துறை அடுத்த கட்டத்திற்கு முன்னேற, தயாரிப்பாளர்கள் தங்கள் மதிப்பை திரும்ப பெறுவது அவசியம்.
இந்த நிலைப்பாட்டை நிரூபிக்க, புதிய தயாரிப்புகளை வெற்றிகரமாக முடிக்க, இணைந்து பணியாற்ற, தயாரிப்பாளர்கள் முன்வரவேண்டியது இன்றைய காலகட்டத்தின் தேவையாக இருக்கிறது.
இந்த எண்ணத்தின் வெற்றி படைப்புத் திறனும் இலக்கிய அறிவும் கொண்ட பல தயாரிப்பாளர்களை நம் திறைத்துறையில் உருவாக்கி வளர்க்கும். அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்களுக்கு தங்கள் அனுபவத்தை புதிய தலைமுறையுடன் பகிர்ந்து கொள்ளவும், புதிய தயாரிப்பாளர்களுக்கு திரைப்படத்தயாரிப்பு பற்றிய அடிப்படை விஷயங்கள் கற்றுக்கொள்ளவும் ஒரு தளமாக இருக்கும்.
நடிகர்களாகவேண்டும் என்றும், இயக்குநர்களாக வேண்டும் என்றும், தினம் தோறும் ஏராளமானோர் திரைப்பட தலைநகரங்களுக்கு இன்றும் படை எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். உதாரணத்திற்கு தமிழ்த்திரையுலகில் வெற்றி பெற தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து சென்னைக்கு தினமும் பலர் வருகின்றனர்.
ஏற்கனவே இங்கு இதுபோல வாய்ப்பைத் தேடிவந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.
ஆனால் இவர்களுக்கு வாய்ப்பு தருவதற்கும் படங்களை தயாரிப்பதற்கும் அந்த அளவு எண்ணிக்கையில் தயாரிப்பாளர்கள்தான் இங்கு இல்லை. ஆகையினால் திரைத்துறைக்கு இப்போது தேவை நிறைய தயாரிப்பாளர்கள்தான்.
நல்ல, பல புதிய தயாரிப்பாளர்களை திரைத்துறைக்கு வரவழைக்கவும், ஏற்கனவே தயாரிப்பாளர்களாக இருந்து, தற்பொழுது படம் எடுக்காமல் ஒதுங்கி இருக்கும் பல அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்களை மீண்டும் படம் எடுக்க தூண்டிவிடவும் வேண்டும். அதுவே இந்த சங்கமத்தின் முதல் இலக்காக மாறியிருக்கிறது. அதற்கு தேவை முதலில் தயாரிப்பாளர் என்ற நிலைக்கு திரைத்துறையில் முதல் அந்தஸ்து வாங்கித் தருவதுதான். அதற்கு இப்படி ஒரு நூல் அவசியமாக இருக்கிறது.
No comments:
Post a Comment
Let others know your opinions about this post