Monday, 28 November 2016

இலக்கு




திரைப்படமும் இலக்கியமும் இணைய வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன்தான் திரைப்பட இலக்கியச் சங்கமத்தை நான் நடத்த ஆரம்பித்தேன். அதற்காக பல இயக்குநர்களை, தயாரிப்பாளர்களை, எழுத்தாளர்களை, தொழில்நுட்பக் கலைஞர்களை சந்தித்தேன். அவர்களில் பலரும் இந்த சங்கமத்தில் விருந்தினர்களாக பங்குபெற்று வந்தனர் என்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் விஷயம்தான்.
இருந்தாலும் இந்த  திரைப்படச் சங்கமங்களை நடத்திய அனுபவத்தினால், சில கேள்விகள் எனக்குள் எழ ஆரம்பித்தன. சென்னையில் உள்ள உதவி இயக்குநர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும், திரைப்படம் சார்ந்த மற்ற நண்பர்களையும் மட்டுமே கருத்தில் கொண்டு அவர்கள் மத்தியில் திரைப்பட இலக்கிய உறவு குறித்த புரிதலை ஏற்படுத்துவதால் திரையுலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்பதுதான் அவற்றில் முக்கியமான கேள்வியாக இருந்தது.
கண்டிப்பாக தயாரிப்பாளர்கள் மத்தியில் திரைப்பட இலக்கிய இணைப்பு பற்றி ஒரு புரிதல் இருந்தால் மட்டுமே திரைத்துறை வளர்ச்சிப்பாதையில் செல்லும் என்பது புரிய ஆரம்பித்தது.
இதை நான் மட்டும் அல்ல பல பிரபல கலைஞர்களும் எழுத்தாளர்களும் ஒப்புக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் யாரும் அதை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை என்பதுதான் உண்மை. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதனால் நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. என்னால் முடிந்த வரை இந்த இலக்கை நோக்கி பயணிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.
இந்த கருத்தை முன்வைப்பதற்காக பல தயாரிப்பாளர்களின் சாதனைகளை அலசிப்பார்த்தேன். அது இந்த சங்கமத்தின் இலக்கை மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் என் லட்சியத்தையுமே திசைமாற்றிவிட்டது. அந்த திசைநோக்கிய பயணத்தில் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஒன்றை உறுதியாக எடுத்துக் காட்டியது.
அதுதான் திரைப்படத்தின் உண்மையான கேப்டன் தயாரிப்பாளர்தான் என்ற உண்மை! ஒவ்வொரு  படைப்பாளியும் தொழில்நுட்பக்கலைஞரும் தயாரிப்பாளரைச்  சார்ந்தே இருக்கின்றனர். ஆனால், யாரும்  தயாரிப்பாளரின் மேலாண்மையை புரிந்துகொள்வதோ ஒத்துக்கொள்வதோ இல்லை.
திரைப்படத்துறை அடுத்த கட்டத்திற்கு முன்னேற, தயாரிப்பாளர்கள் தங்கள் மதிப்பை திரும்ப பெறுவது அவசியம். இந்த நிலைப்பாட்டை நிரூபிக்க, புதிய தயாரிப்புகளை வெற்றிகரமாக முடிக்க, இணைந்து பணியாற்ற, தயாரிப்பாளர்கள் முன்வரவேண்டியது இன்றைய காலகட்டத்தின் தேவையாக இருக்கிறது.
இந்த எண்ணத்தின் வெற்றி படைப்புத் திறனும் இலக்கிய அறிவும் கொண்ட பல தயாரிப்பாளர்களை நம் திறைத்துறையில் உருவாக்கி வளர்க்கும். அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்களுக்கு தங்கள் அனுபவத்தை புதிய தலைமுறையுடன் பகிர்ந்து கொள்ளவும், புதிய தயாரிப்பாளர்களுக்கு திரைப்படத்தயாரிப்பு பற்றிய அடிப்படை விஷயங்கள் கற்றுக்கொள்ளவும் ஒரு தளமாக இருக்கும்.
நடிகர்களாகவேண்டும் என்றும், இயக்குநர்களாக வேண்டும் என்றும், தினம் தோறும் ஏராளமானோர் திரைப்பட தலைநகரங்களுக்கு இன்றும் படை எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். உதாரணத்திற்கு தமிழ்த்திரையுலகில் வெற்றி பெற தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து சென்னைக்கு தினமும் பலர் வருகின்றனர்.
ஏற்கனவே இங்கு இதுபோல வாய்ப்பைத் தேடிவந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். ஆனால் இவர்களுக்கு வாய்ப்பு தருவதற்கும் படங்களை தயாரிப்பதற்கும் அந்த அளவு எண்ணிக்கையில் தயாரிப்பாளர்கள்தான் இங்கு இல்லை. ஆகையினால் திரைத்துறைக்கு இப்போது தேவை நிறைய தயாரிப்பாளர்கள்தான்.
நல்ல, பல புதிய தயாரிப்பாளர்களை திரைத்துறைக்கு வரவழைக்கவும், ஏற்கனவே தயாரிப்பாளர்களாக இருந்து, தற்பொழுது படம் எடுக்காமல் ஒதுங்கி இருக்கும் பல அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்களை மீண்டும் படம் எடுக்க தூண்டிவிடவும் வேண்டும். அதுவே இந்த சங்கமத்தின் முதல் இலக்காக மாறியிருக்கிறது. அதற்கு தேவை முதலில் தயாரிப்பாளர் என்ற நிலைக்கு திரைத்துறையில் முதல் அந்தஸ்து வாங்கித் தருவதுதான். அதற்கு இப்படி ஒரு நூல் அவசியமாக இருக்கிறது.


Wednesday, 23 November 2016

திரைப்பட இலக்கியச் சங்கமம்




திரைப்பட இலக்கியச் சங்கமம்

திரையுலகிலும் அதைச்சார்ந்த தொழில்களிலும் லட்சக்கணக்கானவர்கள் வாழ்ந்து வருகின்றனர். திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று ஆரம்பித்து சினிமா தியேட்டர் ஆப்ரேட்டர்கள், தியேட்டரில் டிக்கட் கிழிப்பவர்கள் வரையிலும் இதில் அடங்குவர்.
இவர்கள் எல்லோரும் நன்றாக வாழ வேண்டும் என்றால் திரையுலகம் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். திரையுலகம் ஆரோக்கியமாக இருக்க, நிறைய திரைப்படங்கள் வெளிவரவும் வேண்டும், அவை வெற்றி பெறவும் வேண்டும்.
'இதுபோன்ற' திரைப்படங்கள்தான் வெற்றிபெறும் என்று யாராலும் சொல்ல முடிவதில்லை. அப்படி சொல்ல முடிந்திருந்தால் எல்லோரும் அதே போன்ற திரைப்படங்களை மட்டும் எடுத்து வெற்றி பெற்றிருப்பார்கள். படைப்பாளிகளின் கற்பனைக்கும் திறமைக்கும் சவால்விடுவதும், இத்துறையில் புது ரத்தத்தை ஓடவைப்பதும் யாருக்கும் தெரியாத 'அந்த' ரகசியம்தான்.
ஆனால் ஒரு உண்மை எல்லோருக்கும் தெரியும். அது 'நல்ல திரைப்படங்கள் என்றுமே தோல்வியடைந்ததில்லை' என்பதுதான்! என்னைப் பொருத்தவரை விருதுகள் வாங்குவதற்காகவே தயாரிக்கப்பட்ட 'கலைப்படம்' என்று போற்றப்படும் படங்கள் மட்டுமல்ல, வெகு ஜனங்களை மகிழ்விக்கும் தரமான ஜனரஞ்சகப்படங்களும் நல்லதிரைப்படங்களின் பட்டியலில் இருக்கின்றன.
அந்த வகையில் நிறைய நல்ல திரைப்படங்கள் உருவாக அடிப்படைத் தேவை நல்ல கதைகள்தான்! இதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். புதுமையான கதை, பழையதை புதுவிதமாக சொன்ன கதை, பிறமொழி படங்களிலிருந்து தழுவப்பட்ட அல்லது தூண்டப்பட்ட கதை என்று பல வகையிலும் நல்ல கதைகள் அனைத்து மொழிகளிலும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. புதுமையாக, சுயமாக சிந்தித்து உருவாக்கிய கதை என்று பகிரங்கமாக விளம்பரம் செய்து கொண்டே பிறமொழிகளிலிருந்து 'நகல்' எடுத்த கதைகளும் வெற்றி பெறுவது உண்டு.
ஆனால் நல்ல திரைக்கதைகளும், அதுவழி நல்ல படங்களும் உருவாக சிறந்த வழி இலக்கியங்களின் துணைகொண்டு திரைக்கதைகளை அமைப்பதுதான். இதன் பொருள் இலக்கியங்களை, குறிப்பாக நாவல்களை மட்டுமே திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது அல்ல. நல்ல இலக்கியங்களைப் படித்தால், தொடர்ந்து இலக்கியங்களுடன் தொடர்பு வைத்தால், அதன் தாக்கம் முழு திரைக்கதை அமைக்கும் போது மட்டுமல்ல, நல்ல கதாபாத்திரங்கள்தேர்ந்தெடுத்த காட்சிகள், குறிப்பிட்ட வசனங்கள் படைப்பதற்கு கூட உதவியாக இருக்கும். அனுபவம் வாய்ந்த பல பிரபல படைப்பாளிகளும் இதை உணர்ந்து செயலாற்றியிருக்கின்றனர். இன்றும் செயலாற்றி வருகின்றனர்!
இலக்கியங்களுடன் உள்ள தொடர்பை பலப்படுத்த இலக்கியவாதிகளுடன் தொடர்பு கொள்ளுவது மிகவும் நல்லது. திரைப்படங்களை குற்றம் சொல்லும் சில இலக்கியவாதிகள் குறை சொல்வதை விட்டுவிட்டு திரைப்பட படைப்பாளிகளுடன் இணைந்து தங்கள் கருத்துக்களை பரிமாற ஆரம்பித்தால் இலக்கியவாதிகளுக்கும் திரைப்பட கலைஞர்களுக்கும் இடையில் நிலவும் இடைவெளி இல்லாமல் போகும். பல நல்ல கதைகள் உருவாக உதவியாக இருக்கும்.
ஆனால் ஒரு கதையை திரைப்படமாக உருவாக்க இயக்குநரும் எழுத்தாளரும் மட்டும் உழைத்தால் முடியாது. தயாரிப்பாளர், நடிகர்கள் முதல் ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் போன்ற தொழில்நுட்பக் கலைஞர்களும், தயாரிப்பு நிர்வாகிகள், பத்திரிக்கைத் தொடர்பாளர்கள் போன்ற பலரும் இணைந்து பணியாற்றினால்தான் திரைப்படம் உருவாகும்.
இவர்கள் அனைவருடைய வாழ்விலும் ஒவ்வொரு படத்தின் வெற்றியும் தோல்வியும் தாக்கத்தை ஏற்படுத்துவதுண்டு. அதனாலேயே படங்கள் வெற்றிபெறவேண்டும் என்று இவர்கள் அனைவரும் ஆசைப்படுவதும், அவற்றின் கதையிலும் தொழில்நுட்பத்திலும் அக்கறை கொள்வதும் நியாயம்தான். அவர்களுடைய எண்ணங்களையும் அபிப்ராயங்களையும் படைப்பாளிகள் தெரிந்து கொண்டால் படங்களில் வரும் குறைகளை களையவும் நிறைகளை வளர்க்கவும் ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆனால் வேலை செய்யும் பொழுதும் அல்லது தொழிற்சங்க கூட்டங்களிலும் அல்லாமல் இவர்கள் ஒன்று கூடுவதற்கான வாய்ப்பு யாருக்கும் கிடைப்பதில்லை. அதனால் திரைப்படங்களைப்பற்றி திரைத்துறையில் இருப்பவர்களே என்ன நினைக்கிறார்கள் என்று படைப்பாளிகளுக்கு தெரியவும் வாய்ப்பில்லாமல் போகிறது. இந்தக்குறையை தீர்க்கவேண்டுமென்றால் திரைத்துறையினர் அவ்வப்போது ஒன்று கூடவும், மனம்விட்டு பேசவும், மற்றவர்கள் பேசுவதை கேட்கவும் வாய்ப்பு கிட்டவேண்டும். அதற்கு திரைத்துறையினருக்கு மத்தியில் ஒரு நட்பு வட்டம் வளரவேண்டும்.
முன்பு பல படங்கள் வெற்றிபெற்று நூறாவது நாள் விழா, வெள்ளிவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. அந்நேரங்களில் திரைத்துறையினர் இதுபோல சந்தித்து வந்தனர். ஆனால் காலப்போக்கில் பலமாற்றங்கள் வர, இப்போது நூறாவது நாள் விழா, வெள்ளிவிழா போன்றவை மிகவும் அரிதாகிவிட்டனதிரைப்படங்களுக்கான பூஜையும், பாடல்கள் வெளியீட்டு விழாவும் மட்டும்தான் தற்பொழுது நடந்து வருகின். பூஜை போடும்போது அந்த  திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் அந்த படத்தின் ஆரம்ப கட்டத்தில் பணியாற்றும் கலைஞர்களும், அவர்களுக்கு மிகநெருக்கமானவர்களும், விருந்தினர்களும், மட்டுமே பங்கு பெறுவதுதான் வழக்கம்.
பாடல்கள் வெளியீடு இன்றைய காலகட்டத்தில் அனேகமாக திரையரங்குகளில் மட்டுமே நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சிகள் வழக்கம் போல தாமதமாகவே ஆரம்பிக்கும். அதற்குள் திரையரங்கில் அடுத்த காட்சி ஆரம்பிக்க நேரமாகி விடும். அதனாலேயே அவசரமாக நிகழ்ச்சிகளை நடத்தி முடித்து விடுவார்கள். அதற்குள் திரையரங்க ஊழியர்கள் 'பணிவுடன்' அனைவரையும் அங்கிருந்து துரத்த ஆரம்பித்து விடுவார்கள். பிறகு எப்படி மற்ற படங்களைப்பற்றியும், மற்ற  விஷயங்களைப் பற்றியும் பேசுவது?
உதவி இயக்குநராக கனவுகளுடன் வந்த அனைவரும் திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆசைப்படுவதுண்டு. இலக்கிய கூட்டங்களிலும், திரைவிழாக்களிலும் இத்துறைகளில் வெற்றிபெற்றவர்களை பார்க்கவும் அவர்கள் பேசுவதைக் கேட்கவும் ஆர்வம் கொண்டிருப்பதுண்டு.
ஆனால் வருடங்கள் கடந்து செல்லச்செல்ல, இதுபோன்ற விழாக்கள் குறைந்து விட்டதினால் இப்படி தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்குபெறவோ, வெற்றி பெற்றவர்களின் பேச்சைக் கேட்கவோ முடியாமல் போய்விடுகிறது. இது பலருடைய மனதிலும் ஒரு ஆதங்கமாகவே வளர்ந்து வந்திருக்கிறது. இதைத் தவிர்க்க யாராவது இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வந்தால் அனைவருக்கும் உதவியாக இருக்கும் என்று தெரியவந்தது. அதன் பலன்தான் திரைப்பட இலக்கியச் சங்கமம்!
தற்பொழுது இந்த திரைப்பட இலக்கியச் சங்கமம் ஐந்து வருடங்களுக்கு மேலாக  நடத்தப்பட்டு வருகிறது. அதில் வெற்றியும் கண்டு வருகிறது. ஆனால் இதன் முழுவெற்றி என்பது மேடையில் சிறப்பு விருந்தினர்கள் வருவது மட்டுமல்ல (அதுவும் வெற்றியின் ஒரு பகுதிதான் என்றாலும்) இந்த சங்கமத்திற்கு பார்வையாளர்களாக நிறையபேர் வந்து கூடுவதுதான்! குறிப்பாக வெற்றிபெற்றவர்கள் கூடுவதுதான் சங்கமத்தின் உண்மையான வெற்றியாகும். அதுபோலவே இன்னும் நிறைய பேர் இதுபோன்ற முயற்சிகளை முன்னெடுக்கும்போதுதான் இது முழுமையான வெற்றியாக மாறும்.
திரைப்படமும் இலக்கியமும் இணைய வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புபவர்கள் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டால், “அவர்களே வருகிறார்களே, அப்படியென்றால் நாமும் வருவோம்என்று மற்றவர்களும் வர ஆரம்பிப்பார்கள். வேறு சிலரும் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்த ஆரம்பிப்பார்கள். இப்படி திரைத்துறையினர் மற்றும் இலக்கியத்துறையினர் மத்தியில் தொடர்ந்து ஆரோக்கியமான உரையாடல்களும் சந்திப்புகளும் நடக்க வாய்ப்பிருக்கிறது. அப்படித்தான் இதுபோன்ற நிகழ்வுகளின் நோக்கம் நிறைவேறும்.

இந்த நிகழ்வுகளால் இதை நடத்துபவர்களுக்கு என்ன என்ன லாபம், நஷ்டம் என்று யோசிக்கக் கூடாது. (அப்படி யோசிப்பதுதான் சில மனிதர்களின் இயல்பு). பங்குபெறுவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று யோசிக்க வேண்டும். திரைப்படம் மற்றும் இலக்கிய உலக நண்பர்கள் அனைவரும் மாதம் ஒருமுறையாவது சந்தித்தால் அவர்களுக்கு மத்தியில் ஒரு புரிதல் உருவாகும், உறவு பலப்படும்.