Monday, 24 October 2016
திருக்குறள் விண்ணப்பம்
திருக்குறளை நேசிக்கும் திருவாளர்களே…
திரைப்படத்தையும் இலக்கியத்தையும் நேசிக்கும் நண்பர்களே..
நான் திரைப்பட இலக்கியச் சங்கமத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே ‘எளியகுறள்’ என்ற பெயரில் திருக்குறளுக்கு உரை எழுதி புத்தகமாக வெளியிட்டிருந்தேன்.
பதிப்புத்தொழில் பற்றி தெரியாமலேயே அன்று வெளியிட்டதால் அதை சரயாக விளம்பரம் செய்யாமலும் வியாபாரம் செய்யாமலும் அப்படியே விட்டுவிட்டேன்.
மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் ஒருமுறை குறிப்பிட்டதுபோல மனைவியின் தாலியை அடகுவைத்து புத்தகம் போட்டால் அதை அனைவருக்கும் இலவசமாக கொடுக்கவேண்டிய கட்டாயத்தில்தான் நானும் இருந்தேன். இதில் கவிதை புத்தகத்திற்கும் திருக்குறள் உரைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை பிறகுதான் நான் புரிந்துகொண்டேன். (இதில் நான் எழுதிய உரையும் ஒரு விதத்தில் கவிதைகள்தான்!)
இன்று திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் வளர்ச்சிக்காக ‘திரைப்படம், தயாரிப்பாளர்களின் கலை’ என்று புத்தகத்தை வெளியிட முடிவுசெய்தபின்தான் தற்பொழுது இந்த ‘எளியகுறள்’ பற்றி நினைவுக்கு வந்தது.
காரணம் அடுத்த புத்தகத்தை அச்சிடுவதற்கும், சங்கமத்தின் சார்பில் கூட்டங்களை நடத்துவதற்கும் பணம் தேவை. அதற்கு என்னிடம் உள்ள ஒரே வழி இந்த ‘எளியகுறள்’ தான்.
இந்த நூலை அச்சிட்ட விலைக்கே தற்பொழுது விற்க முடிவுசெய்துள்ளேன். தட்டச்சு செய்வதற்கும், வடிவமைத்ததற்கும், அச்சிடுவதற்கும் செலவு செய்த பணம் கிடைத்தால் போதும். அதைவைத்துக்கொண்டு அடுத்த புத்தகத்தை பதிப்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.
அதனால் 160 ரூபாய் விலைகொண்ட இந்த நூலை குறைந்த பட்சம் 50 ரூபாய்க்கு வாங்கி உதவிசெய்ய வேண்டுகிறேன். (அதற்கு மேல் தந்தால் அவர்கள் இச்சங்கமத்தின் புரவலர்கள்தான்!)
இதையே வேறுவிதமாக சொன்னால், திரைப்பட இலக்கியச் சங்கமத்திற்காகவும் ‘திரைப்படம், தயாரிப்பாளர்களின் கலை’ என்ற புத்தகத்தை பதிப்பிப்பதற்காகவும் இச்சங்கமத்தின் புரவலர்களாக உதவிசெய்யுங்கள். அப்படி உதவி செய்யும் அனைவருக்கும் ‘எளியகுறள்’ என்ற புத்தகத்தை ‘நன்கொடை ரசீதாக’ தருகிறேன்.
எப்படி நினைத்தாலும் பரவாயில்லை, நண்பர்களே இந்த புத்தகத்தை வாங்கி உதவுங்கள். (உங்களுக்காகவும் வாங்கலாம், மற்றவர்களுக்கு பரிசாக கொடுக்கவும் வாங்கலாம்)
முதல் புரவலர்
நமது திரைப்பட இலக்கியச் சங்கமத்தை நடத்துவதற்காக ஏற்கனவே சில நலம்விரும்பிகளும் நண்பர்களும் எனக்கு அவ்வப்போது உதவிசெய்திருக்கின்றனர். அவர்களை இச்சங்கமத்தின் புரவலர்களாகத்தான் நான் நினைத்து வருகிறேன்.
இருப்பினும் இந்த சங்கமத்தை நடத்துவதற்கு என்றும் அதற்காக புத்தகங்களை பதிப்பிக்கிறேன் என்றும் சொல்லி மற்றவர்களிடம் உதவி கேட்பது இதுதான் முதல் முறை.
முகநூலில் இந்த வேண்டுகோளை வைத்தேனே தவிர நேரடியாக யாரிடமும் இன்னும் கேட்கவில்லை. காரணம், வழக்கமாக என்னிடம் உள்ள தயக்கமும் கூச்சமும்தான். அதுவுமின்றி என்னுடைய படவேலைகளை ஆரம்பிப்பதற்கு இது தடையாகி மாறிவிடுமா என்ற குழப்பமும் இருந்தது.
இந்த நிலையில்தான் நேற்று (சனிக்கிழமை) டிஸ்கவரியில் ஒரு கூட்டத்திற்கு சென்றேன். அங்கு வந்திருந்த கீதாஞ்சலி பிரியதர்சினி அம்மா அவர்கள் என்னுடைய முகநூல் வேண்டுகோளை பார்த்ததாக குறிப்பிட்டு ‘திரைப்படம், தயாரிப்பாளர்களின் கலை’ எனும் புத்தகத்தை பதிப்பிக்க உதவியாக இருக்கட்டும் என்று ஒரு தொகையை தந்தார். தொகை சிறியதா பெரியதா என்பது இங்கே முக்கியமல்ல. இந்த தொகை தான் என்னுடைய தனிப்பட்ட நட்பு வட்டத்தைத் தாண்டிய ஒருவரிடமிருந்து எனக்கு கிடைக்கும் முதல் அன்பளிப்பு!
ஆகையால் இவர்தான் உண்மையில் திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் முதல் புரவலர்!
இவருடைய இந்த அன்பளிப்பால் இன்று நான் மிகவும் உற்சாகமாகி, தயக்கங்களையும் குழப்பங்களையும் விட்டுவிட்டு என்னுடைய படவேலைகளுக்கு இணையாக இந்த சங்கமத்தின் வேலைகளையும் தொடர்ந்து செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.
இந்த உற்சாகத்தைத் தந்த முதல் புரவலர் கீதாஞ்சலி அம்மாவுக்கு நன்றிகள்!
Subscribe to:
Posts (Atom)