சாதாரணமாகவே ஒரு “ரஜினி படம்“ வெளியாகும்போது, ரசிகர்கள் மத்தியில் அதன்மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருப்பது இயல்பான ஒரு விஷயம்தான். அத்துடன் அந்த படத்தைப்பற்றிய விளம்பரங்களும் செய்திகளும் பெருவாரியாக வரும்போது, அந்த எதிர்பார்ப்பும் அதன் உச்சத்தை எட்டுகிறது. அதைத்தான் கடந்த வாரத்தில் “கபாலி“ வெளியாகும் போது காணப்பட்டது.
இது ஒரு ரஜினி படமாக இருந்தாலும், இந்த படத்தின் தரமும் உள்ளடக்கமும் முற்றிலுமாக அதன் இயக்குநர் பா.ரஞ்சித்தையே சாரும். பொதுமக்களின் எதிர்பார்ப்பை புரிந்துகொள்ளவேண்டியதும், அதை பூர்த்தி செய்யவேண்டியதும் அவருடைய பொறுப்புதான்.
கண்டிப்பாக ரஜினியேதான் இந்த இயக்குநரை தேர்ந்தெடுத்ததும் இந்த கதையில் நடிக்க சம்மதித்தும் இருக்கிறார். இது ஒரு வெற்றிப்படமாகவோ தோல்விப்படமாகவோ இருக்கலாம். அது இங்கு ஒரு விஷயமே அல்ல. அது பார்வையாளர்களை பொறுத்தது. அவர்களுக்கு படம் பிடித்திருந்தால், அவர்கள் அதை சூப்பர் ஹிட்டாக மாற்றிவிடுவார்கள். இல்லையெனில், யதேச்சையாகவே இந்த படம் தோல்வியை தழுவும்.
ஒரு சில தோல்விகளுக்குப் பிறகு, ரஜினி தன்னுடைய அடுத்த படத்தில் ஒரு இளம் இயக்குநருடன் வேலைசெய்யலாம் என்ற ஒரு நல்ல முடிவை எடுத்திருக்கிறார். எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை என்றாலும் இது ஒரு எல்லைவரை வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குநரான பா.ரஞ்சித் இந்த படத்தில் சில நல்ல விஷயங்களை செய்திருக்கிறார். வழக்கமாக ரஜினி படங்களுடன் இணைத்து காணப்படும் பல பிரபல பெயர்கள் இல்லாமலேயே ரஞ்சித் ஒரு ரஜினி படத்தை எடுத்துக் காட்டியிருக்கிறார். அது இந்த படத்திற்கு ஒரு புது வண்ணத்தை கொடுத்திருக்கிறது. தன்னுடைய முந்தைய படங்களில் நடித்த பல நடிகர்களை ரஞ்சித் இதிலும் பயன்படுத்தியிருக்கிறார். இது ஒரு குறையாக தெரியவில்லை.
எந்த ஒரு பார்வையாளனும் தனிஷ்கா, ராதிகா ஆப்தே, தினேஷ், ஜான் விஜய் போன்றோரின் நடிப்பை பாராட்டாமல் இருக்க மாட்டார்கள். ரஞ்சித் தனக்கு பரிச்சயமான தொழில்நுட்பக் கலைஞர்களையே இதிலும் பயன்படுத்தியிருக்கிறார். அதுவும் அவருக்கு பெரும் உதவிகரமாக இருந்திருக்கிறது.
ரஞ்சித் பழைய ரஜினியை ரசிகர்களுக்கு மீண்டும் காட்டித்தந்திருக்கிறார். அவருடை நடிப்புத் திறமையை வேறு ஒரு கோணத்தில் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். பழைய ரஜினியை பார்க்கும் அனைவரும் சந்தோஷப்படுவார்கள். ஆனால் அதுமட்டும் போதுமா?
ஒரு ரஜினி படத்தில் பார்வையாளர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள். எதற்காக ஆரம்பக் காட்சியை பார்க்க ரசிகர்கள் நூறு ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட டிக்கட்டை ஆயிரம் ரூபாய் அளவுக்கெல்லாம் விலை கொடுத்து வாங்குகிறார்கள். அது தன்னுடைய தவறு அல்ல என்று இயக்குநர் சொல்லிவிட முடியாது. இந்த விஷயத்தில் அவருக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது அல்லவா? (எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினிக்கும் மற்ற உச்ச நட்சத்திரங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை கணக்கில் கொண்டிருக்கவேண்டும்.)
இந்த படத்தில் ரஜினியின் சிறப்பை பயன்படுத்துவதில் ரஞ்சித் முற்றிலுமாக தவறவிட்டிருக்கிறார். பொதுவான ரசிகர்களை கவர்ந்திழுப்பதில் ரஜினிக்கு இருக்கும் சிறப்பு திறமையை அவர் சரியாக பயன்படுத்தவில்லை.
அது அவருடைய பாணி இல்லை என்று ரஞ்சித் சொல்லக்கூடும். அப்படியென்றால், அதற்கு இந்த கதையின் அடிப்படையிலேயே தகுந்த திரைக்கதை அமைப்பதற்கு அவர் வேறு எழுத்தாளர்களை பயன்படுத்தியிருக்க வேண்டும். ரஜினியை ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் காட்டவேண்டும் என்று அவர் விரும்பினால், அவர் கடுமையாக உழைத்திருக்க வேண்டும்.
அவருடைய முந்தைய படங்கள் வெற்றி பெற்றதனாலும், அவற்றிற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்ததனாலும் மட்டும்தான் அவருக்கு ஒரு ரஜினி படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இயக்குநர் சொல்லியபடி எப்படியும் நடிக்க ரஜினி தயாராக இறங்கி வந்திருக்கிறார். அது அவருடைய பெருந்தன்மையைத்தான் காட்டுகிறது. இந்த வாய்ப்பை பெற்றுவிட்ட இயக்குநர் என்ன செய்தார்? இப்படி ஒரு பெரிய படத்தை எடுக்கும் அளவுக்கு தன்னைத்தானே வளர்த்துக்கொள்ள அவர் ஏதாவது முயற்சியை மேற்கொண்டாரா?
இந்த படத்தை எடுக்கும்போது இவர் இரு படங்களில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த இயக்குநர் என்பதையே மறந்துவிட்டார் போல தெரிகிறது. அனுபவம் இல்லாத ஒருவருக்கு புதியதாக படம் இயக்க வாய்ப்பு கிடைத்ததுபோலத்தான் இவர் திரைக்கதை எழுத ஆரம்பித்திருக்கிறார். உடனடியாக திரைக்கதையை எழுதி படபிடிப்பை துவங்கவேண்டும் என்று அவசரப்பட்டதுபோலவே தெரிகிறது.
பலரும் இந்த படத்தின் கதையின் பின்னணி தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு தொடர்பே இல்லாத ஒன்று என கூறுகிறார்கள். இந்த வாதத்தை ஏற்க முடியாது. ரஜினி படங்கள் கேரளம், கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் வெற்றிபெறுவதுண்டு. அப்படியென்றால் அங்குள்ள ரசிகர்கள் இதற்கு முந்தைய படங்களின் கதைகளில் அதுபோல தொடர்பு கொண்டவர்களா?
மலேசிய தமிழர்களின் கதையை இயக்குநர் அழுத்தமாக சொல்லவில்லை. அதுதான் உண்மை. இந்த திரைக்கதையின் அடித்தளம் என்ன? அதன் மையக்கருத்தை இவர் காட்சிகளில் உட்படுத்தி இருக்கிறாரா? இதுபோன்ற கேள்விகளைத்தான் இயக்குநர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அதிர்ஷ்டவசமாகவோ இல்லையோ, அனைவரும் இந்த படத்தில் வரும் சில வசனங்களை பின்பற்றி உயர்ந்துள்ள அரசியல் விவாதங்களுக்குப் பின்னால் சென்று விட்டனர். அதனால், யாரும் இந்த படத்தின் திரைக்கதை அல்லது படம் எடுத்த முறை போன்றவற்றில் உள்ள குறைகளைப்பற்றி விவாதிப்பதில்லை.
இயக்குநர் இந்த படத்திற்காக ஒரு கேங்ஸ்டர் (அடியாட்கள் அல்லது ரவுடிகள்) கதையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார். அதை நாம் கேள்வி கேட்க முடியாது. இந்த படத்தில் வரும் அநேகமான கதாபாத்திரங்களும் கொலைகாரர்கள்தான். பல காட்சிகளும் வன்முறைக்கு உதாரணமாகவே காட்டப்பட்டிருக்கின்றன. அறிமுகப் பாடலில், ரஜினி ஒரு கேக்கை வெட்டுவதைக்கூட வன்முறைக்கு அடையாளமாகத்தான் காட்டியிருக்கிறார். பிற்பகுதியில் ஒரு கை உடலிலிருந்து வெட்டப்பட்டிருப்பதை காட்டுகிறார்.
இந்த படத்தின் நாயகனான ரஜினியே திரையில் பத்துக்கும் மேற்பட்டவர்களை கொடூரமாக கொலைசெய்கிறார். அவருடைய மகள் அதைவிட அதிகமான மனிதர்களை கொலை செய்கிறார். இறுதிகட்ட காட்சியில் வில்லனின் உள்ளங்கை குண்டடிபட்டு வெடித்துச் சிதறுகிறது. வை திஸ் கொலவெறி? (இருந்தும் இதன் தயாரிப்பாளர் இதற்காக யு சான்றிதழ் வாங்கியிருக்கிறார்! இதுதான் தயாரிப்பாளர்கள் சங்க தலைவரின் பலம். ரஜினி போன்ற பெரிய நட்சத்திரங்களின் கால்ஷீட் கிடைப்பதற்கும் கபாலி போன்ற படங்களுக்கு யு சான்றிதழ் வாங்குவதற்கும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆவதுதான் சிறந்த வழி.)
இந்த படம் வில்லன்கள் பற்றிய பின்னணி குறிப்புரையில் இருந்து ஆரம்பமாகிறது. இதுபோன்ற படங்களுக்கு இது ஒரு மோசமான ஆரம்பமாகவே தோன்றுகிறது.
ஆனால் பறவைகள் பற்றி வரும் ”உன்னுடைய கருணைதான் அவங்களுக்கு மிகவும் கொடூரமானது“ போன்ற வசனங்கள் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரப் போகிறது என்ற ஒரு எண்ணத்தை பார்வையாளர்களின் மனதில் உருவாக்குகிறது.
அதை தொடர்ந்து வரும் “கபாலிடா“ வசனம் வழக்கமான ரஜினி பஞ்ச் தான். அது படத்தின் வேகத்தை கூட்ட ஆரம்பிக்கிறது. அதற்குப் பிறகுதான் இந்த படம் தடம் மாறி இலக்கே இல்லாமல் பயணிக்க ஆரம்பிக்கிறது.
ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு ஃபிரேமும் துணைநடிகர்களால் நிரம்பி வழிகிறது. அந்த கூட்டமே முக்கிய பாத்திரங்கள் மீது உள்ள பார்வைக்கு இடைஞ்சலாக வருகிறது. (பணம் நிறைய இருக்கிறது என்ற ஒரே காரணத்தினால், இப்படியெல்லாம் அநாவசியமாக செலவு செய்யக்கூடாது.)
ரஜினி வீட்டுக்கு வரும் காட்சியில், ராதிகா ஆப்தே அவரை பல அறைகளுக்கு அழைத்துச் செல்கிறார். கடைசியில் அது மனபிராந்தி என்று அவருக்கு புரிகிறது. இது வழக்கமாக ரஜினி படங்களில் காணமுடியாத ஒரு அழகான காட்சி. இதுபோல படம் முழுவதும் சில காட்சிகள் ஆங்காங்கே வருகின்றன. அவற்றிற்காக ரஞ்சித்திற்கு நன்றி!
மலேசிய மக்களை காப்பாற்றுபவர்கள் அடியாட்கள் (கேங்ஸ்டர்ஸ்) தான் என்று இயக்குநர் சொல்கிறார். இது காட்சிகளின் வழியாக நம்பும்படியாக இல்லை. அடியாட்கள் வரும் அனைத்து காட்சிகள், நாசர் தோன்றி பிரசங்கம் செய்யும் காட்சிகள் உட்பட, எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமலே செல்கின்றன.
இதற்கிடையில், கோலாவின் விலை போன்ற சில அரசியல் கருத்துக்களை இயக்குநர் முன்வைக்கிறார்.
இந்த கதையின் அடித்தளம் என்பது கபாலி மலேசியத் தமிழ் மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதுதான். ஆனால், இயக்குநர் அதிகநேரத்தையும் கபாலியின் மனைவியை தேடுவதற்காகவே பயன்படுத்தியிருக்கிறார். இதை ஒரு புதுமையாக அவர் நினைத்திருக்கலாம். அப்படியென்றால், அவர் இந்த படத்தை கபாலியின் சொந்தக்கதையாக ஆரம்பித்திருக்க வேண்டும். அத்துடன் அடியாட்கள் செயல்பாடுகள் வெறும் பின்னணியாக மட்டுமே வந்திருக்கவேண்டும்.
கபாலி நடத்தும் மறுவாழ்வு பள்ளியில் இருக்கும் இளைஞர்களின் குடும்பம் மற்றும் வாழ்க்கைத்தரம் பற்றி காட்டியிருக்கவேண்டும். இயக்குநர் அவற்றை மொத்தமாகவே தவிர்த்துவிட்டார். உண்மையில் இந்த கதையை வலுப்படுத்துவதற்கும், நம்பும்படியாக மாற்றுவதற்கும் அதுதான் முக்கியமாக தேவைப்படுகிறது.
(கோட் அணிவதை இந்த படத்தின் முக்கிய அம்சமாக இயக்குநர் பயன்படுத்தியிருக்கிறார். அது, பொதுமக்கள் மத்தியில் ஒரு விவாத பொருளாக மாறியிருந்தாலும், அவற்றைப்பற்றிய குறிப்புகள் தவிர்க்கபட்டிருக்கிறது.)
இது அடியாட்கள் படமாக இருந்தாலும், இயக்குநர் எங்கு தேவை என்று விரும்பும் இடங்களில் மட்டும் தான் போலீஸ் வருகிறது. உண்மையில், இதுபோன்ற கதைகளில், காட்சிகளின் தேவைக்கு ஏற்பத்தான் இவை நடக்கவேண்டும்.
வேலு என்ற கதாபாத்திரத்தை, கபாலியின் மகளை வளர்க்கும் இன்னொரு அடியாளை, வயதான காலத்தில் உடல் செயல் இழந்தவராக காட்டுவது, இது தமிழ் சினிமாவில் நூறாவது முறையாக இருக்கலாம். இதுபோல பல காட்சிகள் இந்த படத்தில் வருகின்றன.
ரஜினியை காப்பாற்றுமிடத்தில் இயக்குநர் தன்ஷிகாவிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். இது மிகவும் வரவேற்புக்குரியது! ஆனால், அவர் ரஜினியிடம் துப்பாக்கியை வீசிக்
கொடுத்தபின்தான் ரஜினி உண்மையாக ஆபத்தில் அகப்படுகிறார். தன்ஷிகா அந்த நேரத்தில் துப்பாக்கியை
வீசியிருந்தால், அது மேலும் வலுவானதாக தெரிந்திருக்கும்.
இதுபோல இயக்குநர் பல இடங்களில் தவறு செய்திருக்கிறார். மற்றொரு உதாரணம், தமிழ்நாட்டில் ரஜினி ரவுடிகளால் தாக்கப்படும் காட்சி. கிஷோர் தன்னுடைய அடியாட்களுக்கு போன்செய்து உத்தரவிடுவார், அதற்குப்பின்தான் அந்த காட்சி வரும். கிஷோர் போன்செய்யும் காட்சி தவிர்க்கப்பட்டிருந்தால், அந்த தாக்குதல் பார்ப்பவர்கள் மனதில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். (இவை இயக்குநருக்கு அதீத நம்பிக்கை இருப்பதால் அல்லது அனுபவம் வாய்ந்த ஒரு ஸ்க்ரிப்ட் டாக்டர் இல்லாததால் தான் நடந்திருக்கிறது.
ரஜினி மனைவியை தேடுவது முக்கிய கதைக்களத்தை விட்டு விலகி வந்தாலும், (குறிப்பாக தமிழ்நாட்டில் நடக்கும் காட்சிகள்), இந்த தொடரில் வரும் அனைத்துக் காட்சிகளும் ரஜினியின் நடிப்புத்திறமையை வெளிக்காட்டுவதாகவே அமைந்திருக்கிறது. நாம் பல வருடங்களாக பார்க்கத் தவறிய, திறமையான, பல பரிமாணங்களைக் கொண்ட “ஆறிலிருந்து அறுபதுவரை“ ரஜினியை இது நினைவூட்டுகிறது. அதற்காக ஹாட்ஸ் ஆப் டு ரஞ்சித்!
தமிழ்நாட்டுக் காட்சிகளுக்குப் பிறகு, இந்த படம் வழக்கமாக எண்பதுகளில் வெளிவந்த ஒவ்வொரு படத்தின் பழைமைப் பாணியில் மொத்தமாக விழுந்து விடுகிறது. அங்கே எந்த காட்சியிலும் ரஞ்சித்தை காண முடியவில்லை. இந்த பகுதியில் ரஜினி கோட் அணிவதுபற்றியும் காலுக்கு மேல் காலை ஏற்றி அமருவேன் என்று சொல்லும் வசனத்தில் மட்டும்தான் ரஞ்சித்தின் கைவண்ணம் தெரிகிறது.
அதுவும் சமூக வலைதளங்களில் உருவாக்கிய அளவுக்கு தாக்கத்தை தியேட்டரில் ஏற்படுத்தவில்லை. பேஸ்புக்கிற்கும் டிவிட்டருக்கும் நன்றிகள்!
இந்த படத்தில் இயக்குநர் செய்திருக்கும் ஒரே பணி, தன்னுடைய அரசியல் பார்வையை வசனங்கள் மூலமாக ஆங்காங்கே சொல்லியது மட்டும்தான். கண்டிப்பாக ரஜினியும் அதை உணர்ந்தேதான் அந்த வசனங்களை பேசியிருப்பார். அந்த வசனங்கள் பொதுவெளியில் எங்கும் ஒரு விவாதத்திற்கு தலைப்பாக மாறியிருக்கிறது.
ரஜினி படத்தில் வரும் சிறு வசனங்களே இப்படி ஒரு சமூக விவாதத்தை ஏற்படுத்துகிறது என்றால், இந்த படத்தை நல்லதொரு சமூகக் கருத்துடனும், குறையில்லாத ஒரு திரைக்கதையுடனும் படைத்திருந்தால், அதன் தாக்கம் எப்படி இருந்திருக்கும்!
வழக்கமாக ரஜினியின் படங்களை இயக்கும் இயக்குநர்கள் இதுபோன்ற கதைகளில் ஆர்வம் காட்டமாட்டார்கள்.
அப்படியொரு படத்தை எடுக்க ரஞ்சித்திற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எப்படி அதை பயன்படுத்துவது என்று தெரியாமலோ, அல்லது கடுமையாக உழைக்காமலோ அந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்த தவறவிட்டிருக்கிறார்.
மொத்தத்தில், பா.ரஞ்சித் விலை உயர்ந்த பாசுமதி அரிசியை (ரஜினி) வைத்துக்கொண்டு நல்ல ஒரு தயிர் சாதத்தை (கபாலி) சமைத்திருக்கிறார்!
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ரஞ்சித்.
No comments:
Post a Comment
Let others know your opinions about this post