Thursday, 11 August 2016

அப்பா



தயாரிப்பாளரும் இயக்குநருமான சமுத்திரக்கனி தன்னுடைய புதிய படமானஅப்பாவில் பார்வையாளர்களுக்கு சொல்வதற்காக ஒரு நல்ல சமூக கருத்தை தேர்ந்தெடுத்துள்ளார். சமீப காலமாக அவர் நடித்துவரும் அனைத்து படங்களிலும் சமூகத்திற்கான பல கருத்துக்களை இவர் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார். அப்படியிருக்க தான் சொந்தமாக தயாரிக்கும் படத்தில் சமூக அறிவுரை சொல்பவராக ஒரு முழுநீள கதாபாத்திரத்தில் வருவது அதிசயமொன்றும் இல்லை.
சமுத்திரக்கனி ஒரு தயாரிப்பாளராக தன் பணியை நன்றாகவே செய்திருக்கிறார். பொருத்தமான நடிகர்களையும், தகுந்த தொழில்நுட்பக் கலைஞர்களையும் கொண்டுவந்து இந்த படத்தை பார்க்கக்கூடிய ஒன்றாகவே மாற்றியிருக்கிறார். அதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. அத்துடன் இயக்குநர் சமுத்திரக்கனி அவர்களின் திறமையை கச்சிதமாக ஒருங்கிணைத்து வெற்றியும் பெற்றிருக்கிறார்.
நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்கள் பணியை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். குழுந்தைகள் கதாபாத்திரங்களில் வருபவர்களில் தொடங்கி பெற்றோர்களாக வரும் நடிகர்கள் வரை அனைவரும் இந்த விஷயத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியாகவே இருக்கின்றனர். இவை அனைத்தும் இந்த படத்தை ஒரு நல்ல படமாக மாற்றியிருக்கிறது. எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சமுத்திரக்கனிக்கு பாராட்டுக்கள்!
இந்த படத்தில், இயக்குநர் பள்ளிக்கூடங்கள் மற்றும் குழந்தை வளர்ப்பு பற்றிய ஒரு சமூக கருத்தை சொல்லியிருக்கிறார். குழந்தைப் பேறு (பிரசவம்) முதல் கல்விமுறை வரை அனைத்து விஷயங்கள் பற்றியும், குறிப்பாக தனியார் பள்ளிக் கல்வி முறையின் தாக்கம் பற்றி இந்த படம் பேசுகிறது.
இந்த விஷயம் பற்றிய சில உண்மைகளை தைரியமாகவும் அனைவருக்கும் புரியும்படியும் இயக்குநர் விளக்கியிருக்கிறார். இதற்கான பல உதாரணங்களை நாம் இதில் காணலாம். அவை எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதால் தற்பொழுது அவற்றை விலக்கி வைத்து, பார்வையாளர்களே அவற்றை திரையில் காண விட்டு வைப்போம்.
இந்த படத்தை கவனமாக பார்க்கும்பொழுது, தான் ஒரு படத்தை எடுக்கிறோம் என்பதை இயக்குநர் மறந்து விட்டாரோ என்றே எனக்குத் தோன்றுகிறது! முக்கியமாக முதல் பாதியில், படம் பார்ப்பவர்கள் அனைவரும் தாங்கள் ஒரு மருத்துவர் முன்னால் குழுந்தை வளர்ப்பு பற்றிய கவுன்சிலிங்கில் அமர்ந்திருப்பதைப் போலவே உணர்கின்றனர்.
இயக்குநரே இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வந்து, அவர் அறிமுகமாகும் முதல் காட்சியிலிருந்து தன்னுடைய பிரசங்கத்தை (அறிவுரை) நடத்துகிறார். அதுதான் அந்த கதாபாத்திரத்தின் இயல்பு என்று இயக்குநர் ஒரு வசனத்தில் குறிப்பிட்டு சொல்கிறார். இந்த படத்தின் இரண்டாவது பெரிய பாத்திரமான தம்பி ராமய்யா நடித்த கதாபாத்திரம் இதனாலேயே இவருடைய பக்கத்து வீட்டிலிருந்து ஓடிவிடுகிறார். ஆனால் பார்வையாளர்களுக்கு அப்படி திரையரங்கைவிட்டு தப்பியோட எந்த வழியும் இல்லை. (டிக்கட்டுக்கு காசு கொடுத்துட்டாங்கல்லே!)
ஒரு மாணவன் தற்கொலை செய்தான் என்ற செய்தி வரும் காட்சியில் இருந்து தான் உண்மையில் இந்த படம் வேகத்துடன் கிளம்புகிறது. அது டாக்டர் சசிகுமார் அறிமுகமாகும் காட்சி வரை தொடருகிறது. (இங்கே சமுத்திரக்கனிக்கு பதிலாக சசிகுமார் அறிவுரை சொல்ல ஆரம்பிக்கிறார்.) இந்த படம், இந்த பகுதியில் உண்மையிலேயே நல்ல, விறுவிறுப்பான ஒன்றாக இருக்கிறது. இந்த பகுதியில் வரும் கச்சிதமான திரைக்கதைக்கும், நல்ல காட்சியமைப்புக்குமாக பார்வையாளர்கள் இந்த படத்தில் வரும் மற்ற அனைத்து தவறுகளையும் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த பகுதி அந்த அனைத்து குறைகளையும் பார்வையாளரின் மனதில் இருந்து மறக்கச் செய்கிறது. அதுதான் இந்த படத்தின் இயக்குநருடைய உண்மையான வெற்றி.
ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, அறிவுரை சொல்வதும் சம்மதிக்கச் செய்வதும்தான் சமுத்திரக்கனியின் பாத்திரத்தின் இயல்பு. அதை நன்றாகவே செய்திருக்கிறார். கதைப்படி, இந்த இயல்பு அவருக்கு குழந்தை பிறப்பதிலிருந்து ஆரம்பிக்கவில்லை. கண்டிப்பாக திருமணம் முதல் குழந்தை பிறப்பு வரையில் பல மாத இடைவெளி இருக்கவேண்டும். அந்த வேளையில் அவர் அறிவுரை சொல்லி தன் மனைவியை சம்மதிக்க வைத்திருப்பார்.
உதாரணமாக, அவர் தன்னுடைய மனைவியை பழைய முறையில், வீட்டில் கயிறுகட்டி தொங்கி, குழந்தையை பிரசவிக்கும் அளவுக்கு தயார்படுத்தியுள்ளார். (இதை நியாயப்படுத்துவதற்காக அவருடைய மைத்துணர்கள் அவரை திட்டுவதுபோல சில வசனங்களும் இருக்கின்றன.) இயக்குநர் இதை ஒரு புதுமையாக நினைத்திருக்கிறார். ஆனால் மனைவிக்கு பிரசவம் நடக்கும் வேளையில், வழக்கமாக பழைய படங்களில் வருவது போலவே, வெளியில் உலாத்திக்கொண்டிருக்கிறார். எவ்வளவு புரட்சிகரமான எண்ணம்!
இயக்குநர் இந்த படத்தில் முன்று விதமான பெற்றோர்களை காட்டுகிறார். அவர்களுக்கு மத்தியில் உள்ள வித்தியாசத்தையும் எண்ணங்களையும் அழகாகவே வடிவமைத்திருக்கிறார். ஆனால், இயக்குநரும் தன்னுடைய பாணியிலேயே தன் குழந்தையை வளர்க்கிறார், தன் மனைவியின் ஆசைகளுக்கு மதிப்பு கொடுக்காமல். அப்படியிருக்க, சமுத்திரக்கனியின் பாத்திரத்திற்கும் தம்பி ராமய்யாவின் பாத்திரத்திற்கும் என்னதான் வித்தியாசம்?
இந்தக்கால மழலையர் பள்ளி கல்வி முறையைப்பற்றி ஒரு பிராஜக்ட் வர்க் (தாஜ்மஹால் உருவாக்குவது) என்ற ஒரே உதாரணத்தை வைத்துக்கொண்டு இயக்குநர் எடுத்துச் சொல்லியிருக்கிறார். அந்த பையன் அரசுப் பள்ளிக்கு செல்வதற்கு காரணமாக, இந்த படத்தின் கதைக்கு முக்கிய திருப்புமுனையாக, அது விளங்குகிறது.
இந்தக் காட்சியை இயக்குநர் மிக சாதுர்யமாக படைத்திருக்கிறார். ஆனால் அந்த பையன் பஸ்சில் தவறிச் சென்று விடும் காட்சியில் தன்னுடைய கடிவாளத்தை தவறவிடுகிறார். பொதுவாகவே, எந்த ஒரு அப்பாவும் முதன் முதலில் குழந்தைக்கு துணையாகச் செல்வார். அதன் பிறகுதான் பையனை தனியாக செல்ல அனுமதிப்பார். இந்த சிறு லாஜிக்கைகூட இயக்குநர் இந்த காட்சியில் மறந்துவிட்டார். பிறகு அந்த பையனை திருப்பிக்கொண்டுவந்த ஒரு திருநங்கையை காட்டுவதும் (அங்கு வசனம் வைக்காததற்கு கடவுளுக்கு நன்றி), மனிதர்கள் மீது இயக்குநர் வைத்திருக்கும் நம்பிக்கை பற்றி பிரசங்கம் செய்வதும் ரொம்ம்ம்ம்ம்மப அதிகம்.
ஆனால், இந்த காட்சித்தொடரில் ஒரு சிறந்த விஷயத்தை வடிவமைத்திருந்தார். மற்ற குழந்தைகள் தொலைந்துபோன நண்பனுக்காக அழுவதை அழுத்தமாக காட்டினார். இந்த படத்தில் வரும் சிறந்த ஒரு முயற்சியாக இது காணப்படுகிறது. ஆனால், இயக்குநர் இதே பாணியை இரண்டாவது பகுதியிலும் பயன்படுத்துகிறார். ஹாஸ்டலில் ஒரு நண்பன் தற்கொலை செய்ய முயற்சித்தான் என்ற செய்தி வரும்போது. அதுதான் இந்த படத்தில் இருப்பதிலேயே மிக மோசமான காட்சியாக மாறியிருக்கிறது. (இந்த நல்ல படத்தை தமிழில் வெளிவந்த டீனேஜ் காதல் கதைப் படங்களில் ஒன்றாக மாற்றுவது இந்த காட்சிதான். அதுவுமின்றி நட்பிற்கும் காதலுக்கும் உள்ள வித்தியாசத்தைப்பற்றி இந்த காட்சி காட்டமாக கேள்வி எழுப்புகிறது.)  
இந்த படத்தில் இதுபோன்று சமைக்கப்பட்ட பல காட்சிகள் இருக்கின்றன. அதிர்ஷ்டவசமாக, இவற்றில் வரும் சம்பவங்களும் பின்னணியும் புதியதாக தெரிகின்றன. அதனால் இவை ஒரு எல்லைவரை க்ளிஷே என்று சொல்லப்படும் பாதிப்பிலிருந்து தப்பிவிடுகின்றன.
பதின்பருவத்தில் வரும் பாலியியல் மாற்றங்கள் மற்றும் ஆர்வம் பற்றி அப்பா சமுத்திரக்கனி தன் பையனிடம் (பத்தாம் வகுப்பு மாணவன்!) பேசுகிறார். இந்த படைப்பாளி இதை ஒரு புதுமையான விஷயமாக நினைத்திருக்கிறார்! பார்வையாளர்களும் இதை ஏற்றுக்கொள்வார்கள், பாராட்டுவார்கள். அவர் அதே வயதையொத்த ஒரு பெண்பிள்ளையை, அந்த பையன் சொன்னபடி, தன் வீட்டுக்கு அழைத்துவந்து தன் மகனிடம் சகஜமாக பேசவைக்கிறார். சிறப்பு!
அப்படியென்றால் இதைப்பற்றிய அந்த பெண்ணின் மற்றும் அவளுடைய பெற்றோரின் பார்வை என்னவாக இருக்கும்?
தாங்கள் என்ன செய்கிறோம் என்று அவர்களுக்கு தெரியுமா? தன் பையனின் எண்ணங்கள் பற்றி இயக்குநர் அந்த பெண்ணிடம் சொல்லிவிட்டாரா? அல்லது இயக்குநர் அந்த பெண்ணை தன் மகனை சீர்திருத்தம் செய்வதற்கான ஒரு பொருளாக பயன்படுத்துகிறாரா?
நட்புக்கும் காதலுக்கும் மத்தியில் இருக்கும் வித்தியாசம் என்ன? இந்த கேள்வி சாதாரணமான ஒரு கமர்ஷியல் படம் பார்க்கும்போது எழுவதில்லை. இங்கு இந்த படம் நல்ல கருத்துக்களைச் சொல்லும் ஒரு சமூக விழிப்புணர்வு சித்திரம் என்று விளம்பரப்படுத்தப்படுகின்றன. அதனால் இந்த கேள்விக்கு இயக்குநர் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
பதின்பருவத்தில் வரும் ஈர்ப்புதான் உண்மையான காதல் என்று இயக்குநர் சொல்ல வருகிறாரா? அல்லது அனைத்து நட்பும் பதின் பருவ ஈர்ப்புதான் என்று சொல்கிறாரா?
அந்த பெண்ணிடம் அடுத்த முறை வரும்போது உங்கள் வீட்டில் சொல்லிவிட்டுதான் வரணும் என்று இயக்குநர் சொல்லும் காட்சியிலிருந்து, அந்த பெண்ணை தூரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் பையனை பார்ப்பதற்காக கூட்டிச்செல்லும் காட்சி வரையிலுமான ஏறக்குறைய எல்லா காட்சிகளிலும் இந்த கேள்வி எழத்தான் செய்கிறது.
இயக்குநர் பலதரப்பட்ட ஜாதி மற்றும் மதத்தை சேர்ந்த கதாபாத்திரங்களை வலுக்கட்டாயமாக திரைக்கதையில் புகுத்தியுள்ளார். இது ஒரு தவறான விஷயம் அல்ல. அதுவுமின்றி அவர் அதை அழகாகவே பயன்படுத்தி, படத்தை அனைத்து வகுப்பினரும் பார்க்கும்படியாக மாற்றியிருக்கிறார். ஒரு படத்தை வியாபார ரீதியாக வெற்றிபெறச்செய்து, கூடவே ஒரு நல்ல கருத்தையும் சொல்வதற்கு இது அவசியமானதுதான்.
ஆனால் இயக்குநர் அந்த கதாபாத்திரங்களின் வாழ்க்கை முறை அல்லது பின்னணி பற்றி எதையும் தெளிவாக காட்டவில்லை! உண்மையில், இதில் சொல்லப்படும் கல்வி முறையில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அஸ்திவாரம் அதுதானே.
ஒரு காட்சியில், அரசு பள்ளிக்கூடத்தை அறிமுகம் செய்யும்போது, ஒரு சிறுவன் இன்னொரு மாற்றுத்திறனாளியான சிறுவனுக்கு (சிறுநீர் கழிப்பதற்கு செல்ல) உதவி செய்கிறான். இதன் மூலமாக இயக்குநர் என்ன சொல்ல வருகிறாரோ, அது இதயத்தை தொடுவதாகவே இருக்கிறது. (நிறைய லாஜிக் பிரச்சினைகள் இருந்தாலும்!) ஆனால், இயக்குநர் அங்குள்ள நிலமைகள், வகுப்புகளில் மற்ற விஷயங்கள் பற்றி அறிவதற்கான சுதந்திரம் போன்ற எதையும் காட்டவே இல்லை.
அங்குள்ள மாணவர்கள் மத்தியில் நிலவும் கருத்துப் பரிவர்த்தனை மற்றும் அவர்களுக்கும் வெளிஉலகத்திற்கும் உள்ள தொடர்பு பற்றிய ஒரு காட்சி இருந்தால் அதுதானே இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும். இதுபோன்ற படங்களில் அப்படிப்பட்ட காட்சிகள்தானே தேவை.
இதில் வரும் பெரிய தனியார் பள்ளி (சிறை போன்றது!) பல பெற்றோருடைய கண்களை திறக்கும் என்று தோன்றுகிறது. இந்த படத்தை பார்த்தபின், குறைந்தது ஒன்றோ இரண்டோ பெற்றோர்களாவது தங்கள் குழந்தைகளை இதுபோன்ற பள்ளிகளில் சேர்க்கும் முன்பு இந்த படத்தில் சொல்லியிருக்கும் விஷயங்களை சோதித்து பார்ப்பார்கள்.
அதுவேதான் இயக்குநரின் உண்மையான வெற்றியாக இருக்கும்!
ஆனால் உண்மையில், பல பெற்றோர்களும் சிறை போன்ற கட்டுப்பாடுகள் தங்கள் குழந்தைகளுக்கு வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஒரு வேளை டார்க் ரூம் பணிஷ்மென்ட் போன்று இந்த படத்தில் சொல்லியிருக்கும் ஒருசில விஷயங்களை மட்டுமே தவிர்க்க நினைப்பார்கள்.
திரையில் தோன்றும்போதெல்லாம் இயக்குநர் பல அறிவுரைகள் சொல்லுகிறார். தன் மகனை நல்லவிதமாக வளர்த்ததற்காக அவர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். அந்த மகன் தன்னுடைய அத்தை மகளைஎன்னடிபோன்ற வார்த்தைகளால் அழைத்து பேசுகிறான். முதன் முறையாக பார்க்கும்போதே! என்னவொரு ஒழுக்கத்தைதந்தைதன் வாழ்நாளில் அதுவரையில் சொல்லிக்கொடுத்திருக்கிறார்!
இதுதான் இவர் இந்த படத்தின் மூலமாக சொல்லவரும் கருத்தா?
இந்த படத்தில் உள்ள ஒரு நல்ல விஷயத்தை குறிப்பிட்டு சொல்லியே ஆகவேண்டும். அதுதான், இதில் வரும் பாத்திரங்களின் தன்மைகள் கடைசிவரை மாறாமல் வைத்திருக்கின்றனர். குறிப்பாக, சமுத்திரக்கனியின் மனைவியின் கதாபாத்திரம்.
ஆங்காங்கே வரும் சில வசனங்கள் படத்தை விருவிருப்பாக கொண்டுசெல்வதற்கும் சில கருத்துக்களை சொல்வதற்கும் திரைக்கதையில் நல்ல வலிமையை கொடுத்திருக்கிறது. (சற்று அதிகமாகவே இருந்தாலும்.)
ஆனால், “கருப்புச்சிங்கம் யுகபாரதி போன்று வசனங்களை தவிர்த்திருக்கலாம். கவிதை வெளியீட்டு நிகழ்வு காட்சித்தொடர் மொத்தமாகவே மெலோடிராமாவாக இருந்தாலும், அது பார்வையாளர்களை நெகிழச்செய்கிறது. என்றுமேஓல்ட் ஈஸ் கோல்ட்என்பதுபோல.
இரண்டு காட்சிகள்பற்றி குறிப்பாக சொல்லவேண்டும். ஒன்று, ஒரு பெண் அடுத்ததாக தான் விவசாயம் பற்றி படிக்க விரும்புவதாக சொல்வதும், பின்னணியில் இன்னொரு பெண் நண்பனிடம் தன்னுடைய அக்காவைப் பற்றி சொல்லுவதுமான காட்சி! சிறப்பான வடிவமைப்பு! (அதிலும் இயக்குநர் வழக்கம் போல கருத்துக்கள் சொன்னாலும்.)
இரண்டாவது, கடைசி காட்சிகளில், கதாநாயகர்களான சிறுவர்கள் இறந்து போன பையனின் ரூம்மேட்டுடன், பழைய நண்பனிடம் பேசுவது போலவே பேசும் இடம். தெளிவாக காட்டவில்லை என்றாலும், அது கிளாஸ் டச் தான்!
இந்த பார்வையை முடிப்பதற்கு முன் ஒரு பேராசை-
ஒரு வேளை இயக்குநர் படம் முழுக்க அறிவுரை சொல்லாமல் யதார்த்தமாக பேசிவிட்டு, கடைசியில் தம்பி ராமய்யாவிடம் உரக்க பேசுவாரே, அங்கு மட்டும் அப்படியே கொந்தளித்து பேசியிருந்தால். அந்த வசனத்தின் தாக்கம் அல்லது சொல்லவந்த செய்தியின் தாக்கம் எப்படி இருந்திருக்கும்! இந்த படத்தில் வந்த அனைத்து வசனங்களும் சேர்த்து தந்த பாதிப்பைவிட அது கண்டிப்பாக அதிகமாகவே இருந்திருக்கும்.“
இயக்குநர் அந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்!

அடுத்த முறை தவறவிடமாட்டார் என்று நம்புவோம்

No comments:

Post a Comment

Let others know your opinions about this post