இன்று காலையிலிருந்தே என் மனதை ஒரு சிறு அச்சம் ஆட்கொண்டுதான் இருந்தது. மே-ஜூன் மாதங்களில் வெளிவந்த படங்கள் பற்றி அலசுவதற்காக திரைப்பட இலக்கியச் சங்மத்தை இன்று நடத்த திட்டமிட்டு, அதற்கான வேலைகள் நடந்துகொண்டுதான் இருந்தது. இருப்பினும் நிகழ்வு நடத்தவேண்டிய நேரம் நெருங்க நெருங்க அந்த அச்சம் அதிகமாகிக்கொண்டிருந்தது.
இன்று இந்த சங்கமம் நடக்கும் சமயத்தில் வேறு இரண்டு இலக்கிய நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தன. லட்சுமி சரவணக்குமாருக்கு யுவபுரஸ்கார் விருது கிடைத்ததற்கான பாராட்டுவிழாவும், லீனா மணிமேகலையில் இரண்டு கவிதை புத்தகங்கள் வெளியிடும் நிகழ்வும் சென்னையில் நடந்து கொண்டிருக்கின்றன. என்னுடைய இலக்கிய நண்பர்கள் எல்லோரும் அந்த இரு நிகழ்வுக்கும்; செல்கின்றனர் என்பதும் எனக்கு தெரியும். அந்த நிகழ்வுகளில் பங்கு பெரும் பிரபல விருந்தினர்களின் பெயர்களை பார்த்தாலே நமதுவிழாவுக்கு கூட்டம் வராது என்றும் தெரியும்.
நமது நிகழ்வை இன்னொரு நாளைக்கு தள்ளிவைத்துவிடலாமா என்று நண்பர் கேபிள் சங்கர் கூட ஏற்கனவே கேட்டிருந்தார். ஏற்கனவே இரு முறை சென்னை புத்தக கண்காட்சிக்காக தள்ளிவைத்ததை மீண்டும் தள்ளிவைக்க விரும்பாமல் நான்தான் இன்றைய தேதியில் சங்கமத்தை நடத்த உறுதியாக இருந்தேன்.
வழக்கம் போலவே சொன்ன நேரத்தில் யாரும் வரவில்லை. ஏற்கனவே இருந்த அச்சம் தற்பொழுது உறுதியானது. உண்மையில் அடிக்கடி சந்திக்கும் நண்பர்கள் பத்துபேராவது வந்தால் போதும் என்றுதான் மனதில் இருந்தது. சொன்ன சமயத்தில் நானே சினிமா சம்பந்தமான ஒரு தலைப்பில் பேச ஆரம்பித்து விடலாம் என்று நினைத்தேன். அப்படி சொன்ன நேரத்தில் நிகழ்வை தொடங்கிவிடலாம் என்று முயற்சித்தேன். அதுவும் நடக்கவில்லை.
சற்று நேரம் செல்லச்செல்ல ஒரிரு நண்பர்கள் வர ஆரம்பித்தனர். கருத்துரை ஆற்ற சம்மதித்த நண்பர் ஷான் கருப்பசாமியும் வந்து விட்டார். அத்தோடு மனதில் ஒரு நிம்மதி ஏற்பட்டது. கடைசியில் உறியடி படத்தின் இயக்குனர் விஜயகுமார் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் வர இயலாது என்பதை அறிந்ததும் மீண்டும் குழம்பினேன். ஆனால் ராஜா மந்திரி படத்தின் இயக்குனர் உஷாகிருஷணன் சொன்னபடி வந்தார். கூடவே எதிர்பாராத விதமாக பாஸ்கர் சக்தி அவர்களும் வந்து விட்டார்!
அது மனதிற்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது. இந்த நிகழ்வுக்கு முதலில் அவரைத்தான் அழைத்திருந்தேன். வெளியூர் செல்வதால் அவரால் வர இயலாது என்று சொல்லியிருந்தார். ஆனால் அந்த பயணம் தள்ளிவைக்கப்பட்டதால் நட்பு கருதி அவர் வந்திருந்தார். அது எனக்கு நல்லதாக மாறிவிட்டது. தொடர்ந்து பல நண்பர்களும், குறிப்பாக முகநூல் நண்பர்கள் பலரும் (நேரடியாக இதுவரை பார்த்திராத பலரும்) வந்தனர். அதனால் நிகழ்வு பெரும் வெற்றியாகவே மாறியது!
நண்பர் ஷான் ‘உறியடி’ படத்தைப்பற்றி விரிவாக பேசினார். இலக்கியவாதிகளை திரைப்படம் பற்றி ஆக்கப்பூர்வமாக பேசவைப்பது திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் ஒரு லட்சியமாக இருக்க, ஷானின் பேச்சு அந்த எண்ணத்தை முற்றிலும் வெற்றிபெறச்செய்வதுபோல அமைந்தது. ஷானுக்கு நன்றி!
பாஸ்கர் சக்தி ‘உறியடி’ படத்தைப்பற்றியும் ‘ராஜா மந்திரி’ படத்தைப்பற்றியும் பேசினார். ராஜா மந்திரி படத்தின் உருவாக்கம் பற்றியும் அதன் பின்னணி பற்றியும் பேசினார். உஷா கிருஷ்ணன் அவருடை சிஷ்யை என்பதால் அவர் சொன்ன விபரங்கள் வார்த்தைகளைவிட அர்த்தமுள்ளதாகவும் ஆழமானதாகவும் இருந்தது. பாஸ்கர் சக்தி அவர்களுக்கு நன்றி!
வழக்கம் போல நண்பர் கேபிள் சங்கர் நாம் தேர்ந்தெடுத்த நான்கு படங்கள் (உறியடி, ஒரு நாள் கூத்து, அம்மா கணக்கு, ராஜா மந்திரி) பற்றி மட்டுமல்லாமல் ‘இறைவி’ பற்றியும் தன்னுடைய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எடுத்துரைத்தார். ‘உறியடி’ மற்றும் ‘ராஜா மந்திரி’ படங்களின் பின்னணி பற்றியும், அந்த படங்களின் இயக்குனர்களுக்கும் தனக்கும் இருந்த நட்பு பற்றியும் பேசினார். அவருக்கு நன்றி!
உஷா கிருஷ்ணன் பேசும் போது, ஆரம்பத்தில் அளவுக்கு மீறிய தன்னடக்கத்துடன் பேசி அனைவர் மனதிலும் அவர்மீது ஒரு அனுதாபம் வரும்படி செய்தார். ஆனால் தொடர்ந்து பேசப்பேச, பேச்சின் வேகம் அதிகரித்தது. ஒரு பெண் இயக்குனராக தான் சந்தித்த சவால்களை ஓரிரு வார்த்தைகளிலேயே அனைவரும் உணரும்படி பேசினார். அவருடைய சகஜமான பேச்சும் அதில் இருந்த உண்மையும் அனைவர் மனதிலும் அவருக்கென்று ஒரு மரியாதையையும் கவுரவத்தையும் பெற்றுத்தந்தது. இதுவே அவருடைய வெற்றிக்கு காரணம் என்று நான் நம்புகிறேன். அதை வெளிப்படுத்தும் ஒரு மேடையாக இருந்ததே திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் வெற்றியாகவும் நினைக்கிறேன்.
அவர் பாஸ்கர் சக்தியைப்பற்றி பேசிய விஷயங்கள் அவருடைய குருபக்தியையும், பாஸ்கர் சக்தியின் பண்புகளையும் எடுத்துக்காட்டியது. அவர் பேச்சை கேட்கும்போது, பலமேடைகளில் திரு பாரதிராஜா அவர்களைப்பற்றி திரு பாக்யராஜ் சொன்ன கருத்துக்கள் ஞாபகத்திற்கு வந்தது. உஷா கிருஷணனுக்கு மனமார்ந்த நன்றி!
தொடர்ந்து சிறிதுநேரம் கலந்துரையாடல் நடந்தது. வந்த நண்பர்களில் பலரும் (கேள்விகேட்க முன்வந்தவர்கள்கூட) இந்த படங்களை பார்க்காததால் ஆக்கப்பூர்வமான கேள்விகள் அதிகமாக எழவில்லை. அது ஒரு சிறு வருத்தம்தான். அடுத்த முறை நண்பர்கள் படங்களை பார்த்துவிட்டு, குறைந்த பட்சம் இணையத்தில் பதிவிறக்கியாவது பார்த்துவிட்டு, வந்து கேள்விகளைக் கேட்பார்கள் என்று நம்புகிறேன். வந்திருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்!
உண்மையில் நேற்றைய நிகழ்வுடன் திரைப்பட இலக்கியச் சங்கமம் தனது பயணத்தில் ஐந்து வருடங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதை நினைக்கையில் எனக்கு மிகவும் பெருமையாகத்தான் இருக்கிறது.
ஒவ்வொரு நிகழ்விலிருந்தும் ஏதோ ஒரு விஷயத்தை நான் கற்றுக்கொண்டுதான் வருகிறேன். பல சோதனை முயற்சிகளையும் செய்து பார்த்துவிட்டேன். நேற்றைய நிகழ்வும் சில பாடங்களை கற்றுத்தந்தது.
நண்பர் சுரேகா தான் என்னிடம் கொண்ட நட்பின் பால், வள்ளுவன் சொன்னதுபோல, அடிக்கடி ‘இடித்துரைத்து’க்கொண்டே இருப்பார். “இப்படியே எளிமையாக இந்த நிகழ்வை தொடர்ந்து கொண்டுசெல்லக்கூடாது, அடுத்த கட்டத்திற்கு செல்லவேண்டும்” என்று சந்திக்கும்போதெல்லாம் அறிவுருத்துவார். அதற்கான சில வழிகளையும் சொல்வார். வேறு சில நண்பர்களும் வேறு சில அறிவுரைகளை சொல்லியிருக்கின்றனர். ஆனால் சில காரணங்களால் என்னால் அவர்கள் சொன்னபடி நடக்க முடியவில்லை.
தற்பொழுதுதான் அதற்கான நேரம், வாய்ப்பு அல்லது தேவை வந்துவிட்டதாக நினைக்கிறேன். நண்பர்களின் அறிவுரைகளை ஏற்று திரைப்பட இலக்கியச் சங்கமத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளேன். இன்னும் சிறப்பாக, அனைவருக்கும் இன்னும் பயன் அளிக்கும் விதமாக, இச்சங்கமத்தை சில மாற்றங்களுடன் தொடர்ந்து நடத்த இருக்கிறேன். (எனக்கும் பயனளிக்கும் விதமாகத்தான்! அந்த கோணத்தில் யோசிக்காததால் தான் இதுவரையிலும் சோதனை முயற்சிகளாகவே அனைத்து நிகழ்வுகளையும் நடத்திவந்தேன். சுயநலம் பார்க்காத பொதுநலம் நீண்டகாலம் நிலைக்காது என்பதுதான் தற்பொழுது நான் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்று!)
ஊக்கப்படுத்திய சுரேகா போன்ற நண்பர்களுக்கும், தொடர்ந்து இச்சங்கமத்தில் பங்குபெற்றுவரும் கேபிள் சங்கர் போன்ற நண்பர்களுக்கும், தொடர்ந்து ஆதரவு தரும் மற்ற நண்பர்களுக்கும், முகநூல் நண்பர்களுக்கும் நன்றிகள்!
No comments:
Post a Comment
Let others know your opinions about this post