சில ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் சிலரை
அறிமுகம் செய்யும் பொழுது ‘சமூக ஆர்வலர்’ என்று குறிப்பிடுகின்றனர். குறிப்பாக
தமிழில் செய்தி ஊடகங்கள் நிறைய வந்த பிறகு, விவாதங்கள் அதிகமாகி விட்டன. அதில் பேச
வரும் சிலரை இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள்.
சிலர் தங்களுக்கு பிடித்த சில அரசியல்
கட்சிகளுக்கு ஆதரவாகவே பேசுவார்கள். இருந்தாலும் இவர்களை ‘சமூக ஆர்வலர்’ என்றே
சொல்லுவார்கள். முறையாக அந்த கட்சியிலிருந்து வந்தவர்களை கட்சியின் பெயரிலோ அல்லது
பொதுவாக அரசியல்வாதிகள் என்றோ குறிப்பிடுவார்கள்.
இந்த ‘சமூக ஆர்வலர்’களை பார்க்கும்போது எனக்குள்
சில சந்தேகங்கள் அடிக்கடி எழுவதுண்டு.
“நான் யார்? எனக்கு இந்த சமூகத்தின் மீது ஆர்வம்
இல்லையா? அக்கறை இல்லையா? எழுத்தாளர்கள், கலைஞர்கள் போன்றோருக்கு சமூக ஆர்வம்
இல்லையா?”
இது போன்ற சில சந்தேகங்கள்!
இதை அந்த விவாதங்களில் பங்குபெறும் எழுத்தாளர்கள்
யாருமே கேள்வி கேட்டதில்லை. மற்றவர்களும் கேட்டதில்லை.
ஏன், அரசியல்வாதிகள் கூட இந்த சந்தேகம்
கேட்டதில்லை. ஒருவேளை இதிலும் எதாவது அரசியல் இருக்கிறதா என்று தெரியவில்லை.
(அரசியல்வாதி என்பதே இதுபோன்ற ஒரு சொல்லாடல்தான். அதை பிறகு பார்க்கலாம்!)
பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒரு தொழில் இருக்கும்,
அல்லது குறிப்பிடும்படி ஒரு அடையாளம் இருக்கும். அதைத்தான் இதுபோன்ற இடங்களில்
குறிப்பிடுவது வழக்கம். ஒருவேளை, இந்த சமூக ஆர்வலர் என்று சொல்லப்படுபவர்கள் இது
போன்ற எந்த அட்ரசும் இல்லாதவர்களோ?!
இதுபோல அல்ராஸ் இல்லாதவர்களை எதற்கு சமூகத்தின்
முக்கிய விஷயங்களைப்பற்றிய விவாதங்களுக்கு அழைக்கவேண்டும்.
தனிப்பட்டமுறையில் நண்பர்கள் பேசும்போது கூட
இதுபோல ஒருவரை ‘சமூக ஆர்வலர்’ என்று சொல்வதை தவிர்க்கலாமே. ஏனென்றால் இது மற்ற
எவருக்குமே சமூக ஆர்வம் இல்லையென்று மறைமுகமாக குற்றம் சாட்டுவது போலவே
இருக்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.
எழுத்தாளர்கள், கலைஞர்கள், களப்பணியாளர்கள் என
அனைவரையும் சமூக ஆர்வலர்கள் என்று சொல்லுங்கள். அது சமூகத்திலிருந்து விலகி
இருப்பவர்களைக் கூட சமூகத்தைப்பற்றி சிந்திக்க தூண்டும், செயல்பட தூண்டும்.
இதை நேரடியாக ஊடகங்களுக்கு எடுத்துச்சொல்லும்
அளவுக்கு எனக்கு தனிப்பட்ட நண்பர்கள் அங்கு யாரும் இல்லை. அதனால் இதை உரிய
முறையில் பகிர்ந்து அந்த பணியை செய்ய, ஊடகங்களில் பணிபுரியும் நன்பர்களிடமும்,
ஊடகங்களில் பணிபுரியும் நண்பர்களை நண்பர்களாகக் கொண்ட என்னுடைய நண்பர்களிடமும்
வேண்டிக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment
Let others know your opinions about this post