Wednesday, 25 May 2016

கேரளாவா கேரளமா?




பொதுவாகவே பல ஊடகங்களிளிலும், பத்திரிகைகளிலும் மட்டுமல்லாமல் தனிப்பட்டமுறையில் நண்பர்கள் பேசும்போதும் கூட மலையாள நாட்டை ‘கேரளா’ என்றே குறிப்பிடுவதை கவனித்துள்ளேன்.

ஆங்கிலத்தில் அப்படி குறிப்பிடுவதை பழக்கதோஷம் என்று விட்டுவிடலாம். முன்பு ஆங்கிலேயர்கள் வந்த காலத்தில் அவர்களால் இந்திய மொழிகளை சரியாக உச்சரிக்க முடியாததால் அப்படி பல சொற்களை அவர்கள் அப்படி திரித்து சொன்னார்கள். அவர்கள் அதிகாரத்தில் இருந்ததால் அடிமைகளான நம்மூர்க்காரர்களும் அப்படியே உச்சரிக்க ஆரம்பித்தனர்.

ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. ஆங்கிலத்தில் கூட பழைய பெயர்களையே பயன்படுத்த வேண்டும் என்று அரசாணையே வந்து விட்டது. அப்படி பம்பாய் மும்பை ஆனது, கல்கத்தா கொல்கத்தா ஆனது, ட்ரிவான்ட்ரம் திருவனந்தபுரம் ஆனது, காலிகட் கோழிக்கோடு ஆனது. அனால் பலருடைய மனங்களிலும் இன்றும் ‘கேரளம்’ மட்டும் ‘கேரளா’வாகவே இருந்து வருகிறது.

மற்றவர்கள் எப்படியோ போகட்டும். தமிழர்கள் அப்படி குறிப்பிடலாமா? கேரளம் என்பது தமிழகத்தின் (தமிழ்நாட்டின் அல்ல) ஒரு பகுதியான சேரநாடுதானே! அதை குறிப்பிடும்போது எதற்கு இரவல் பெயர்? கேரளம் என்று நம்மால் சரியாகவே உச்சரிக்க முடியும். எழுத முடியும். அப்படியிருக்க இந்த ‘கேரளா’ என்ற வார்த்தையை தமிழில் இருந்து தவிர்த்து விடலாமே.

மலையாள மொழியில் பள்ளிக்கல்வி கற்ற ஒரு தமிழ் எழுத்தாளன் என்ற முறையிலேயே நான் இந்த விண்ணப்பத்தை நண்பர்கள் முன்பாக வைக்கிறேன்.


இனிமேல் கேரளத்தைப்பற்றி குறிப்பிடும்பொழுது தயவு செய்து ‘கேரளம், கேரளத்திலிருந்து, கேரளத்திற்கு, கேரளத்தின்’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்துங்கள்..  

No comments:

Post a Comment

Let others know your opinions about this post