உலகமெல்லாம் சுற்றி வந்ததில்லை,
போட்டிகள் எதுவும் கண்டதில்லை,
திருவிழாக்களில் பங்கு கொண்டதில்லை,
உள்ளூரிலேயே சுற்றி வருவாள்,
போட்டி என்றால் விலகி நிற்பாள்,
திருவிழா முடிய காத்திருப்பாள்…
ஊர் அறிய தன் உடலை காட்டுவதில்லை,
விளம்பரமாய் தன உருவை வைப்பதில்லை,
தான் இருப்பதை உணர்த்திடவே குரல் கொடுப்பாள்,
தன் கடமை என்றே கையேந்துவாள்…
நட்சத்திரப் பதவி கொண்ட விடுதி சென்று
ஆயிரங்கள் உணவுக்காக கொடுத்துவிட்டு
அளவாக மட்டுமே சாப்பிடுவதில்லை,
உடலை ஸ்லிம்மாக வைப்பதில்லை,
ஊரெங்கும் சுற்றி திரிந்தாலும்
ஓரளவே உண்பதற்கு கிடைப்பதனால்
என்றும் அழகாய் மெலிந்திருப்பாள்...
அங்கங்களை அழகென எடுத்துக்காட்ட
‘டிசைனர்’ வைத்து உடை தைப்பதில்லை,
எல்லோரும் பார்த்து ரசித்திடவே
பெருமையாய் அங்கங்கே கிழிப்பதில்லை,
மாற்றுடை ஒன்றையே மாதங்களாய்
அணிந்திட அங்கங்கே கிழிந்ததனால்,
அங்கங்கள் வெளியே தெரியாதிருக்க
எங்கெங்கும் தையல்கள் போட்டிருப்பாள்...
அழகை ரசித்து சிலரும்,
உடல் வளைவுகளைப் பார்த்து பலரும்,
மார்க் போட வசதியாய் மேடையிலே
அங்கங்கள் காட்டி ஒய்யாரமாய்
பூனை நடைபோட்டு சென்றதில்லை,
அனுதாபத்தால் மனமிரங்கி சில பலரும்,
கிழிந்த உடையில் மறைத்திருக்கும்
வற்றிய உடல் பக்கங்களை
மனதில் விழுங்கி ஒரு சிலரும்,
சில்லறை வீசி செல்கையிலே
கூனி குறுகி நின்றிடுவாள்…
அழகி போட்டியில் ஜெயித்து,
திரைத்துறையில் வேகமாய் நுழைந்து,
ஊரார் அனைவரின் கனவுகளிலும்
நட்சத்திரமாய் ஜொலிக்கும் லட்சியமில்லை,
பிச்சை எடுத்தும் சேர்த்து
வைத்து,
ஒரு கூரையாவது கட்டி வைத்து,
ஒருநாளாவது இழுத்து போர்த்தாமல்,
யாரும் தன்னை பார்ப்பதில்லை
என்றே நிம்மதியாய் தூங்குவதே
வாழ்க்கை லட்சியமாகக் கொண்டிருப்பாள்…
அந்த கனவுடன் சாலையோரம்
தங்கள் கூட்டத்தினர் மத்தியிலும்
அவள் உதிர்க்கும் சிரிப்பே அழகு!
No comments:
Post a Comment
Let others know your opinions about this post