Monday, 7 March 2016

திரைப்பட இலக்கியச் சங்கமம், பிப்ரவரி 2016 – நன்றி




தொலைக்காட்சியில் வரும் கிரிக்கெட்டை, அதிலும் முக்கியமாக இந்தியா விளையாடும் ஆட்டங்களுக்கு தீவிர ரசிகன் தான் என்றாலும், அந்த விளையாட்டுடன் அதிகமான தொடர்போ அல்லது அந்த ஆட்டங்களை பார்க்கவேண்டும் என்ற ஆர்வமோ எனக்கு இல்லை. அதனால்தானோ என்னமோ, சங்கமத்திற்காக அரங்கத்தை பதிவு செய்யும்போது இந்த நாளில்  டி20 கிரிக்கெட் ஆசியகோப்பைக்கான இறுதிநாள் ஆட்டம் நடக்க இருந்ததை கவனிக்கவே இல்லை.
நேற்று நிகழ்வுக்காக வீட்டிலிருந்து புறப்படும்பொழுதுதான் அந்த ஞாபகம் வந்தது. அதனால் மனதிற்குள் சிறிது வருத்தமும் இருந்தது. சங்கமத்திற்கு அதிகமாக யாருமே வராமல் போய்விடுமோ என்ற அச்சமும் இருந்தது. ஆனால் அதையும் மீறி சிறிதளவே ஆயினும் நல்லதொரு கூட்டமாக நண்பர்கள் பலரும் வந்து சங்கமத்தை சிறப்பித்து விட்டார்கள்! திரைப்படம் சார்ந்து உண்மையான ஆர்வம் கொண்ட இந்த நண்பர்களால் கலந்துரையாடல் நிகழ்வு ஆக்கப்பூர்வமாக இருந்தது என்பதில் பெரும் மகிழ்ச்சி. இப்படி இந்த சங்கமத்தை வெற்றிபெறச்செய்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!


இறுதிசுற்று, விசாரணை மற்றும் சேதுபதி ஆகிய மூன்று படங்களைப் பற்றி எழுத்தாளரும் திரைப்பட விமர்சகருமான திரு கேபிள் சங்கர் அவர்களும், கவிஞரும் கணையாழியின் துணை ஆசிரியருமான திரு வேல்கண்ணன் அவர்களும் விரிவான கருத்துரைகளை முன்வைத்தார்கள்.
தொடர்ந்து கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் இவர்களுடன் கலந்துரையாடலில் பங்கு கொண்டனர். மூன்று படங்களைப்பற்றியும் பலவிதமான கருத்துக்கள், விமர்சனங்கள், பாராட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
விசாரணை படத்தைப்பற்றி பலமேடைகளில் பலரும் பேசினாலும் அந்த படத்தை கவுரவிக்கும் விதமாக அனைவரும் அதைப்பற்றிய விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள்.
இறுதிசுற்று படம் அதிகமாக எங்கும் விவாதிக்கப்படவில்லை என்றாலும் பரவலாக பாராட்டப்பெற்றிருக்கிறது. அந்த படத்தைப்பற்றி விரிவாகவே அனைவரும் பேசினார்கள்.


இந்த படங்களுடன் சேதுபதி படம்பற்றியும் அனைவரும் பேசவேண்டிய சூழ்நிலை இங்கே உருவாகியது. இதுதான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது. திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் வெற்றியாகவே நான் இதை கருதுகிறேன்.
நல்லபடம், விருதுகள் வாங்கிய படம் அல்லது அனைவராலும் பாராட்டப்பட்ட படம் என்ற அடிப்படையில் மட்டும் ஒரு படத்தை தேர்ந்தெடுக்காமல், மக்களுக்கு பிடித்த படங்களில், குறிப்பாக ஒரு மாதத்தில் வெளியான படங்களில் வெற்றி பெற்ற படங்களில் ஒரு நல்ல படத்தையும் எடுத்து பேசவேண்டும் என்ற எண்ணத்திற்கு கிடைத்த வெற்றிதான் இது.
இந்த நிகழ்வில் ஒரே குறை, படங்களில் பணியாற்றிய இயக்குனர்கள், எழுத்தாளர்கள் அல்லது மற்ற கலைஞர்களில் ஒருவர்கூட வரவில்லை என்பதுதான். அவர்களை இந்த சங்கமத்திற்கு அழைக்க நான் என்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். நேரடியாகவே அவர்களை பார்க்க சென்றிருந்தேன். வழக்கம் போல பல இடங்களிலும் நான் ஏதோ வாய்ப்பு தேடி செல்வதாக நினைத்து தெலைபேசி எண்களைகூட தரவில்லை.
சிலர் இந்த நிகழ்வை பெரிதாகநினைக்கவில்லை.
ஆனால் தயாரிப்பாளர் திரு தனஞ்சயன் போன்ற சிலர் மிகவும் உதவிசெய்தார்கள். அவரிடம் தொலைபேசி எண்ணை வாங்கி சிலரை அழைத்தேன். அவர்கள் ஊரில் இல்லாத காரணத்தால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் போனது.
தொடர்ந்து இந்த சங்கமத்தை நடத்திவரும்போது, வரும் காலங்களில் தேர்ந்தெடுத்த படங்களின் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், மற்றும் கலைஞர்களும், அவர்களுடன் திரைப்பட விமர்சகர்களும் பங்குபெறுவார்கள் என்று ஆணித்தரமாக நம்புகிறேன். அந்த நம்பிக்கையுடனேயே தொடர்ந்து செயல்பட உள்ளேன்
இந்த முயற்சியில் வெற்றிபெற நண்பர்கள் அனைவருடைய ஒத்துழைப்பையும் உதவியையும் நாடுகிறேன். இந்த சங்கமத்தைப்பற்றி நீங்களும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். அதை உங்கள் நண்பர்களிடமும் பகிருங்கள்.
மீண்டும் அடுத்தமாதம் சந்திப்போம்.

நன்றி! வணக்கம்!

  

No comments:

Post a Comment

Let others know your opinions about this post