அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, ரஜினிகாந்த், மோகன்லால்- இவர்கள் அனைவருக்கும் சில ஒத்துமைகள் இருக்கின்றன. ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் திரையுலகத்திற்குள் நுழைந்தவர்கள், தாங்கள் நடிக்கவந்த மொழிகளில் வில்லன்களாக அறிமுகம் ஆனவர்கள், தங்களது திறமையால் மட்டுமே வளர்ந்து வந்தவர்கள். நடிப்பில் தங்களுக்கு என்று ஒரு புதியபாதையை வகுத்தவர்கள், வில்லன் வேடங்களில் மிகப்பெரும் வெற்றிபெற்று, நாயகர்களாக மாறியவர்கள், மக்களின் பேராதரவைப் பெற்று அந்தந்த மொழிகளில் உச்சத்தைத் தொட்டு சூப்பர்ஸ்டார் ஆனவர்கள்!
“என்னைப் பொறுத்தவரை இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர் மோகன்லால்தான்”- இது இந்தியாவின் சூப்பர்ஸ்டாரான அமிதாப் பச்சன் ஒரு முறை சொன்ன வார்த்தைகள்தான். இது அவர் தன்னுடைய நல்ல குணத்தாலும், பணிவாலும், மேடைமரியாதைக்காக சொன்ன வார்த்தைகள் அல்ல. உண்மையிலேயே நடிப்பின் அனைத்து அம்சங்களையும் அலசியபின் அவர் மனதில் எழுந்த அபிபிராயம்தான். இப்படி மற்ற சூப்பர்ஸ்டார்கள் போற்றும் அளவுக்கு மோகன்லாலின் நடிப்பிற்கு என்னதான் சிறப்பு என்று கேட்டால், அதற்கு ஒரே பதில்தான் இருக்கும். அதுதான் “இயல்பான நடிப்பு!“
இந்திய திரையுலகில் எல்லா நட்சத்திரங்களும் மேலும் மேலும் புகழ்பெறும் போது நடிப்பைப் பொறுத்தவரையில் ஒரு சிறிய வட்டத்திற்குள் சிக்கிக் கொள்வதுதான் வழக்கம். தங்களுக்கென்று ஒரு ரசிகர்வட்டத்தை உருவாக்கி, அந்த ரசிகர்களை திருப்திப்படுத்தவும், அவர்களின் ரசனையை வளரவிடாமல் தடுத்து, அதை தங்கள் நட்சத்திர அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ளவும் தகுந்தபடி ஒரேமாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பார்கள்.
அவ்வப்போது தான் இதற்கு மாறான படங்கள் இதுபோன்ற நட்சத்திரங்களிடமிருந்து வெளிவரும். அதில் மிகவும் முக்கியமானவர்கள் மலையாளத் திரைப்பட சூப்பர்ஸ்டார்கள் தான். அதற்கு அங்குள்ள ரசிகர்களின் பார்வையும் காரணமாக இருக்கலாம். இருந்தாலும் அப்படியொரு நிலமை அங்கே ஆரம்பம் முதலே வழக்கமாக இருந்துவருவது சிறப்புதான்.
சத்யன், பிரேம் நசீர், மது போன்றவர்கள் உச்சநட்சத்திரங்களாக இருந்தபோது அவர்கள் வியாபாரரீதியான படங்களில் நடிக்கும்போது அதற்கு இணையாக கலைப்படங்களிலும் நடித்து வந்தனர். அதே பாதையைத்தான் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி போன்றவர்களும் தொடர்ந்து வந்தார்கள்.
மற்ற மொழிகளில் கமலஹாசன் போன்றோர் இப்படி வித்தியாசமான படங்களை எடுக்க முயற்சிப்பதுண்டு. இந்தியில் அமீர்கான் போன்றவர்களும் இந்த பாதையை பின்பற்றி வருவது பாராட்டுக்குறிய விஷயம் தான்.
ஆனால் இந்த விஷயத்தில் மிகப்பெரும் வெற்றிபெற்றவர்கள் மோகன்லாலும் மம்முட்டியும் தான். இருவருமே பலமுறை தேசிய விருதுகளையும் மாநில விருதுகளையும் பெற்று கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாகவும் அந்த அந்தஸ்தை தக்கவைத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது ஒரு அதிசயமான விஷயம்தான்.
இருவரும் ஒரேபோலத்தான் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறார்கள் என்றாலும், படங்களைத் தேர்வுசெய்வதிலும், கதாபாத்திரங்களைத் தேர்வுசெய்வதிலும், இருவரும் வித்தியாசப்படுகின்றனர். அதிலும் மோகன்லால் பின்பற்றுவது தனக்கே உரித்தான ஒரு பாதைதான்.
ஆரம்பகாலகட்டத்தில் நிறையபடங்களில் நடிக்கவேண்டும் என்ற ஒரு லட்சியத்தைத் தவிர இவருக்கும் வேறு எந்த ஒரு எண்ணமும் இருந்ததில்லை. ஒரு வருடத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்தில் ஆரம்பித்த அவரது பயணம், பலபல சிறுசிறு பாத்திரங்களில் தொடங்கி வில்லன், குணச்சித்திரம், நல்லவன், கெட்டவன், ஆன்டி ஹீரோ என தொடர்ந்தது. மஞ்சில் விரிந்த பூக்களுக்கு பிறகு உண்மையில் அவருக்கு சொல்லும்படியாக கிடைத்த ஒரு நல்ல வேடம் பாலசந்திரமேனனின் கேள்க்காத்த சப்தம் என்ற படத்தில்தான். ஒரு வில்லன் வேடம். அதற்கு பிறகு அவர் திரும்பி பார்த்ததே இல்லை.
ஆரம்பத்தில் மற்ற நட்சத்திரங்களுடன், முக்கியமாக மம்முட்டியுடன் இணைந்து பல படங்களில் நடித்துவந்தார். இதற்கு மத்தியில் மோகன்லால் ஆன்டி ஹீரோவாகவும் அதைத்தொடர்ந்து ஹீரோவாகவும், பிறகு சூப்பர் ஸ்டாராகவும் வளர்ந்து விட மம்முட்டியுடன் நடிப்பதை தவிர்த்துவிட்டார். அத்துடன் படத்தின் வெற்றிக்கு தன்னுடைய பங்கை உணர்ந்து, அதற்கு தகுந்தபடி கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வுசெய்து நடிக்க ஆரம்பித்தார். அது மேலும் மேலும் அவருக்கு வெற்றியையும் புகழையும் கொடுத்தது.
இந்த வெற்றிக்கு மிகமுக்கியமான காரணம் ஏற்கனவே சொன்னபடி இயற்கையாகவே கிடைத்த நடிப்புத்திறன்தான். எந்த ஒரு கதாபாத்திரத்தையும் தன்னுடைய இயல்பான நடிப்பால் மெருகேற்றிவிடவும், இயக்குநர்களே வியக்கும் அளவுக்கு அதை வெற்றி பெறச்செய்யவும் அவரால் முடிந்தது. இதற்கு உதாரணமாக பல படங்களைச் சொல்லலாம்.
மோகன்லால், அவர் நடிக்கும் படங்களை மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுக்கிறார், மேலும் அவர் நடிக்கும் பொழுது அவர் உள்ளுணர்வு சொல்வதை நம்பியே நடித்து வருகிறார் மற்றும் நிகழ்வுகளை அதன் போக்கில் விட்டு விடுவதையே அவர் விரும்புகிறார்.
மோகன்லால் ஒரு தன்னியல்புடன் கூடிய நடிகராக, ஒரு பாத்திரத்தின் உள்ளுணர்வுகள் மற்றும் மனக்குமுறல்களை எளிதாகவும் மிகவும் விரைவாகவும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டவராவார் பட இயக்குனரின் விருப்பத்திற்கிணங்கும் நம்பக்கூடிய முக பாவங்களை சித்தரிக்கக்கூடிய நடிகராக திரை உலகில் அறியப்படுகிறார். அவர் பிற மொழிப்படங்களில் நடிக்கும் பொழுது கொஞ்சம் மன உளைச்சலுடன் காணப்படுகிறார், அம்மொழிகளில் அவருக்கு முழுமையாக ஈடுபாடு இல்லாததாலும், மேலும் அதற்கான காரணம் அவருக்கு அந்தந்த மொழிகளில் காணப்படும் சிக்கல்களை அவர் அறியாதிருப்பதே என்பதை உணர்ந்துள்ளார்.
இவருடைய நடிப்பின் அடிப்படையில் இவர் நடித்த கதாபாத்திரங்களையும் படங்களையும் நான்கு பிரிவுகளாக பட்டியலிடலாம். முதலாவது, இயக்குநர்களின் படைப்புகளாக மட்டும் உள்ள வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் படங்கள். இந்த பிரிவில் பாசிலின் படங்களில் ஆரம்பித்து (உதாரணத்திற்கு மணிச்சித்திரத்தாழ் போன்ற படங்கள்), பரதன் (காற்றத்தே கிளிக்கூடு, தாழ்வாரம்), பத்மராஜன் (தூவானத்தும்பிகள், நமுக்கு பார்க்கான் முந்திரித்தோப்புகள்), ஷாஜி (வானப்பிரஸ்தம்) போன்று பல இயக்குநர்களின் கதாபாத்திரங்களை திரையில் வாழவைத்தார்.
இரண்டாவது, சாதாரணவாழ்வில் நாம் கண்டுவரும் இயல்பான மனிதர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள். முக்கியமாக இதுபோன்ற கதாபாத்திரங்கள் தான் மோகன்லாலின் தனிச்சிறப்பு என்றே சொல்லலாம். இதுபோன்ற கதாபாத்திரங்கள் கொண்ட கதைகள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதற்கு உதாரணமாக சத்தியன் அந்திக்காடு இயக்கிய நாடோடிக்காற்று, காந்திநகர் 2வது தெரு, லோகிததாஸ்- சிபி மலையில் கூட்டணியில் வந்த கிரீடம், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, கமலதளம், பிரியதர்ஷன் இயக்கிய சித்ரம், தாளவட்டம், கிலுக்கம் போன்ற படங்களைக் கூறலாம்.
மூன்றாவது, மோகன்லாலின் நட்சத்திர அந்தஸ்தையும், அவர்மீது ரசிகர்கள் வைத்திருந்த அன்பையும் வியாபாரம் செய்து பணம் பண்ண, அல்லது அவருடைய நட்சத்திர அந்தஸ்தை வளர்ப்பதற்காக, அவருடைய நடிப்பையும் நடை உடை பாவனைகளையும் பின்பற்றியே வந்த வியாபாரப்படங்கள். இந்த படங்களில் பல கதாபாத்திரங்களும் கலைநயத்துடனும் இயல்பான குணங்களும் கொண்டவையும் தான். அதுவே அந்த படங்களில் பெருவாரியாக வெற்றிபெறச்செய்தது.
நான்காவது, இதுபோன்ற எந்த ஒரு நல்ல லட்சியமும் இல்லாமல் பணத்திற்காகவும், நண்பர்களுக்காகவும், சில நேரங்களில் மக்களுக்கு பிடிக்கும் என்று தவறாக எண்ணியும் எடுக்கப்பட்ட சில படங்கள். அவற்றைப்பற்றி இங்கு பட்டியலிடத் தேவையில்லை. ஆனால் மோகன்லாலும் இதுபோன்ற படங்களில் நடித்திருக்கிறார் என்பதை மறக்கக் கூடாது. வளர்ந்து வரும் நடிகர்கள், அவரை பின்பற்ற நினைக்கும் போது, அவர் செய்த இதுபோன்ற தவறுகளையும் கணக்கில் கொண்டு, அதுபோன்ற தவறுகள் தங்களுக்கு நேராமல் இருக்க முயற்சிக்கலாம்.
எந்த ஒரு கதாபாத்திரமானாலும், அது பெரிய இயக்குநர் இயக்கும் படமாக இருந்து, புகழ் கிடைக்கும் என்று கண்டிப்பாக தெரிந்தாலும், அல்லது பேருக்கு இன்னொன்று என்ற எண்ணத்தில் ஏஆதோ காரணத்திற்காக ஒப்புக் கொண்டு நடித்த படத்தின் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, நடிப்பில் மோகன்லாலின் முத்திரை கண்டிப்பாக வெளிப்படும். கதாபாத்திரத்திற்கு ஏற்றதுபோல, மட்டுமல்ல, ஒரே படத்தில் ஒரு கதாபாத்திரம் வரும் வெவ்வேறு காட்சிகளில்கூட அந்த காட்சிகளின் இயல்புக்கு ஏற்றபடி அவருடைய நடிப்பு வித்தியாப்படும். அந்த மாற்றம்கூட இயல்பாகவே பார்வையாளருக்குத் தெரியும்.
நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, பிரபலமான எந்த ஒரு காமடி நடிகரையும் விட இயல்பாக காமடி செய்யும் மோகன்லால், அதற்கடுத்து ஒரு மாஸ் ஹரோ படத்தில் கற்பனைக்கும் அதீதமான பலம்வாய்ந்த ஒரு மனிதனாக எல்லா வில்லன்களையும் தோற்கடிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கும் போது ரசிகர்களின் விசில் சத்தம் காதைப்பிளக்கவைக்கும் அளவுக்கு நடித்து வெற்றிபெறுகிறார். சோகக் காட்சிகளில் நடிக்கும் போது, வாய்விட்டு அழாமலே, கண்ணில் நிறைந்து ததும்பும் கண்ணீராலும். முகபாவனைகளாலும் மட்டுமே பார்வையாளர்களை அழவைப்பதில் இவருக்கு நிகர் இவரேதான்.