Monday, 3 August 2015

திரைப்பட இலக்கியச் சங்கமம் – ஒரு வேண்டுகோள்




நேற்று நடந்த தனியாவர்த்தனம் திரையிடல் நிகழ்வின் அனுபவம் உண்மையாகவே என்னை உலுக்கியது. இது திரைப்பட இலக்கியச் சங்கமத்தை தொடர்ந்து நடத்துவது பற்றியும், அதன் லட்சியத்தை அடைவதற்கான மாற்று வழிகளைப் பற்றியும் மேலும் ஆழமாக சிந்திக்கத் தூண்டியது.
அதன் அடிப்படையில் ஒரு முடிவை எடுத்தேன். திரைப்படத்தில், குறிப்பாக தமிழ்த் திரையுலகில் ஒரு நல்ல முயற்சி என்ற கோணத்தில், என்னால் செய்யக்குடிய, செய்தே ஆகவேண்டும் என்று மனப்பூர்வமாக கருதிய திரைப்பட இலக்கியச் சங்கமத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அடுத்த ஆண்டு ஐந்தாவது ஆண்டுவிழா கொண்டாடுவதற்கு முன்பு பல மேடைகளிலும் இதைப்பற்றி பேசவேண்டும் என்ற முடிவிலும் மாற்றம் ஏற்படவில்லை. மாறாக அத்துடன் சேர்ந்து, அதைச்சார்ந்த, என்னால் முடிந்த இன்னும் சில விஷயங்களைச் செய்யவேண்டும் என்று தோன்றியது.
அதில் முக்கியமானது, இதுபோன்ற திரையிடல்கள் நடக்கும் முன்பு அந்த திரைப்படங்கள் பற்றிய ஒரு அறிமுக உரை வலைதளம் மூலமாக வெளியிடவேண்டும் என்பதுதான். அது அந்த படங்களுக்கும், அதை உருவாக்கிய கலைஞர்களுக்கும் செய்யும் ஒரு மரியாதையாகவும் இருக்கும், அதிக ரசிகர்களை, கலைஞர்களை அல்லது திரைப்பட மாணவர்களை அந்த கூட்டத்திற்கு வரும்படி ஈர்க்க ஒரு வழியாகவும் இருக்கும். இந்த வேலையை என்னால் முடிந்த அளவு செய்ய முடிவுசெய்திருக்கிறேன்.
இன்னொரு விஷயம்,  இது சம்பந்தமாக,  இதன் தொடர்ச்சியாக, நடத்தப்பட வேண்டிய சில உரையாடல்களைப்பற்றியது. பலநேரங்களில் திரைப்படம் சார்ந்த விஷயங்களில், குறிப்பாக எழுத்து, தொழில்நுட்பம், மற்றும் வியாபாரம் பற்றிய விஷயங்களில், பலருடைய மேடைப்பேச்சுக்கள் என் மனதில் பல கேள்விகளை எழுப்பி வருகிறது.
இதைப்பற்றியெல்லாம் நான் ஒரு இயக்குநராக வெற்றிபெற்ற பிறகுதான் எழுதுவேண்டும் என்ற முடிவில்தான் இதுவரை இருந்து வந்தேன். ஆனால், இதுவரையிலான அனுபவத்தின் அடிப்படையில், இவற்றைப்பற்றி நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்று இப்போது தோன்றுகிறது. குறிப்பாக திரைப்பட இலக்கியம் சம்பந்தமான விஷயங்கள்.
இயக்குநராவதற்கான முயற்சி ஒரு புறம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அது அதன்பாட்டில் நடக்கட்டும். அதே நேரத்தில், நண்பர்கள் விருப்பப்பட்டால், அல்லது இந்த விஷயங்களில் ஏதாவது சந்தேகம் கேட்டால், அந்த விஷயங்களைப்பற்றி எழுதலாம், அல்லது உரையாடலாம் என்றும் முடிவு செய்துள்ளேன்.
நண்பர்கள், மாணவர்கள் கேட்டால் அதற்குத் தகுந்த பதிலை, எனக்குத் தெரிந்தவரை, எனக்குத் தெரியாத விஷயமாக இருந்தால் முடிந்தவரை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்தாவது இங்கே  எழுதுகிறேன்.
உண்மையாக திரைப்படத்தை நேசிப்பவர்கள், இலக்கியத்தை திரைப்படத்துடன் இணைக்க விரும்புவர்கள், ஏதாவது ஒரு நிகழ்வை அமைத்து, அதில் எனக்கு பேச வாய்ப்புத் தந்தால் கண்டிப்பாக நான் திரைப்படமும் இலக்கியமும் என்ற தலைப்பின் அடிப்படையில் பேச தயாராக உள்ளேன். திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் லட்சியத்தை நிறைவேற்ற அது பெரும் உதவியாக இருக்கும். இதற்காக திரைப்படம், இலக்கியம் என்பது போன்ற தலைப்பிற்காகவே ஒரு நிகழ்வை நடத்தவேண்டும் என்பதில்லை. திரைப்படம் சார்ந்த நிகழ்வுகள் நடத்தும்போது, அதனையொட்டி பேச வாய்ப்பு தந்தாலே போதுமானது. அதற்காக நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.
இதுவேதான் திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் அடுத்த கட்ட பயணமாகவும் இருக்கும்.
இதுவேதான் நான் என்னுடைய நண்பர்களிடம், அவர்கள் சார்ந்த அமைப்புகளிடமும், திரைப்படம் சார்ந்த கல்வி நிறுவனங்களிடமும் இதன் மூலம் வைக்கும் ஒரே விண்ணப்பம். 

No comments:

Post a Comment

Let others know your opinions about this post