திரைப்படங்கள்,
அல்லது நாடகங்களில் உள்ள நடிப்பிற்கும் அதன் இலக்கியத்திற்கும மிக ஆழமான தொடர்பு
இருக்கிறது. அது என்றும் எப்போதும் எல்லா நிலையிலும் தொடர்ந்துகொண்டுதான்
இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் அது என்றும் தனியாவர்த்தனம் தான்.
நடிப்புக்கு என்று
சில இலக்கணங்கள் இருக்கின்றன. அதை எல்லோரும் கற்றுக்கொண்டு நடிக்கிறார்களா இல்லையா
என்பது வேறு விஷயம். ஆனால், வெற்றிபெற்ற எல்லா நடிகர்களின் நடிப்பிலும் அந்த
இலக்கணத்தின் பிரிவுகளை நாம் பொருத்திப் பார்க்க முடியும்.
அதற்கு
மிகச்சிறந்த உதாரணம் தான் இந்த தனியாவர்த்தனம் என்ற திரைப்படம். உண்மையிலேயே
தம்பிசோழன் ஒரு மிகச்சிறந்த படத்தைத்தான் தேர்ந்தெடுத்திருந்தார். நடிப்பைப் பற்றி
சொல்ல இதுபோன்ற படங்களைவிட வேறு எதுவும் தேவையில்லை.
திரைப்பட
இலக்கியம் எப்படி திரைப்பட நடிப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை சுட்டிக்காட்ட
இந்த படம் மிகப்பெரும் உதாரணமாக திகழுகிறது என்பதில் எந்த சந்தேகமில்லை.
ஒருவர் நேரிலோ,
மேடையிலோ, அல்லது திரையிலோ வெறுமெனே அழுதால் நாம் அழுவோமா? இல்லை. அது பாசமலரில்
சிவாஜி நடித்த கைவீசம்மா கைவீசம்மா காட்சியாகவே இருந்தாலும், அழுபவருக்கு ஏதோ
பிரச்சினை, பைத்தியம் என்று தான் நாம் நினைப்போம். வேண்டுமென்றால்
பரிதாபப்படுவோம்.
அப்புறம் சில
படங்களில் வரும் இதுபோன்ற காட்சிகளை பார்க்கும்போது நாமும் ஏன் சேர்ந்து
அழுகிறோம்? எந்த காட்சியை பார்த்தும் அழாதவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி
நான் இங்கே குறிப்பிடவில்லை. என்னைப்போன்ற சாதாரண ரசிகர்களை மட்டும்தான் நான்
சொல்கிறேன்.
நான் சினிமா
பார்க்கும்போது நகைச்சுவை காட்சிகளைக் கண்டு வாய்விட்டு சிரிப்பேன், சோகக்காட்சிகளைக்
கண்டு கண்ணீர் விட்டு அழுவேன். அதை ஒரு குறையாக நினைத்து யார் முன்பும்
மறைத்ததில்லை.
நேற்றும் கூட
நானும் என் மனைவியும் இந்த தனியாவர்த்தனத்தை
பார்த்து தேம்பித் தேம்பி அழுதோம். இத்தனைக்கும் இதை நாங்கள் முதன்முதலாகப்
பார்த்தது அல்ல. எத்தனையோ முறை பார்த்தும் மறுமுறை பார்க்கும்போதும் நாங்கள்
அழுகிறோம்.
காரணம், அதன் கதை,
அதையொட்டி வரும் காட்சிகள், அதை எடுத்த விதம், அதில் காதாபாத்திரங்களாக
வாழ்ந்தவர்களின் நடிப்பு , இவையெல்லாம் சேர்ந்த சரியான சதவீதம்தான்.
ஒரு காட்சியைப்
பார்த்து நாம் சிரிக்கிறோம் என்றால் கூட அதற்கு முந்தைய காட்சிகளுடன் தொடர்பு
வேண்டியதில்லை. ஆனால், ஒரு காட்சி நம்மை
அழவைக்கவேண்டும் என்றால், உணர்ச்சிவசப்பட வைக்கவேண்டும் என்றால், நம்மை புரட்சிகர சிந்தனைக்கு
தூண்டிவிடவேண்டும் என்றால், கண்டிப்பாக அந்த காட்சிக்கு முன்னால் வந்த
காட்சிகளும், அதன் பின்புலத்தில் உள்ள கதையம்சமும், கதைக்களமும்,
கதாபாத்திரங்களும் அந்த உணர்வை ஏர்ப்படுத்துவதாக இருக்கவேண்டும். அதுதானே திரைப்பட
இலக்கியம்.
ஒரு நடிகர் நன்றாக
நடிக்கலாம். ஒரு இயக்குநர் சொன்னபடி நடித்துவிடலாம். அதற்கு பிறப்பால் வந்த
திறமையோ, பயிற்சியினால் வளர்த்த திறமையோ போதும். உதாரணமாக சிவாஜி, கமல்,
மம்முட்டி, மோகன்லால், திலகன் இப்படி எல்லோரும் சிறந்த நடிகர்கள்தான். இதில்
யாருக்கும் சந்தேகம் இருக்காது. இருந்தாலும் இவர்கள் நடித்த எல்லா படங்களும் நம்மை
அழவைத்திருக்கிறதா, உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறதா, சிந்திக்கத்தான்
வைத்திருக்கிறதா?
அவர்கள் நடிப்பை
வெளிப்படுத்தும் அளவுக்கு, அதை நாம் போற்றும் அளவுக்கு, கதையும் கதாபாததிரமும்
அமைந்தால் மட்டும் தான் அவர்களுடைய நடிப்புத் திறன் கூட வெற்றிபெறும்.
திலகன் ஒரு முறை
சொல்லியிருந்தார். ”நடிப்பில் இரண்டு பாணி இருக்கின்றன. ஒன்று யதார்த்த நடிப்பு,
கமல், மோகன்லால் போன்றவர்கள் பின்பற்றுவது. கமல் சிலநேரங்களில் நடித்துக்
குதறிவிடுவார், அதனால் அவருடைய ஆரம்பகால நடிப்பை மட்டும் தான் இங்கு
குறிப்பிடுகிறேன். இரண்டாவது, டீடைல்ட் நடிப்பு. சிவாஜியும் நானும் பின்பற்றுவது.
எங்கள் நடிப்பு சிலநேரங்களில் யதார்த்தத்தை மீறுவதுபோல் தோன்றும். நாடகத்துறையில்
இருந்து வந்ததால் எங்களால் அதை தவிர்க்க முடியாது.“
ஆனால், திலகன்
யதார்த்த நடிப்பிலும் டீடைலாக நடித்து தன் திறமையை வெளிக்காட்டியவர் என்பது நம்
எல்லோருக்கும் தெரியும்.
இன்னொரு விதமாக
சொன்னால் நடிப்பு என்பது ஆக்ஷன் மட்டுமல்ல, ரியாக்ஷனும்தான். ரியாக்ஷன்
இல்லையென்றால் ஆக்ஷன் எடுபடாமல் போய்விடும். ஒன்றுக்கு மேற்பட்டோர் நடிக்கும்
காட்சியில் ஒருவருடைய நடிப்பபின் வெற்றி அவருடைய ஆக்ஷனுக்கு தகுந்தபடி வரும்
மற்றவர்களின் ரியாக்ஷனில்தான் இருக்கிறது.
காதரலிக்க
நேரமில்லை படத்தில் வரும் பிரபல காட்சியை இதற்கு மிகச்சரியான உதாரணமாகச்
சொல்லலாம். ஒரு வேளை திரு நாகேஷ் அவர்கள் கஷ்டப்பட்டு
நடித்துக்கொண்டிருக்கும்போது, திரு பாலையா அவர்கள், ஸ்டோன் ஃபேஸ் என்று
சொல்வார்களே, அந்த பாவத்துடன் சும்மா இருந்தால் என்னவாகியிருக்கும் என்று
யோசித்துப் பாருங்கள்.
இந்த
தனியாவர்த்தனத்தை பொறுத்தவரை இதன் வெற்றிக்கு முழு மூலக்காரணம் ஏ.கே.லோஹிததாசின்
கதைதான். ஏற்கனவே குறிப்பிட்டது போல ஒரு வித்தியாசமான களத்தை எடுத்து, நல்லதொரு
கதையை அமைத்து, திரைக் காட்சிகளாக வடித்துவிட்டார். அதை மிகச்சரியான முறையில்
இயக்கியிருக்கிறார் சிபிமலையில். இதுபோன்ற படங்களை எடுப்பதில் அவர் கைதேர்ந்தவர்
என்பது நம் எல்லோருக்கும் தெரியும். லோஹிததாஸ், சிபி மலையில் கூட்டணியில் வெளிவந்த
பரதம், ஹிஸ் ஹைனஸ் அப்துள்ளா, கமலதளம், கிரீடம் போன்ற படங்கள் எந்த தரத்தில்
இருந்தன என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. அப்படிப்பட்ட இவர்கள் கூட்டணியில்
உருவான இந்த தனியாவர்த்தனத்தில் யார் நடித்தாலும் வெற்றி பெறும். ஆனால்
கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை நடிக்க வைத்திருந்தார் சிபி மலையில்.
லோஹிதாஸைப் பொருத்தவரை
இது முதல் படம். அதனால் இதை தேர்வு செய்த சிபிமலையிலும், மம்முட்டியையும்
பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த படம் வெளிவந்த காலத்தில், இந்த படத்தையும்
இதில் நடித்த அனைவரையும் பாராட்டத திரையுலகத்தினரே இல்லை என்று சொல்லலாம். அந்த
வருடத்தின் சிறந்த கதை என்ற கேரள மாநில அரசின் விருது இந்தப்படத்திற்காக
லோஹிததாசுக்கு கிடைத்தது என்பது இதன் மற்றொரு சிறப்பு.
இந்த படம்
ஆரம்பிக்கும்போதே கதையினுள் சென்றுவிடும். அதனால் கதையின் களத்தைப்பற்றியும்
கதாபாத்திரங்கள் பற்றியும் ஒரு விரிவான அடிப்படைச் சித்திரம் நம் மனதில் பதிந்துவிடும்.
தொடர்ந்து வரும் காட்சிகள் அதன்மீது வண்ணங்களை முறையாக இறைத்துக்கொண்டே இருக்கும்.
எந்த
கதாபாத்திரத்திற்கும் அறிமுகம் வேண்டும் என்றவிதத்தில் தனியாக காட்சிகள் எதுவும் அமைக்கப்படவில்லை.
திரைக்கதையின் ஓட்டத்திலேயே எல்லா கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தி இருப்பார்கள்.
அப்படி நம்மை
கட்டிப்போடும் திரைக்கதை ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தோன்றிய ஒவ்வொரு நடிகருக்கும்
தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை தந்திருக்கிறது. எல்லா நடிகர்களும்
அதை உணர்ந்து நடித்திருக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் வெற்றிக்கு இன்னொரு
காரணம்.
அந்த வருடத்தின்
சிறந்த நடிகர் என்ற கேரள அரசின் விருது மம்முட்டிக்கு கிடைக்கவில்லை. அது அவர்
சிறந்த நடிகர் அல்லாததாலோ, அல்லது இந்த படத்தில் அவர் நன்றாக நடிக்கவில்லை
என்பதாலோ அல்ல. அந்த வருடத்தில் மற்றொரு
படத்தில் மோகன்லால் இதைவிட சிறப்பாக நடித்ததால் தான். ஆனால் அந்த வருடத்திய
பிலிம்பேர் விருது மம்முட்டிக்கு இந்த படத்திற்காக கிடைத்தது.
அந்த வருடத்தின்
கேரள அரசு விருதுகளில் சிறந்த இரண்டாவது நடிகர் விருதை திலகன் இந்த படத்திற்காக
பெற்றார். அத்தோடு இரண்டாவது சிறந்த நடிகை என்ற விருதை பிலோமினா அவர்கள் இந்த
படத்திற்காக பெற்றிருந்தார்.
இதில் எந்த ஒரு
நடிகருடைய நடிப்பு சிறந்தது என்று பிரித்துப் பார்க்க முடியாது. எல்லோரும்
அவரவர்கள் பாத்திரத்தை உண்ர்ந்து நடித்திருந்தனர். சிறு சிறு பாத்திரங்களில் வரும்
நடிகர்கள்கூட நம்மை வசீகரித்திருக்கிறார்கள். ஒவ்வொருவருடைய நடிப்புக்கும்
முத்தாயப்பாக ஒவ்வொரு காட்சி இந்த படத்தில் காணலாம். அதற்காக இன்னொருமுறை
லோஹிததாசையும் சிபி மலையிலையும் பாராட்டுவதில் தவறே இலலை.
No comments:
Post a Comment
Let others know your opinions about this post