Tuesday, 7 July 2015

பஷீர் – நினைவுகளில்



பஷீரின் படைப்புகளைப் பற்றி சொல்வதென்றால் எவ்வளவு வேண்டுமென்றாலும் சொல்லலாம். இருந்தாலும் தற்பொழுது நான் அவருடைய படைப்புகளுக்கு வெளியே இருக்கும் பஷீரைப்பற்றித் தான் சில குறிப்புகளை சொல்ல விரும்புகிறேன்.
உண்மையைச் சொன்னால் தன்னுடைய படைப்புகளில் காணும் பஷீரையும் நிஜவாழ்க்கையில் இருந்த பஷீரையும் பிரித்துப் பார்ப்பது மிகவும் கடினமான ஒன்றுதான். அவருடைய எழுத்துக்களில் உள்ள நகைச்சுவையும் மனிதாபிமானமும் மற்ற குணங்கள் அனைத்தும் அவருடைய சொந்த குணநலங்கள்தான் என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் வராது.
இப்படி தன்னுடைய வாழ்வையும், வாழ்வில் நடந்த சம்பவங்களையும், பார்த்த மனிதர்களையும், அவர்களின் எண்ணங்களையும் இந்த அளவுக்கு யதார்த்தமாக, தனக்கே உரித்தான மொழியில், கள்ளம் கபடமில்லாத, நாடகத்தனமோ இலக்கியத்தனமோ கலந்திடாத, இயல்பான மொழியில் படைத்துக் காட்டிய இன்னொரு கலைஞன் உலகில் இருந்திருக்கிறானா அல்லது இருக்கிறானா என்று எனக்குத் தெரியவில்லை!
பஷீரின் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளும், அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவருடைய படைப்புகளில் காண்பது போலவே இருப்பதுதான் மிகச்சிறப்பு. பேரிலக்கியங்கள் படைத்த எழுத்தாளர்களிடம் பேசினாலும், பிச்சைக்காரர்களிடம் பேசினாலும், குழந்தைகளிடம் பேசினாலும் அதே மொழிநடைதான்.
அதற்கான சில உதாரணங்களைப் பாருங்கள்.
‘பாத்தும்மாவின் ஆட்டி’ற்கு முன்னுரை எழுதும்போது அவர் இப்படித்தான் ஆரம்பிக்கிறார்.
பாத்தும்மாவின் ஆடு, என்ற உண்மையான கதையை எழுதிய நபர் அஞ்ஞானியான, திருமணம் ஆகாத ஒருவன் தான். (திருமணம் ஆகாதவர்களில் ஞானிகள் இல்லை.) இந்த முன்னுரை எழுதுபவர் ஞானியான ஒரு கணவன் தான். (மனைவியர் வாழ்க!). வேறு விசேஷங்கள் ஒன்றும் இல்லை…”
1959-ல் இந்த புத்தகம் வெளிவரும்போது எழுதிய முன்னுரையின் ஆரம்பம்தான் இது.
அந்த முன்னுரையில் இன்னொரு இடத்தில் வரும் சில வரிகளைப் பாருங்கள்.
ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பத்திநாலு ஏப்ரல் இருபத்தியேழாம் தேதி எழுதி முடித்தது தான் இந்த ‘பாத்தும்மாவின் ஆடு’ என்ற இந்தக் கதை. இதை ஒரு முறை நகலெடுத்து இன்னும் அழகாக, ஒரு முன்னுரையுடன் வெளியிட வேண்டும் என்று நினைத்தேன். நாளை, நாளை என்று நாட்கள் கடந்து சென்றது.
ஐந்து வருடங்கள்!
இது வரையிலும் இந்தக் கதை நகலெடுக்கவில்லை. இதற்கு முன்பு வெளியிட்ட எல்லா புத்தகங்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை திருத்தவும் நகலெடுக்கவும் அழகுபடுத்தவும் செய்தவைதான்…”
இதை படிக்கும்போது அவருடைய அயராத உழைப்பையும் சிரத்தையையும் நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவருக்கு உதவியாளர் என்று யாரும் இருந்ததில்லை. எழுதுவதில் உதவி செய்ய மற்றவர்கள் தயாராக இருந்தாலும் அப்படி உதவியாளர்களைக் கொண்டு எழுத வைப்பது அவருக்கு பிடிக்கவே பிடிக்காது. அவரேதான் எழுதுவார். திருத்துவார். பலமுறை திருத்தி நகலெடுத்து, மீண்டும் திருத்தி அவர் மனதில் திருப்தி ஏற்பட்டபின்புதான் வெளியிடுவதற்காக கொடுப்பார்.
(இந்தக்கால எழுத்தாளர்கள் பற்றி தெரிந்தால்தான் அவருடைய அந்த கடின உழைப்பின் மகத்துவம் புரியும்). அப்படி ஒவ்வொரு வார்த்தையையும் சிற்பம் போல் செதுக்கியதனால் தான் அவருடைய படைப்புகள் என்றும் சாகா வரம் பெற்று நிற்கின்றன.
பஷீரின் வாழ்வில் இரு முறை பைத்தியம் பிடித்து சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த வேளையிலும் அவருடைய செயல்பாடுகளிலோ, படைப்புத்திறனிலோ எந்த ஒரு மாற்றமும் இருந்ததில்லை. அவர் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்தபோது, அந்நேரம் அந்த ஆஸ்பத்திரியில் இருந்த மற்ற நோயாளிகளிடம் மிகவும் நட்புடன்தான் பழகி வந்தார். அவர்களிடமும் அவருடைய பேச்சு ஒரேபோல் தான் இருந்தது.
அதைப்பற்றியும் அவர் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
”…. இப்படிப்பட்ட கடுமையான சிகிச்சையின் மத்தியில் தான் நான் இந்த பாத்தும்மாவின் ஆடு என்ற இந்த நகைச்சுவை கதையை எழுதுகிறேன். ஒரு மணிநேரம் எழுதி சோர்ந்து போகும்போது, நான் பைத்தியக்காரர்களின் அருகில் செல்வேன். சில இன்டர்வ்யூக்கள் எல்லாம் எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்…”
சில பைத்தியக்காரர்களைப்பற்றி அவர் குறிப்பிடுகிறார். அதில் ஒன்று..
இவர் சுத்த மௌனி. ஜாதியில் கிறுஸ்துவர். கத்தோலிக்கன் என்று நினைக்கிறேன். வெகு நாட்கள் முயற்சி செய்தபின்தான் அவர் என்னிடம் பேசினார். வழக்கமாக நாலுமணிக்கு பிறகான சிகிச்சையெல்லாம் முடிந்தபின் கிழக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு வராந்தாவிற்குச் சென்று மேற்கு நோக்கி அமர்ந்து இரண்டு சிரி சிரிப்பார்! பிறகு ஒரு பீடியை பற்றவைத்து புகை விட்டபடி இந்தப்பக்கம் வருவார். நாங்கள் நண்பர்கள் ஆனதும் அவருடைய வாழ்க்கை ரகசியத்தை அவர் என்னிடம் சொன்னார். நான் கேட்டேன், என்ன வேலையில இருந்தீங்க.
அவர் சொன்னார், ‘பட்டாளத்தான். ஐந்து வருடங்களுக்கு முன்னால் சிரியாவில் இருக்கையில் செத்து மண்ணோடு மண்ணாகிவிட்டேன்.’
நான் கேட்டேன், ‘பிறகு?’
அவர் சொன்னார், ‘இப்போ கடவுள் பூமிக்கு என்னை அனுப்பியிருக்கிறார்.’
எந்த பிரத்யேக வேலைக்காக என்று நான் கேட்கவில்லை.
இன்னொரு குண்டு பைத்தியக்காரனுக்கு வாழ்வில் ஒரே ஒரு லட்சியம் தான் இருக்கிறது, ஒரு யானையை சாப்பிட வேண்டும்!
நான் சொன்னேன், ‘எங்குப்பாப்பாவுக்கு ஒரு யானை இருந்துச்சு!’
அவன் கேட்டான், ‘அப்புறம் அதை சாப்பிட்டீங்களா?’
நான் சென்னேன், ‘சாப்பிடல, வெளியில எல்லாம் சுத்திக்கிட்டிருக்கான்.’
அவன் கேட்டான், ‘புடிக்க முடியுமா?’
நான் சொன்னேன், ‘தெரியாது.’
….
இப்படி பல நகைச்சுவைகளும் எழுதுவதற்கு இருக்கு. ‘பஷீருக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு, எங்களுக்கு ஏன் வரலை?’ என்று சில இலக்கியவாதிகள் புலம்புவதைக் கேட்டேன். வருத்தப்பட்டு ஒரு பலனுமில்லை. யோக்கியர்களுக்கு தான் அதெல்லாம் வரும்!...”
இப்படி எழுத பஷீரைத்தவிர யாரால் முடியும். இதே பாத்தும்மாவின் ஆடு’ மறு பதிப்பிற்காக 1981ல் எழுதிய முன்னுரையில் வேறொரு விஷயத்தை குறிப்பிடுகிறார்.
அந்த நேரத்தில் அவர் குடும்பத்துடன் பேப்பூரில் வசிக்க ஆரம்பித்திருந்தார். அந்த புதிய இடத்து வாழ்க்கையைப்பற்றி அவர் குறிப்பிடுகிறார்.
”… நாங்கள் இங்கே ஓரளவு நன்றாகத்தான் இருக்கிறோம். நல்லபாம்புகள், சாரைகள், கருந்தேள்கள்- இவை தினமும் வருபவர்களல்ல. நரிகள் தினமும் வருவார்கள். நண்பர்கள் தான். மாலை நேரத்தில் பத்தறுபது நரிகள் கேட்டுக்கு முன்னால் வந்து நின்று என்னை நோக்கி எனக்கு ஏதோ உதவி செய்வது போல பெரும் சத்தத்துடன் ‘கூ.. கூ..’வென கூவ ஆரம்பிப்பார்கள். நான் உறக்க திட்டுவேன்.
..ப்பசங்களா, போதும். வெட்கமில்லையா உங்களுக்கு இப்படி உரக்க கூச்சல் போடறதுக்கு.’
அப்போது நரிகள் வெட்கப்பட்டு பேசாமல் ஓடிப்போய்விடுவார்கள். நரிகள் இந்த வீட்டில் இருக்கும் கோழிகளை சில நடு இரவுகளில் கடித்து துக்கிக்கொண்டு போய் சாப்பிடும். நான் கவலைப்படமாட்டேன். கோழிகள் என்னுடைய மனைவியின் சொந்தம் தான். முட்டைகள் எனளக்கு அப்படி வழக்கமாக ஒன்றும் கிடைப்பதில்லை
இப்படி முன்னுரை எழுதும் பஷீரின் நகைச்சுவை உணர்வைப்பற்றி, அதை அனுபவித்து தெரிநதுகொண்ட பிரபல கவிஞர் ஓ.என்.வி. குறுப்பு வியந்து வியந்து சொல்கிறார்.
ஒரு முறை எர்ணாகுளத்தில் பஷீர் நடத்தி வந்த புத்தகக் கடையின் முன்பாக ஓ.என்.வி.குறுப்பும் தோழர் கே.தாமோதரனும் நடந்து வந்து கொண்டிருந்தனர். ஏதோ அத்தியாவசிய விஷயம் சொல்ல இருக்கிறது என்பது போல கடையிலிருந்த பஷீர் சாலையில் இறங்கி நின்று கைதட்டி அழைத்தார். இவர்கள் கடைக்குள் சென்றனர். அவசரத்தில் தான் கேள்வி எழுந்தது. ”பிக்காசோவின் அட்ரஸ் வேணும், உடனே வேணும்.” தோழர் தாமோதரன் தனக்குத்தானே சொல்வதுபோல மேலே பார்த்து பிக்காசோ இப்போது எங்கே இருப்பார் என்று யோசித்துக் கொண்டிருந்தார். குறுப்பு கேட்டார், ”அவ்வளவு அத்தியாவசியம் என்னவோ?”
பஷீர்- ”இங்கே நான் ஒரு புதிய ஷெல்ப் செஞ்சிருக்கேன்ஒரு பெரிய ஷெல்பை சுட்டிக்காட்டி சொன்னார், ”அதை பெயின்ட் பண்ணணும்.”
என்றுமே சிரிக்காத தாமோதரன் கூட இதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாராம். சிரிக்காமல் என்னதான் செய்வது!
பஷீரின் முகத்தில் மிகுந்த கவுரவம் தோன்ற ஆரம்பித்தால் உடனே ஒரு வெடிச்சிரிப்பு தரும் எதையோ சொல்லப்போகிறார் என்று தெரிந்து கொள்ளலாம்.
அந்த சமயத்தில் தான் ஒ.என்.வி.குறுப்பின் திருமணம் நடந்தது. புத்தகங்களை நேசிக்கும் குறிப்பிற்கு பஷீர் ஒரு புத்தகத்தைத் தான் பரிசாக வழங்கினார். அதில் அவர் எழுதி கையெழுத்திட்டது இப்படித்தான்.
குறுப்பின் மனைவிக்கு,- ஆரம்ப கட்ட சிரிப்பும் சந்தோஷமும் கொஞ்சலும் எல்லாம் முடிந்து ஓ.என்.வி. அடிக்கவும் உபத்ரவம் பண்ணவும் ஆரம்பிக்கும்போது வாசித்து சிரிக்க..”
சில நகைச்சுவை கட்டுரைகளின் தொகுப்புதான் அந்த புத்தகம். ஆனால் அந்த தொகுப்பில் இருந்த எந்த நகைச்சுவையையும் விட பெரிய நகைச்சுவைதான் இந்த குறிப்பில் இருந்தது.
ஒரு முறை மதிலுகள் கதையை படமாக்குவதற்கான அனுமதியை வாங்க அடூர் கோபாலகிருஷ்ணன் தன் நண்பர் டாக்டர் பஷீருடன் நம் பஷீரை சந்திக்க சென்றிருக்கிறார்.
அவர்களிடம் பஷீர் கேட்ட முதல் கேள்வி இதுதான். ”நாரயணியின் பாத்திரத்தில் யார் நடிக்கிறார்
கேள்வி சட்டென வந்ததால் அடூர் சற்று பதட்டப்பட்டார்.
அந்த ரோளில் யாரும் நடிப்பதில்லை. கதையில் இருப்பது போலவே சப்தம் மட்டும் தான் இருக்கும்.” அடூர் விளக்கினார்.
அப்படியென்றால் படம் நன்றாக வரும்சிறு புன்னகையுடன் பஷீர் தன் கருத்தை அப்போதே சொன்னார்.
காரணம் அந்த கதையை படமாக்க பலரும் பஷீரை அனுகியிருந்தார்கள். அவர்கள் அனைவரும் நாரயணியின் பாத்திரத்தில் பல நடிகைகளையும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தனர். அதனாலேயே பஷீர் அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை.
அப்படியாக அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு மதிலுகள் படமாக்க அனுமதி கிடைத்தது. பிறகு அடூர் அந்த படத்தை எடுத்து முடித்தபின், முதல் காட்சியை பஷீர் தான் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். அதற்காகவே எம்.டி.யின் உதவியுடன் முதல் காட்சிக்கு அவரை வரவழைத்தார்கள்.
காட்சி முடிந்த பின் திரையரங்கில் விளக்குகள் எரிந்தது. எல்லோரும் எழுந்தனர். பஷீர் மட்டும் அப்படியே அமர்ந்திருந்தார். படத்தைப் பார்த்து பஷீர் என்ன சொல்வாரோ என்று அனைவரும். குறிப்பாக அடூர் பதட்டத்துடன் இருந்தார். அடூர் அவர் பக்கத்தில் சென்றார். பஷீர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார். கண்கள் நிறைந்திருந்தது. சில நிமிட மௌனத்திற்கு பிறகு மெதுவாகச் சொன்னார். ”நாட் ஏ டல் மோமன்ட்.”
அடூர் மனதில் நினைத்தார். தப்பித்தேன்.”
ஆனால் அதைப்பற்றிய பஷீரின் முழு மதிப்பீட்டையும் மனிதாபிமானத்தையும் எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வு பின்னாளில் நடந்தது.
சில தயாரிப்பாளர்கள் பஷீரின் அனைத்து படைப்புகளையும் படமாகவோ, தொலைக்காட்சி தொடராகவோ எடுப்பதற்கான அனுமதியை பெற பஷீரை அனுகியிருக்கிறார்கள். எல்லாம் பேசி முடிக்க ஆரம்பிக்கும்போது பஷீர் சொல்லியிருக்கிறார், ”கொஞ்சம் நில்லுங்க, ‘பாத்தும்மாவின் ஆடு’ விஷயத்திலயும் ‘எங்குப்பாவிற்கு ஒரு யானையிருந்துச்சு’  விஷயத்திலயும் நான் ஒருத்தர் கிட்ட கேட்க வேண்டியிருக்கு.”
அதற்கு அவர் ரைட்ஸ் கேட்டிருக்காரா?”
இல்லை, இருந்தாலும் கோபாலகிருஷ்ணன் கிட்ட கேக்கணும். என்ன சொல்றீங்க
இதுதான் பஷீர்.
அவரைப்பற்றி சொல்வதானால் அதுவே ஒரு புத்தகமாக எழுதும் அளவுக்கு இருக்கிறது. இருந்தாலும் நேரம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.
நன்றி.

வணக்கம்.       

No comments:

Post a Comment

Let others know your opinions about this post