Friday, 22 May 2015

கலைப்படம்..?





நான் திரைப்பட இலக்கியச் சங்கமம் நடத்த ஆரம்பித்தபோது எனக்கு முதன் முதலில் வாழ்த்துச் சொல்லி, தானாகவே முன்வந்து சிறப்பு விருந்தினராக இந்த சங்கமத்தை துவங்கிவைத்தவர் திரு பாலுமகேந்திரா அவர்கள்.
தொடர்ந்து இந்த சங்கமத்திற்கு ஆதரவு தந்தும் எனக்கு பல அறிவுரைகள் தந்தும் என்னை வழிநடத்திய அவருக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

அவர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது இலக்கியத்தைப் பற்றியும் திரைப்படத்தைப் பற்றியும் அவை இரண்டிற்குமான தொடர்பு பற்றியும் அவர் சொன்ன கருத்துக்கள் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. கமர்சியல் சினிமா, ஆர்ட் சினிமா என்று திரைப்படத்தை இரண்டாக பிரித்து தரம் பார்க்கும் அறிவுஜீவிகளின் மத்தியில் அவற்றிற்கு அவர் தந்த விளக்கம் எனக்கு மிகவும் ஊக்கத்தை தருவதாக இருந்தது.

ஏனென்றால் நானும் இதே எண்ணம் கொண்டவன் தான். அவர் சொன்னபடி, நானும் நினைக்கிற படி திரைப்படத்தில் கலைப்படம் என்றோ வியாபாரப்படம் என்றோ வித்தியாசம் ஒன்றும் இல்லை. இரண்டும் சேர்ந்த கலவைதான் திரைப்படம். வியாபாரத்திற்காக எடுத்தாலும் திரைப்படத்தில் கலை என்பது இல்லாமல் இல்லை. முற்றிலும் கலையாகத்தான் எடு;க்கிறேன் என்று சொல்லி ஒருவர் படம் எடுத்தாலும் அதை தியேட்டரில் வெளியிட்டு மக்களிடம் அதை பார்க்க கட்டணம் வசூலிக்கும் போது அது வியாபாரம் ஆகிவிடுகிறது. வேண்டுமென்றால் ஒவ்வொரு படத்திலும் எதற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த படத்தை எடுத்தார்கள் என்பதின் அடிப்படையில் தங்கள் சௌகரியத்திற்காக அவற்றை இரண்டாக பிரித்து பார்க்கலாம். அவ்வளவுதான்.

'நான் திரைத்துறையில் எதையாவது சாதித்திருக்கிறேன், அல்லது செய்து காட்டியிருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் இலக்கியத்தில் எனக்கு இருநத ஈடுபாடுதான்” என்று அவர் பலமுறை பலமேடைகளிலேயே சொல்லக் கேட்டிருக்கிறேன். நமது சங்கமத்திலும் அவர் வரும்போதெல்லாம் இதை சொல்லியிருக்கிறார்.

அதை பின்பற்றித்தான் நான் இந்த திட்டத்தை ஆரம்பிக்க முடிவு செய்ததும் கதையை தேர்வு செய்தேன். இது என்னமோ 'தமிழ் சினிமா சரித்திரத்தையே மாற்றி எழுத வைத்துவிடும்' என்று பலரும் சொல்லக்ககூடிய ஒரு படம் ஒன்றும் இல்லை.

ஒரு சாதாரண தமிழ் வியாபார சினிமாவேதான். அதில் என்னால் முடிந்த அளவுக்கு கலைத்தரத்துடன் எடுக்க உள்ளேன். அதன் முதல் இலக்கு எளிமையாக வியாபாரம் ஆகவேண்டும், பெருவாரியான மக்களிடம் போய் சேரவேண்டும் என்பது தான்.

அதனால் முற்றிலுமாக ஒரு கலைப்படமாக எடுத்து ஏதோ ஒரு சில காம்பிளக்ஸ் தியேட்டர்களில் மட்டும் வெளியிட்டு கண்டிப்பாக நஷ்டம் ஏற்படும் என்று தெரிந்தும் எடுக்கப்படும் 'கலைப்படம்' என்ற பெயர் கொண்ட படமாக இருக்காது என்பதையும ஆனால் தரத்தில் எந்த அளவும் குறையிருக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Let others know your opinions about this post