Thursday, 7 May 2015

நல்லதொரு ஆரம்பம்




இப்படித்தான் நடக்கவேண்டும் என்று பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. அதற்கான ஆயத்தப்பணிகளும் நடந்து கொண்டுதான் இருந்தது. இருப்பினும் வழக்கம்போலவே தாமதமாகிவிட்டது.
எந்த பாதையில் பயணிக்கவேண்டும், எந்த முறையில் செயல்படவேண்டும் என்பது போன்ற விஷயங்களை மாற்றி மாற்றி யோசித்து யோசித்து காலம் கடத்திவந்தேன்.
அந்த தவறை மேலும் செய்யக்கூடாது என்பதறகாகவே சில கட்டுப்பாடுகளை எனக்கு நானே உருவாக்கி, இதை செய்யாமல் இனி வேறு வழியில்லை என்ற நிலைமைக்குள் என்னை ஆட்படுத்திக்கொண்டேன்.
அதற்கு பலனும் கிடைத்துவிட்டது. தற்பொழுது என்னுடைய முதல் படத்தின் வேலைகள் முறையாகவே ஆரம்பிக்கப்பட்டு விட்டது.
இதற்கான முன்னேற்பாடுகளை, குறிப்பாக திரைக்கதை எழுதும் பணியும் திட்டமிதலும் பல மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்து நடந்து வருகிறது. ஆனால் எனக்குள் இருந்த பயமும், தயக்குமும் அதன் வேகத்தை கட்டுப்படுத்தி வந்தது.
தற்பொழுதுதான் எனக்குள்ளேயும், எனக்கு மிக அருகில் இருப்பவர்களிடமும் மட்டுமே சொல்லிவந்த இந்த “திரைப்படத் தோழமை தயாரிப்பு“ பற்றி மற்றவர்களிடமும் சொல்ல தயாராகியுள்ளேன். இதுவே ஒரு நல்ல ஆரம்பம் தானே!
இந்த திட்டத்தின் கீழ் தயாரிப்பதற்கான கதையை தேர்வு செய்து, அதற்கு பொருத்தமான தலைப்பாக “தீவிதை“ என்ற புதுச்சொல்லையே உருவாக்கி, அதை முறையாக பதிவு செய்தே ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தொடர்ந்து ஆறுமாதங்களுக்கு ஒரு முறை அதை மறுபதிவு செய்து புதுப்பித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.
ஆனாலும் இதை வெளிப்படையாக மற்றவர்களிடம் சொல்வதற்கான நேரம் தற்பொழுதுதான் வந்திருக்கிறது.
திரைக்கதை எழுதும் வேலையில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்ததால் கடந்த சில மாதங்களாக “திரைப்பட இலக்கியச் சங்கமம்“ நடத்துவதை தள்ளிவைத்திருந்தேன்.
படவேலைகளை ஆரம்பித்திருக்கும் இந்த சந்தோஷமான நேரத்தில் ஏற்கனவே நடத்திவந்த இந்த சங்கமத்தினை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல முடிவு செய்துள்ளேன்.
கடந்த மூன்று வருடங்களாக நமது சங்கமத்தில் பல விதமான கூட்டங்களை நடத்தி வந்துள்ளேன். ஒரு தலைப்பில் பேசுவது, தலைப்பே இல்லாமல் உரையாடுவது, ஒரு கலைஞரின் படைப்புகள் பற்றி விவாதிப்பது போன்று பல விதமாக.
தற்பொழுது அதன் வளர்ச்சியாக புதியதாக வெளிவந்த படங்களைப்பற்றி விவாதிக்க முடிவுசெய்துள்ளேன். இதை வழக்கமான பாராட்டுவிழாவாக இல்லாமல் அதேபோல குறைகளை மட்டும் சொல்லும் விமர்சனக் கூட்டமாகவும் இல்லாமல் அனைவருக்கும் பயன் தரும் ஒரு கூட்டமாக நடத்த நினைக்கிறேன்.
“திரைப்பட இலக்கியச் சங்கமத்தின்“ லட்சியத்தை இது நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.
இந்த முயற்சியில் ஆரம்பமாக ஒரு புதிய படத்தை தேர்வு செய்து அதைப்பற்றி விவாதிக்க முடிவு செய்துள்ளேன். அது எந்த படம், எங்கே நடக்கிறது, எப்போது என்பது பற்றிய அறிவிப்புகள் விரைவில்..


No comments:

Post a Comment

Let others know your opinions about this post