Monday, 2 June 2014

தயாரிப்பாளரும் இலக்கியமும்


ஏற்கனவே எழுதப்பட்ட இலக்கியத்தை அடிப்படையாக திரைக்கதை அமைத்தாலும் சரி அல்லது பிரத்யேகமாக ஒரு திரைக்கதை எழுதி உருவாக்கினாலும் சரி, திரைப்படம் என்பது திரைப்படஇலக்கியத்தை அஸ்திவாரமாக கொண்டே தயாரிக்கப்படுகிறது.
திரைக்கதை எழுத்தாளருக்கு இலக்கிய அனுபவமும் இலக்கிய அறிவும் இருந்தே ஆகவேணடும். அப்போதுதான் சொல்லவந்த கதையை எந்த குறையும் இன்றி ரசிகர்கள் புரிந்துகொள்ளவும் ரசிக்கவும் தகுந்த காட்சிகள் மூலமாகவும் தேவையான வசனங்கள் மூலமாகவும் சொல்லமுடியும்.  
திரைக்கதை எழுத்தாளர் எழுதிய காட்சிகளையும் வசனங்களையும் புரிந்துகொண்டு அந்த காட்சிகளை நெறிப்படுத்த கண்டிப்பாக இயக்குநருக்கும் இலக்கிய அறிவு தேவைப்படுகிறது.
(மற்ற படங்களின கதையையும் காட்சிகளையும் பார்த்து காப்பியடித்து படம் பண்ணும் இயக்குநர்களை பற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை. அதுபோன்ற பலரும் திரைப்படத்தை இயக்க இலக்கிய அறிவு அவசியம் இல்லை என்று சொல்வதை கேட்கத்தான் செய்கிறோம். அவர்களிடம் விவாதிக்க நான் தற்பொழுது தயாராக இல்லை.)
படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு இலக்கிய அறிவு தேவையா என்ற கேள்வி பலருடைய மனதிலும் இருக்கிறது. இயக்குநருக்கே இலக்கிய அறிவு தேவையா என்று கேள்வி எழும் காலத்தில் இப்படி ஒரு கேள்வி எழுவது பெரிய விஷயம் ஒன்றுமல்ல.
நேற்றுவரை திருப்பு+ரில் பனியன் கம்பெனி வைத்தவர் இன்று சென்னைக்கு வந்து, திரைத்துறை பற்றி எந்த அனுபவமும் இல்லாமல் ஒரு புரிதலும் இல்லாமல் சினிமா தயாரிப்பது சாத்தியம்தான். ஆனால் இதுபோன்ற ஒரு விஷயம் இந்த திரைத்துறையில் மட்டும்தான் நடந்து வருகிறது.
வேறு பல பல ஆசைகளினால் படம் தயாரிக்க சிலர் வருவதுண்டு. தயாரிப்பாளர்கள் திரைத்துறையினர் சிலருடன் கொண்ட தொடர்புகளினால் வேறு சிலர் படம் எடுக்க வருவதுண்டு.  கையில் பணம் இருப்பதால் மட்டுமே படம் தயாரிக்க வருபவர்களும் இருக்கின்றனர்.
இதெல்லாம் ஆரோக்கியமானது தானா என்று கேட்டால் இல்லை தான். ஆனால் நடந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது.
என்ன படம் எடுக்கவேண்டும், அதன் கதை என்ன, அந்த கதைக்கு யார் திரைக்கதை எழுதினால் நன்றாக இருக்கும், யார் இயக்கினால் நன்றாக இருக்கும்  என்றெல்லாம் முடிவு செய்ய ஒரு தயாரிப்பாளருக்கு திறமை இருக்கவேண்டும்.
அதற்கு அந்த கதை பற்றி அறிய இலக்கிய பரிசயம் இருக்கவேண்டியது அவசியமாகிறது.
இன்றுவரை திரையுலகில் சாதனைகள் படைத்த படங்களை கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாக தெரியும். அதை எடுத்த தயாரிப்பாளர்களுக்கு அந்த படங்களைப் பற்றி முழுவதுமாக தெரிந்திருக்கும்! அந்த படங்களின் கதைகளைப்பற்றி ஒரு புரிதல் இருந்திருக்கும்!
திரைப்பட இலக்கியத்தைப்பற்றி நன்றாக புரிந்து படம் எடுத்த தயாரிப்பாளர்களின் படங்கள்தான் பெருவாரியாக வெற்றி பெற்றிருக்கிறது.
சாதனை படைத்த சில தயாரிப்பாளர்கள் இலக்கியத்தின்பால் கொண்டிருந்த தீவிரகாதலால்தான் பல பேரிலக்கியங்களும் திரைப்படங்களாகவே மாறியிருக்கின்றன.

இதில் பல நேரங்களில் தயாரிப்பாளர்களே இயக்குநர்களாகவும் இருப்பது மேலும் சிறப்பான படங்கள் உருவாக காரணமாகி இருக்கிறது.

No comments:

Post a Comment

Let others know your opinions about this post