என்னவொரு சாதனை நான்
புரிந்துவிட்டேன் இன்று..
என்னைப்பார்த்து நானே
பெருமைப்படுகிறேன் இங்கு.
பயம் என்ற ஒன்று மட்டுமே
மனதில் எழுகிறது,
மீண்டும் அனைத்தையும்
ஓரம் கட்டி
மாற்று எண்ணங்கள் எல்லாம்
மறைகிறது,
பாதிமாதத்தை நிறைத்த
நாட்களிலே.
அவரை பாக்கத்தான் விரும்புகிறேன்..
என் உள்ளத்தில் உள்ளதை
சொல்லத்தான் விரும்புகிறேன்..
ஆனால் சொல்லத்தான் முடியவில்லை..
எப்படி சொல்வதென்றுதான்
புரியவில்லை.
அவர் இருப்பது என்னமோ
மேல்மாடியில்தான்..
பத்தடி இறங்கிவந்தால்
அவர்
என் வீட்டு கதவுமுன்னால்
நிற்பார்.
அவர் வந்துவிடுவாரோ
என்று
தினம் தினம் மனதிற்குள்
ஒரு பயம்,
பின்முற்றத்தில் இருக்கும்
கிணற்றில்
நீர் இருக்கிறதா என்று
பார்க்க வந்தாலும்
அவர் என்னைப்பார்த்து
பேசத்தான் வருகிறாரோ
என்று இங்கே படபடக்குது
நெஞ்சம்.
இது இன்றோ நேற்றோ ஆரம்பித்தது
இல்லைதான்..
இருப்பினும் என்றும்
புதியாதாகவே தோன்றுகிறது.
ஒரு முறை கேட்டார் ‘ஏன்
மாடிக்கு நீ வரவில்லை’ என்று,
பதில் சொல்ல முடியாமல்
தடுமாறினேன்.
‘சரி எப்பத்தான் தருவாய்’ என மீண்டும் கேட்டார்,
சொல்வதற்கு பதில் இல்லை.
இருப்பினும் ஒரு தைரியம்..
மௌனமாக நின்றால் அவர்
வேறு
ஏதாவது கேட்டுவிடுவாரோ
என்பதால்
‘அடுத்தவாரம் தருகிறேன்’ என்றேன்.
‘எப்பொழுதும் இப்படித்தான்’
‘இனி என்னால் பொறுக்க முடியாது’
என்று சலித்துக்கொண்டே
சென்று விட்டார்.
நாட்கள் சென்றது..
அடுத்த வாரமும் அதற்கு
அடுத்த வாரமும் வந்தது..
உள்ளுக்குள் பயமும்
பதட்டமும் தீயாய் பரவியது..
மீண்டும் வருவாரோ
என மனம் படபடத்தது..
அத்தோடு தவிப்பு> இயலாமை>
அதனால் வந்த தொய்வும்
வந்த்து.
இன்று ஒரு முடிவுடன்
பெருமூச்சை இழுத்து
விட்டு
மாடிப்படிகளில் ஏறினேன்,
கதவு முன் சென்று நின்றேன்.
ஒரு நிமிடம் மறுயோசனை..
நான் செய்வது சரிதானா
என்று,
வேறுவழியில்லை..
அவர் மீண்டும் என் வீட்டுக்கு
முன் வருதை விட
நான் அவர் வீட்டுக்கு
உள்ளே செல்வதே மேல்.
அழைப்பு மணியை அழுத்தினேன்..
காத்திருந்தேன்.
அவர் வந்து கதவை திறந்தார்,
அவர் எதையோ கேட்க ஆரம்பிக்கும்
முன்னே
பதட்டத்தால் என் நாக்கு
அதிவேகமாக துடிக்க
வார்த்தைகள் கொட்டியது.
போசியது எவ்வளவு என்று
ஞாபகம் இல்லை,
ஆனால் சொன்ன கருத்து
இதுதான்!
‘என்னால் முடியவில்லை
இன்னும் ஒருவாரம் காத்திருங்கள்’
என்னுடைய நிலமையை புரிந்தகொண்ட
நல்ல குணம் படைத்த அவர்
புன்னகைத்தார்.
‘அடுத்தவாரம் என்றால்’
என்று என் முகத்தை பார்த்தார்..
‘அடுத்த சனிக்கிழமை’
என்று பார்வையை பார்க்காமல்
தவிர்த்தேன்.
‘கண்டிப்பாக சனிக்கிழமை தருவாயா’..
‘நிச்சயமாக தருகிறேன்’..
வழக்கம்போல அவர் சம்மதித்தார்.
என் முகத்தை பார்த்து
பாவம்
அவரும் வேறு என்னதான்
செய்வார்!
‘காத்திருப்பேன்’ என்றார்..
‘சரி’ என மெல்ல திரும்பினேன்.
மாடிப்படிகள் இறங்குபோது
என் மனதில் இருந்த பாரமும்
இறங்க ஆரம்பித்ததை உணர்ந்தேன்.
ஓ.. என்ன ஒரு திருப்தி!
என்ன ஒரு சாதனை!
உலகையோ வெற்றிகொண்டதுபோல்
ஒரு சந்தோஷம்!
பலமுறையாக இதை தொடருகிறேன்..
காரணம் எனக்கு வேறு
வழியில்லை.
எப்பதான் இதற்கு ஒரு
தீர்வு கிடைக்கும்
என்று தெரியவில்லை.
‘சே.. இது என்ன ஒரு வாழ்க்கை’..
மனம் என்னை திட்டிதீர்த்தது.
“அடக்கடவுளே..”
“நீ ஏன் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறாய்?
இதை பார்க்க பார்க்க
உனக்கு வெறுப்பு வரலியா”
“திரும்ப திரும்ப ஒரே ‘டயலாக்’
பேசுவதை கேட்டு ‘போரடிக்கலையா’..”
ஒவ்வொரு மாதமும்
முதல் தேதியிலிருந்து
பத்தாம் தேதிவரை
இதே படபடப்பு
பத்தாம்தேதி முதல் இருபதாம்
தேதிவரை
இதற்காக மனதிற்கு பிடிக்காத
வேலைகளையும்
செய்து
சம்பாதித்து
இருபத்தைந்தாம் தேதி
என்னிடம் வீட்டை வாடகைக்கு
விட்டு
அதை வசூலிக்க வரும்
‘அவரிடம்’
கொடுத்துவிட்டு பெருமூச்சு
விட..
அடுத்தமாதம் முதல் தேதி
காலண்டரில் இருந்து
இறங்கி வந்து
என் முகத்தை கிழிக்கிறது
தினமும் நான் கிழிப்பதை
சுட்டிக்காட்டி
என்னை பழிவாங்கியபடி..
ஏழையாய் நகருக்கு வந்ததால்
இதை மறுக்கவும் முடியவில்லை
நடுத்தரமாய் வாழ்ந்ததால்
இதை தவிர்க்கவும் முடியவில்லை
வாழும் பாதையை மாற்றவும்
வக்கில்லை
வேண்டியபடி ஈட்ட வழியும்
இல்லை
திரைத்துறையில் வெற்றிபெறவேண்டும்
என்ற ஒரே லட்சியத்துடன்
பயணிப்பதால்
பலநேரங்களில்
தன்மானம்,
மரியாதை,
கௌரவம்
போன்றவை மறந்தே போய்விட்டது
இவை எல்லாம் நான் எழுதும்
திரைக்கதைகளில் வரும்
நாயகர்களுக்கு மட்டுமாய்
விட்டுக்கொடுத்து விட்டேன்
எனக்குதான் இப்படி என்றால்
“அடக்கடவுளே..”
“உனக்கும் சூடு சொரணை கிடையாதா…”
“ஒன்று என்னை
நான் விரும்பியபடி வாழவிடு”
“இல்லையேல்
குறைந்தபட்சம்
இந்த பாதகத்தை பாதியாக்கிட>
வருடத்திற்கு
மாதங்கள் ஆறு
என மாற்றிவிடு.”
No comments:
Post a Comment
Let others know your opinions about this post