Monday, 2 June 2014

படத்தின் தரமும் தயாரிப்பாளரும்


திரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உருவாக்கி ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் தயாரிப்பாளரும்.
திரைப்படத்தின் தரத்தை நிர்ணயிப்பதில் மொத்த பொறுப்பும் உண்மையில் தயாரிப்பாளரையே சாரும். இந்த கதையைத்தான் (அது உலகத்துக்கு தெரிஞ்ச புராணமாக இருக்கட்டும் அல்லது புதுமையான ஒரு சமூக கருத்தாக இருக்கட்டும்) படமாக்கவேண்டும் என்று முடிவு செய்தபின் இந்த கதையை இவர் திரைப்படத்திற்கு ஏற்றாற்போல் திரைக்கதை அமைப்பார், இவர் இதை அதற்கேற்று காட்சி நெறிப்படுத்துவார் என்று எழுத்தாளரையும் இயக்குநரையும் ஒரு தயாரிப்பாளர் முடிவு செய்தால் அங்கேயே, அந்த நொடியிலேயே படத்தின் தரம் ஏறக்குறைய நிர்ணயமாகிவிடும். பாதி வெற்றியும் முடிவாகிவிடும்.
பிறகு அதை செயல்படுத்துவதற்கான சூழ்நிலையையும் தொழில்நுட்ப உதவிகளையும் ஆள்பலத்தையும் தகுந்த நேரத்தில் தகுந்த முறையில் ஒரு தயாரிப்பாளர் அளித்தார் என்றால் படத்தின் தரம் எதிர்பார்த்ததை விட குறைய வழியே இல்லை. அதுதான் தயாரிப்பாளரின் கடமையும் கூட.
இந்த கடமையை செய்யாமல் இயக்குநர் எல்லாவற்றையும் பார்க்கட்டும் என்று விடுவதால் திரைப்படத்தின் மீதுள்ள முழு ஆதிக்கமும் தயாரிப்பாளரை விட்டுச் செல்கிறது. இதுதான் காலம் நமக்கு சொன்ன பாடம்.
திரைக்கதை எழுத்தாளர் கற்பனையில் அனைத்தையும் ஒருங்கிணைப்பார். அவர்தான் படத்தின் வெற்றிக்கு அஸ்திவாரம். அந்த அஸ்திவாரத்தில் கட்டப்படும் கட்டிடத்தை வடிவமைத்து கட்டுவார் இயக்குநர். ஆனால் அந்த கட்டிடத்திற்கு உரிமை யாளர் தயாரிப்பாளர்தான்.

ஆகையினால் எந்தமாதிரி கட்டிடம் கட்டப்படவேண்டும் அந்த கட்டிடத்திற்காக எந்த அளவு செலவு செய்யவேண்டும், அதை எப்படி பயன்படுத்தப்போகிறோம் என்பதெல்லாம் தயாரிப்பாளரின் எண்ணப்படிதான் நடக்கும். மொத்தத்தில் கட்டிடத்தின் மதிப்பு போல படத்தின் தரமும் தயாரிப்பாளரின் முடிவுகளுக்கு ஏற்பத்தான் இருக்கும்.

No comments:

Post a Comment

Let others know your opinions about this post