Wednesday, 7 May 2014

முகவுரை



திரைத்துறையில் வெற்றிபெற வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வந்த லட்சக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன். அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளன். திரைக்கதை எழுதுவதுதான் எனக்கு கைவந்த கலை. இருப்பினும் தமிழ் திரையுலகில் எழுத்தாளருக்கு இருக்கும் மரியாதையை அறிந்ததனால் இயக்குநராக எண்ணி அதற்கான பாதையில் பயணத்தை தொடர்ந்தேன்.
கடந்த 18 வருடங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பல இயக்குநர்களிடமும் திரைக்கதை எழுதுவதிலும் இயக்குவதிலும் உதவியாளனாகவும் இணை இயக்குநராகவும் பணிபுரிந்தேன். இடைப்பட்ட நேரங்களில் சென்சார் ஸ்க்ரிப்ட் எழுதுவதில் துவங்கி தயாரிப்பு நிர்வாகிகளின் உதவியாளனாகவும் மொழிபெயர்ப்பாளனாகவும் பல பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டேன்.
அதனால் நான்கு தென்னக மொழிகளிலும் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் திரைக்கதை எழுதவும் படிக்கவும் பேசவும் கற்றுக்கொண்டேன். அத்துடன் இயக்குநராக செய்ய வேண்டிய பணிகளுடன் தயாரிப்பாளர் செய்ய வேண்டிய பணிகளையும் கற்றுக்கொண்டேன். நான் உதவியாளனாக பணியாற்றிய இயக்குநர்கள் அனைவரும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களாக இருந்தது இந்த விஷயத்தில் எனக்கு மிகவும் உதவியாகவும் தூண்டுதலாகவும் இருந்தது.
நான் முதன் முதலில் இயக்குநராக பணியாற்றும் போது அந்த படத்தை தயாரித்து இயக்கவேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தது இந்த அனுபவம் தான். அதனாலேயே இன்னொரு தயாரிப்பாளரிடம் வாய்ப்புத்தேடுவதற்கோ, அதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபடவோ என் மனம் என்னை அனுமதிக்க வில்லை. பல நேரங்களில் சூழ்நிலைகளை எண்ணி பிற தயாரிப் பாளர்களிடம் ஒரு கதையைச்  சொல்லி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற ஆசைப்பட்டதுண்டு. ஆனால் முழு மனதுடன் முயற்சி செய்ய முடியவில்லை. இதற்கு காரணம் திரைப்படத் தயாரிப்பு பற்றி என் மனதில் எழுந்த பல கேள்விகளும் அதற்கு கிடைத்த பதில்களும்தான். அவற்றின் தொகுப்புதான் இந்த தயாரிப்பாளர்கள் கூட்டுத் தயாரிப்பு.
இதைப்பற்றி நான் கற்றுக்கொண்ட, தேடி அறிந்து கொண்ட, செயல்படுத்த திட்டமிட்ட அனைத்தையும் தயாரிப்பாளர்களிடம் சொல்ல விரும்புகிறேன். ஆனால் என் மனதில் தோன்றியவற்றை முழுவதுமாக ஒவ்வொருவரிடமும் சொல்லி புரியவைக்க முடியுமா, அல்லது ஒவ்வொரு முறையும் முழுவதையும் சொல்ல முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. அதனால் சொல்ல வேண்டிய விஷயங்களில் முக்கியமானவற்றை முதலில் சுருக்கமாக தொகுத்து எழுத முடிவு செய்தேன். உண்மையில் இதில் குறிப்பிட்ட எல்லா தலைப்புகள் பற்றியும் தனித்தனியாகவே ஒவ்வொரு புத்தகம் எழுத முடியும். இருப்பினும் முதல் படியாக அனைத்தையும் சுருக்கமாக எழுதுவதுதான் நல்லது என தோன்றியது. அதன் பலன்தான் இந்த புத்தகம்.
இதுவரை என்னுடைய பலம் பற்றி நான் மதிப்பீடு செய்ததில்லை. எனக்கு மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பேசவும் படிக்கவும் எழுதவும் தெரியும். ராக்கெட் வேகத்தில் ஒரு கதையை திரைக்கதையாக மாற்றுவதற்கான வேலைகளை செய்ய முடியும். இந்திய அளவில் சிறந்த பத்து திரைக்கதை எழுத்தாளர்களை பட்டியலிட்டால் அதில் என் பெயரும் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இருந்தும் இதுவரை முழுநேர திரைக்கதை எழுத்தாளராக முயற்சிக்காதது என்னுடைய பலவீனம் தான். ஒரு இயக்குநராக மாறியதற்கு பிறகுதான் முழுநேர எழுத்தாளன் ஆக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் இதற்கு காரணம்.
தற்பொழுது இந்த திட்டத்தின் மூலமாக எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வெற்றி பெற்று மூன்று நிலையிலும் தொடர்ந்து பணியாற்றுவேன் என்பதில் ஐயம் இல்லை.
இதற்கு தேவை உங்கள் அனைவரது ஆசியும் நட்பும். அதைத்தான் நான் உங்களிடமிருந்து உதவியாக வேண்டுகிறேன்.
இந்த புத்தகத்தையே ஒரு சிறு விண்ணப்பமாக ஏற்று, இந்த தயாரிப்பாளர் கூட்டுத் தயாரிப்பில் இணைந்திட, திரைத்துறைக்கு உங்களால் முடிந்த சேவையை புரிய, திரைத்துறையில் நீங்களும் வெற்றிபெற அழைக்கிறேன்.
படத்தயாரிப்பு பற்றி அறிந்துகொள்ள..
நல்ல வெற்றிப்படங்களை தயாரிக்க..
திரைத்துறையில் எதையாவது சாதிக்க.. அல்லது
நல்லதொரு பரிசோதனை முயற்சியில் ஒரு அங்கமாக விரும்பினால் இந்த புத்தகம் நிச்சயமாக உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

No comments:

Post a Comment

Let others know your opinions about this post