Monday, 14 October 2013

காரல் மார்க்சின் கவிதைகள் -1


காரல் மார்க்சுக்கு ஒரு காணிக்கை
(காரல் மார்க்சின் கவிதைகளை மொழி பெயர்த்து தருவதற்கு முன்னால் என்னுடைய முன்னுரை)


எங்கள் கிராமத்து முக்கியசாலையின்
ஓரத்தில் நாட்டியிருந்த தொழிலாளர்
சங்க அறிவிப்பு பலகையின்
முகப்பிலும் உன் தாடிவைத்த
முகத்தை காணலாம்.

படிப்பறிவில்லாத தொழிலாளியை
கேட்டாலும் தன்னுடைய வர்க்கத்திற்கு
வழிகாட்டிய மேதை என்றுன்னை
மரியாதையுடன் போற்றுவார்கள்.

அகில உலக தொழிலாளிகளுக்கு
ஒற்றுமையை கற்றுக்கொடுத்து
பலநாடுகளில் அரசியல் சுழற்சியை
மாற்றியமைக்க விதைகளை போட்டவன் நீ.

உருவத்தைக் கண்டாலே ஒரு தத்துவ
ஞானியாய் தோன்றும் உன் தத்துவத்தை
படித்ததால் மாபெரும் மேதையாக 
மாறியவர்கள், பின்பற்றி சென்றதனால்
தலைவராக ஏற்கப்பட்டவர்கள் ஏராளம் ஏராளம்.

உந்தன் பாதையில் மாற்றத்திற்காக
போராடியவர்கள் உலகில் பலதிசைகளில்
பல போ; என்றால், உலகில் அந்த
மாற்றத்தை எடுத்துச்சொல்ல
நீ கொண்டவாழ்க்கையே ஒரு போராட்டம்.

அந்நாட்களில் யாருக்கும் புரியாத,
அறவே பிடிக்காத, பிந்நாட்களில்
எல்லோரும் அறிந்திட, ஆழமாய் சிந்திக்க,
முதலாளிகளின் மூலதனத்திற்கு
இணையான மதிப்பை பெற்றுத்தரும்
மூலதனத்தை, உலகில் உழைக்கும்
வர்க்கத்திற்கு வழங்கிய சிந்தனை வள்ளல் நீ.

தத்துவங்களை தெளிவுபடுத்திய மாமேதை,
தலைவர்களை உருவாக்கிய சாணக்கியன்,
ஏழைகளை புரிந்துகொண்ட அறிஞன்,
சமத்துவத்திற்கு வித்திட்ட விவசாயி.
இவையெல்லாம் ஊர்கண்ட உன் முகங்கள்.

உலகிற்காக படிக்க, உழைப்பவர்களுக்காக எழுத,
வாழ்க்கையில் பாதியை நூலக படிப்பறையிலும்,
மறுபாதியை தனிமை ஏழை எழுத்தறையிலும்,
மிச்சத்தை நண்பா; ஏங்கல்சிடமும் கழித்துவிட்ட
உன்னையும் உன் குடும்பத்தையும் காத்திட
ஜென்னியை துணையாய் பெற்ற நீ பாக்கியசாலி.

உலகத்திற்கே மூலதனம் தந்த உனக்கு மூலதனமாய்,
உன் முயற்சியின் அர்த்தத்தை புரிந்து உறுதுணையாய்,
உன்னருகில் என்றும் அவள் நின்றதால் தடையின்றி
உன் பாதை கண்ட எல்லோரும் பாக்கியசாலிகள்.

அதனால் இவ்வுலகம் உனக்கு மட்டுமல்ல
உன் துணைவிக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
வறுமையிலும் வேதனையிலும் ஒன்றுபட்டு உண்மை
தம்பதிக்களுக்கு எடுத்துக்காட்டாய் இருந்த உங்கள்
வாழ்க்கை அந்த மூலதனத்தைவிட வியப்பானது.

நீங்கள் வாழ்ந்தது பலமாக தும்மினால்
விவாகரத்து செய்யும் மேற்கத்திய
கலாச்சாரம் பரவிய நாட்டில் என்பதை
நினைக்கும் போது இரட்டிக்கிறது வியப்பு.
எங்கள் நாட்டில் வள்ளுவனும் வாசுகியும் போல
வாழ மணமக்களை வாழ்த்துவார்கள்.

அவர்களை போல வாழ்ந்து குறளைப் போல
மூலதனம் தந்து அவ்வாழ்த்தை நிருபித்த
உங்கள் காதலே நிஜக்காதல்,
கல்யாணவாழ்க்கையே சொர்க்கம்,
உங்களுக்காக நீங்கள் எழதிய
சொந்த கடிதங்களில் தெரியும்
காதலே காதல், அழகே அழகு.
                                               

                                                -- கமலாபாலா

No comments:

Post a Comment

Let others know your opinions about this post