மனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. ..
கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி
இப்படி ஒரு கருத்தை பதிவு செய்ய நினைத்தபோது ”புத்தகங்களுக்கு விமர்சனம் எழுதும்போது
புத்தகவிழாக்களுக்கு விமர்சனம் எழுதக்கூடாதா” என்று இயக்குநர் தாமிரா முகநூலில் எழுதிய
கருத்து ஞாபகத்துக்கு வந்தது. இருந்தும் ஒரு
தயக்கம்! என்னுடைய மனதில் பட்டதை எழுதலாமா வேண்டாமா என்று மூன்று நாட்களாக யோசித்தேன்.
பல நாட்களாக எழுதாமல் இருந்த நான் கடந்த சில நாட்களாகத்தான் மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
இந்த வேளையில் இதைப்பற்றி எழுதுவது தவறா அல்லது மனதில் தோன்றியதை எழுதாமல் விடுவது
தவறா என்று ஒரு குழப்பம். கடைசியாக எழுதிவிடுவோம் என்று ஒரு முடிவுக்கு வந்ததின் பலன்தான்
இந்த பதிவு.
உயிர்மையும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய சுஜாதாவிருதுகள் வழங்கிய
விழாவைப்பற்றியோ அல்லது அதற்கான புத்தகங்களின் தேர்வு பற்றியோ நான் எந்த மாற்றுக்கருத்தும்
சொல்ல விரும்பவில்லை. உண்மையிலேயே இது ஒரு சிறந்த நிகழ்வுதான். வருடாவருடம் இதை தொடர்ந்து
நடத்திவரும் திரு மனுஷ்யபுத்ரன் அவர்களை இதற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
விழாவில் அஜயன் பாலாவில் ஆரம்பித்து பாரதி கிருஷ்ணகுமார் வரையில் பேசிய
எல்லோருமே அருமையாகவே பேசினார்கள். எல்லாம் வழக்கமானதாகவே இருந்தது. விழாவை தொகுத்தவரின்
கேள்விகள் உட்பட!
ஆனால் இயக்குநர் ராம் பேசும்பொழுது உலகில் நாம் காணும் சாதாரண மனிதர்களைப்பற்றி
இலக்கியங்களைவிட தமிழ் திரைப்படங்கள் நன்றாகவே அல்லது கூடுதலாகவே எடுத்துச் சொல்லிவருகிறது
என்று குறிப்பிட்டார். அதில் எந்த தவறும் இருப்பதாக யாருக்கும் தோன்றவில்லை. அரங்கம்
அதிர்ந்த கரவொலிகள் அதற்கு சாட்சி. இன்னும் சொல்லப்போனால் திரு வி.சேகர் போன்ற இயக்குநர்களின்
படங்களை இந்த கோணத்தில் பார்க்கவும் அதைப்பற்றி பலரையும் யோசிக்கவைக்கவும் செய்தது
அவருடைய பேச்சு.
திரு ராம் குறிப்பிட்டது போலவே இலக்கியத்தைவிட திரைப்படங்கள் யதார்த்த
மனிதவாழ்க்கையை எடுத்துச் சொல்கிறதா இல்லையா என்பது வேறுவிஷயம். ஆனால் ராம் அப்படி
குறிப்பிட்டது தவறு என்று யாரும் மறுக்க முடியாது. ஏனென்றால் அது அவருடைய பார்வை. அல்லது
அந்த நேரத்தில் அப்படி பேசுவது நல்லது என்ற அவருடைய எண்ணமாக கூட இருந்திருக்கலாம்.
அதற்காக (அங்கேயே திரு பாரதிகிருஷ்ணகுமார் குறிப்பிட்டதுபோல) வாய்ப்பு
கிடைத்ததும் பட்டிமன்றம் நடத்த வேண்டிய அவசியம் இருக்கிறதா?
ராம் பேசி முடித்த உடனேயே மனுஷ்யபுத்ரன் அவருடைய கருத்துக்கு மறுப்பு சொன்னார்.
தி.ஜா. போன்றோரின் எழுத்துக்களை சுட்டிக்காட்டி ராம் சொன்னது தவறு என்று ஆவேசமாக எடுத்துரைத்தார்.
அதற்கும் அரங்கம் நிறைந்த கரவொலிகள்! என்ன பேசினால் கைதட்டுவது என்றில்லாமல் யார் நன்றாக
பேசினாலும் கைதட்டுவது நம் வழக்கம். (இதை நம்பித்தான் தமிழ் பட்டிமன்ற பேச்சாளர்கள்
பிரகாசமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பது தமிழுக்கே உரித்தான இன்னொரு சிறப்பு)
திரைஉலகில் இலக்கியவாதிகளுக்கு நல்ல மரியாதை இருக்கிறது என்று ராம் சொன்ன
இன்னொரு கருத்துக்கு அஜயன் பாலா உடனே மறுப்பு தெரிவித்தார். (சினிமாவில் வாய்ப்பு தேடும்
ஒரு எழுத்தாளரின் உண்மையான ஆதங்கம் தான் அது). அதைப்பற்றி கூடுதலாக எதுவும் பேசுவதற்கில்லை.
ஆனால் மனுஷ்யபுத்ரன் பேசியதுதான் என்னை ரொம்பவும் யோசிக்கவைத்தது. ஒரு விழாவை நடத்துபவர், மற்றவர்களின் கருத்துக்களுக்கு
மதிப்பு கொடுக்கவேண்டும் என்றும் அவர்களுடைய கருத்துக்களை அவர்களுடைய கோணத்தில் பார்க்க
வேண்டும் என்றும் பேசிப்பேசியே தொலைக்காட்சிகளில்
புகழ்பெற்ற, புகழ்பெற்றுக்கொண்டிருக்கும் மனுஷ்யபுத்ரன் தன்னுடைய விழாவிலேயே மற்றவர்களுடைய
கருத்துக்களுக்கு எதிர்கருத்து சொல்லவேண்டுமா. (ஒரு வேளை தன்னுடைய கருத்துக்கு யாராவது மறுப்பு சொல்லும்போது மட்டும்
தான் மாற்றுக்கருத்துக்கு இடம் இருக்கிறதோ!)
இலக்கியத்தைவிட திரைப்படங்களில் சாதாரணமனிதர்களின் வாழ்க்கை காட்டப்படுகிறது
என்பதை ராமின் கருத்தாக பார்த்திருக்கலாமே. அவருடைய கோணத்தில் அதைப்பற்றி யோசித்திருக்கலாமே.
தவறாக இருந்தால் தனியாக ராமை அழைத்து பேசியிருக்கலாமே.
இல்லை எல்லோருக்கும் தெரியும்படி எழுதியிருக்கலாமே. (அதுக்குதானே முகநூல் போன்ற தளங்கள்
பயன்பட்டுவருகிறது.)
அதைவிட்டுவிட்டு அவர் பேசிமுடித்த உடனேயே அவர் ஏதோ மகாபாவம் செயததைப்போல,
அதை உடனே திருத்தியே ஆகவேண்டும் என்ற பொறுப்பை ஏற்றிருப்பவர் போல மறுப்பு சொல்லவேண்டிய
அவசியம் என்ன? ஏற்கனவே புத்தக வெளியீட்டுவிழா, விமர்சனக்கூட்டம், பாராட்டுவிழா போன்றவை
ஒரேபோல் இருக்கிறதே என்று என்னைப்போன்றவர்கள் குழம்பி இருக்கிறோம். இதற்கு மத்தியில்
விருதுவழங்கும் விழாவையும் கலந்துரையாடல்கூட்டமாக மாற்ற வேண்டுமா?
தொலைக்காட்சிகளில் விவாதங்களில் பங்கு பெறுபர்கள் யார் எதை சொன்னாலும்
உடனே அவற்றிற்கு மறுப்பு சொல்லுவது வழக்கம். அப்படிப்பட்ட விவாதங்களில் அதிகமாக பேசிப்பேசி
மனுஷ்யபுத்ரனுக்கு அது பழக்கமாகிவிட்டது போல் இருக்கிறது. அதனால் தான் அதேபோல இங்கேயும்
பேசுகிறார் என்று நினைக்கிறேன்.
தயவுசெய்து தொலைக்காட்சி விவாதங்களையும் புத்தகவிழாக்களையும் போட்டு குழப்பாதீர்கள்.
இது என்னுடைய கருத்து. இது சரியெனப்பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில் இது “அவருடைய
கருத்து“ என்று விட்டுவிடுங்கள். இல்லாவிட்டால் அடுத்து நீங்கள் நடத்தும் கூட்டத்தில்
நீங்கள் பேசி முடித்ததும் (எதைப்பற்றி, என்னதான் பேசினாலும்) உடனே மறுப்பு சொல்வதற்கு
பலரும் முன்வருவார்கள்.
பேசத்தெரியாத்தால் அல்லது பேசக்கூடாது என்பதால் நான் இங்கே வந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.
ஆனால் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று சிலர் இருக்கிறார்கள். அதை மறந்துவிடவேண்டாம்.
இது ஒரு நண்பனின் அன்பான அறிவுரை.
-
விஜயன் (கமலபாலா)
நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு. (திருவள்ளுவர்)
மகிழும் பொருட்டல்ல நட்பு தவறினை
முன்சென்று கண்டித்தல் பொருட்டு. (என்னுடைய உரை)
sirappu
ReplyDelete