“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி” என்று புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் கூறுகிறார். தொல்காப்பியர் தம் நூலில் என்மனார் புலவர், யாப்பறி புலவர், நூல் நவில் புலவர், தொன்மொழி புலவர் என்றெல்லாம் தமக்குமுன் வாழ்ந்த தமிழ் அறிஞர்களைச் சுட்டுகிறார். தொல்காப்பியரின் காலத்தைப் பற்றிய ஆராய்ச்சி இன்றளவும் தொடர்ந்து கொண்டே உள்ள நிலையில் அவருக்கு முன் வாழ்ந்த அறிஞர்களைச் சுட்டுவதன் வாயிலாக செம்மாந்த இலக்கிய வளத்துடன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழி விளங்கியதை உணரமுடியும். அத்தைகைய சிறப்புமிகு தமிழ்மொழிக்கு உலக அரங்கில் கூடுதல் சிறப்பைப் பெற்றுத் தருவது திருக்குறள்!
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய கீழ்க்கணக்கு
நூல்களில் பதினொரு நூல்கள் நீதிநூல்கள் ஆகும். இந்த நீதிநூல்களுக் கெல்லாம் முன்னோடி
நூலாக விளங்குவது திருக்குறள் ஆகும். எந்தச்சமயத்தையும் சாராத திருக்குறள் உலகப்பொதுமறையாக
விளங்குகிறது. திருக்குறளின் பழைய உரையாசிரியர்களாக ஐவரைக் குறிப்பிடுவர். உலகளவில்
திருவிவிலியத்திற்கு அடுத்தளவில் அதிக மொழிகளில் பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள் ஆகும்.
இலத்தீன் - வீரமாமுனிவர்
ஜெர்மன் - டாக்டர் கிரால்
பிரெஞ்சு - ஏரியல்
உருசியா - யுரிய் ரில் சோவ்
இந்தி - அப்பா தீட்சிதர்
ஆங்கிலம் - ஜி.யு.போப், வ.வே.சு.ஐயர்,
தீட்சிதர்,
இராசாசி
போன்றோர்.
ஆங்கிலத்தில் சுமார் 36 மொழிபெயர்ப்புகள் காணப்படுகின்றன.
இவற்றுடன் இந்நூலின் உரையாசிரியர் கமலாபாலாவின் உரைநடையும் இணைகிறது. “உரைநடை
என்பது இலக்கிய மரபு கெடாத நல்லநடையில் ஆழ்ந்த கருத்தோடு பாட்டிற்குள்ள சந்த சேர்க்கை
இல்லாது நல்ல ஓசை நயம் உடையதாகி ஒளிவுமறைவின்றி உள்ளதை உள்ளபடி உரையிட்டுக் காட்டும்
வகையில் நேரிமுறையில் கருத்திற்கும் காரணத்திற்கும் பொருத்தமானதாக ஒன்றனைப்
பற்றியோ அல்லது ஒருவரைப்பற்றியோ விளக்கி உரைப்பதாகும்” என பிரிட்டன்
கலைக்களஞ்சியம் உரைநடைக்கு விளக்கம் தருகிறது.
உரையாசிரியர் கமலாபாலா உரை எழுதுவதில் புதிய உத்திமுறையைக்
கையாண்டுள்ளார். ஏழுசீர் கொண்ட குறளுக்கு ஏழு சீரில் உரைசொல்லும்
பாங்கு உரைநடை வரலாற்றில் புதிய பதிவு. உள்ளடக்கத்தில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் முடிந்தவரை
சாமானியரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கம் தருகிறார். குறளின் இசை நடையிலேயே
எதுகை மோனையுடன் விளக்குவது நூலுக்கு அணிசேர்க்கிறது.
“துப்பார்க்குத்
துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை”
எனும்
குறளுக்கு
“உண்போர்க்கு
உணவாகி உழுவோர்க்கும் உணவுக்கும்
உணவாக இருப்பது மழை”
- என
உரை எழுதுகிறார். இந்நூலின் முழுமையும் உரையாசிரியரின் கவித்துவம்
மேலோங்கி நிற்கிறது. உரையாசிரியரின் கற்பனையும் கவித்திறனும் இரண்டறக்கலந்து
இசை நயத்தில் உரை வெளிப்படுகிறது.
“அடக்கம்
அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்”
எனும்
குறளுக்கு
“அடக்கம்
தேவருள் உயர்த்தும் அடங்காமை
வாழ்வில் இருள்தீ செலுத்தும்” என உரைவிளக்கம் தருகிறார்.
“பழையன
கழிதலும் புதியன புகுதலும்
வழுவல்ல கால வகையினானே”
என்ற
நன்னூலாரின் கூற்றிற்கேற்ப உரையாசிரியர் கமலாபாலாவின்
திருக்குறள் உரை அமைகிறது. பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்காக
எளிய முறையில் உரையைக் கையாண்டுள்ளார். உரைநடை என்பது வசனநடையில் அனைவருக்கும் எளிதில்
புரியும்படி
இருக்கவேண்டும் என்பது சிலர் கூற்று. உரையாசிரியர் கமலாபாலா தன்
கவித்துவத்துடன் கூடிய உரையைக் கொடுத்திருப்பதுத் தமிழ்கூறும் நல்லுலகின் உரைநடை வரலாற்றில்
புதியதொரு மைல்கல். திரைப்படத்துறையில் இயங்கிவரும் உரையாசிரியர் மென்மேலும்
இக்களத்தில் தொடர்ந்து இயங்கி புதியதொரு தடத்தைப் புவியினில் பதிப்பார் என நம்புகிறேன்.
- முனைவர்
அ.ஆரோக்கியதாசு
(முதநிலை
ஆய்வாளர்,
செம்மொழித்தமிழாய்வு
மத்திய
நிறுவனம், சென்னை)
No comments:
Post a Comment
Let others know your opinions about this post